மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்திட்டத்தின்படி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் அக்டோபர் மாதத் தொடக்கத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 6 நாட்களுக்கு தொடர் நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த வாரம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பான நிகழ்ச்சி நிரலையும் அவர் வெளியிட்டிருந்தார். அதன்படி, அக்டோபர் 1 ஆம் தேதி அனைத்து அமைப்பு மாவட்டங்களிலும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தை மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தக் கூட்டத்தில் அடுத்து வரும் 5 நாட்களுக்கான நிகழ்ச்சிகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மிக முக்கியமாக வாக்குச்சாவடி களப்பணியாளர் நியமனம், களப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணித்திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளும், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
அக்டோபர் 2 ஆம் தேதி அனைத்து கிராமங்கள், நகரங்கள் மற்றும் பேரூர்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அக்டோபர் 3ஆம் தேதி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். கிராம அளவிலான கட்சிக் கூட்டங்கள் அக்டோபர் 4ஆம் நாள் நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தில் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவரவர் கிராமங்களில் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும்.
அக்டோபர் 5 ஆம் நாள் அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் அளவில் இருசக்கர ஊர்தி பேரணிகள், அக்டோபர் 8 ஆம் நாள் ஒன்றிய, நகர, பேரூர் அளவிலான கூட்டங்கள் அனைத்துக் கூட்டங்களிலும் மக்களவைத் தேர்தலுக்கான செயல் திட்டங்கள் விவாதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்ட கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் விவரங்கள், அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் ” என்று உத்தரவிட்டிருந்தார் டாக்டர் ராமதாஸ். இதன்படியே வட மாவட்டங்களில் வலுவாகவும் மற்ற மாவட்டங்களில் பரவலாகவும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சொன்னதுபோல நிகழ்ச்சிகள் நடந்ததா என்று தனது சமூக தளப் பக்கத்தில் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார் டாக்டர் ராமதாஸ். அதற்கு கமெண்ட் பகுதியில் தங்களது மாவட்டங்களில் நடந்த பொதுக்குழு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பற்றி பதில் பதிவிட்டு வருகிறார்கள் பாமகவினர்.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 5), அனைத்து மாவட்டங்களிலும் 9-ஆம் தேதி மாவட்ட செயற்குழு நடத்தப்பட வேண்டும் என்று புதிய உத்தரவிட்டுள்ளார் டாக்டர்.
“பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை தொடர் பணித்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதை பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். அவற்றின் தொடர்ச்சியாக அக்டோபர் 9-ஆம் நாள் மாவட்ட செயற்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதில் 1-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் சரி செய்யப்பட வேண்டும். அனைத்து நிகழ்வுகள் குறித்த அறிக்கையும் கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் இன்றைய தேர்தல் கள அரசியல்தலைவர்களிலேயே வயதில் மூத்தவர் டாக்டர் ராமதாஸ்தான். அவர் சோஷியல் மீடியா மூலம் உரையாடி வருவது ஆச்சரியமும் உற்சாகமும் அளிக்கிறது என்கிறார்கள் பாமகவினர்.
–வேந்தன்