பாஜகவை காட்டி பயமுறுத்தக் கூடாது: தொனி மாறும் தினகரன்

அரசியல்

 ஆளுங்கட்சியான திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், மின்கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வைக் கண்டித்தும் தமிழகம் முழுதும் இன்று (அக்டோபர் 12) அமமுக ஆர்பாட்டம் நடத்தியிருக்கிறது. அந்த வகையில் சென்னையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்பாட்டம் நடந்தது.

இந்த  ஆர்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், தான் மெல்ல மெல்ல பாஜக பக்கம் சாயத் தொடங்குவதற்கான சிக்னல்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆர்பாட்டத்தில் பேசிய டிடிவி தினகரன்,  “திமுக என்றாலே தீய சக்தி என்று புரட்சி தலைவர்  சொல்லியிருக்கிறார். வார்த்தை ஜாலம் காட்டுபவர்கள்.  புதிதாக மதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். தனது நீண்ட நாள் கனவான முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும் என்பதற்காக மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு இன்று தள்ளாடி கொண்டிருக்கிறார் ஸடாலின். பொதுக்குழுவில் பேசும் போது தூக்கம் வராமல் தவிக்கிறேன் என்று பேசுகிறார்.

அம்மா இருந்தால் அமைச்சர்களுக்கு தூக்கம் வருமா? ஏதாவது  அத்துமீறலில் ஈடுபட்டால் அடுத்த நாள் காலையிலேயே அந்த அமைச்சரின் பதவி பறிபோய்விடும். இப்படி கெடுபிடியாக இருந்ததால்தான்  அவரது திட்டங்களை இன்று உலகம் பாராட்டுகிறது.

அதே சமயத்தில் தொண்டரையும் சமமாக பார்த்தவர் அம்மா. அதனால்தான் எடப்பாடி பழனிசாமி தொண்டர்கூட முதல்வராக வரலாம் என்று கூறி வருகிறார். அம்மா அவர்கள்  ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் போல அன்புடனும், கண்டிப்புடனும் இருந்தார்.

திமுகவில் திணிக்கப்பட்ட தலைவர் இருப்பதால் தான் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை திமுக கட்சியினர் யாரையும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அமைச்சர் பொன்முடி தெலுங்கு பட வில்லன் போல பேசுகிறார். அவர் போகும் கார், வீடு எல்லாமே ஓசிதான். ஆனால் ஆணவத்தால் எஜமானர்களாகிய மக்களை ஓசி என கூறுகிறார்” என்று கடுமையாக விமர்சித்தார். 

 “நான் யாருக்கும் வக்காலத்து வாங்கி பேசலை…  மதச் சார்பற்றவர்கள்னா எந்த மதத்துக்கும் சார்பா இருக்க கூடாது.  இந்து முஸ்லிம், கிறிஸ்துவம் எந்த மதத்துக்கு பாதிப்பு வந்தாலும் தோளோடு தோளாக நின்று போராடுபவர்கள்தான் அரசியல்வாதிகள். தனது விருப்பு வெறுப்புக்காக செயல்பட  கூடாது. 

ஆனால் சமீப காலமாக இந்துக்களைத் திட்டினால் மைனாரிட்டி  வாக்குகள் கிடைச்சிடும்னு நம்பி சில பேர் பேசிக்கிட்டிருக்காங்க.  இருபதாண்டுக்கு மேல சிறையில் இருக்கும் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்வோம்னு சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசு முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை ஆக முடியாதபடிக்கு அரசாணை போட்டிருக்கிறது. இனியும் நீங்கள் மைனாரிட்டிகளை ஏமாற்ற முடியாது. 

சிறுபான்மை மக்களை பிஜேபிய காமிச்சு பயமுறுத்தினாங்க. நான் சப்போர்ட் பண்ணி பேசலை. பிஜேபி வந்து ஏழெட்டு வருசம் ஆச்சு… என்ன பண்ணிட்டாங்க நம்மளை?  எஸ்டிபிஐ நம்ம கூட்டணிக் கட்சிதான். அவங்க அங்கீகாரத்தை தடை பண்ண மாட்டோம்னு தேர்தல் ஆணையமே சொல்லிடுச்சே, நான் யாருக்கும் வக்காலத்து வாங்கி பேசலை. எதார்த்த உண்மையை பேசுறேன். கூட்டணி பற்றி தேர்தல் நேரத்துல பேசிக்கலாம்.

நாம் திமுக போல தொடை நடுங்கிகள் கிடையாது.  சனாதனம்,  ராஜராஜ சோழன் இந்துவா என்றெல்லாம்  பேசிக்கிட்டிருக்காங்க. இந்துக்கள் ஒண்ணா இணைய மாட்டாங்கனு நினைச்சிட்டாங்க. ஒண்ணா இணைஞ்சா இவங்களுக்குத்தான் ஆபத்து.  சமூக நீதினு சொல்லிட்டு பட்டியலின மக்கள எப்படியெல்லாம் அவமதிக்கிறாங்க?  

அதையெல்லாம்  எதிர்த்து திருமாவளவன்  பேசறதில்லை. திமுக ஒரு பொய் பித்தலாட்ட கட்சி. மக்களை ஏமாத்தி ஆட்சிக்கு வந்துட்டாங்க.  எப்ப வேணும்னாலும் திமுக ஆட்சியின் ஆயுட்காலம் முடிவுக்கு வரலாம். அதன் அறிகுறிதான்  பொதுக்குழுவுலயே பயந்து புலம்புறாரு முதல்வர் ஸ்டாலின்.

இதையெல்லாம் நாம கேட்டா உனக்கு விமர்சிக்க தகுதி இல்லைம்ப்பாங்க.  உங்களை விமர்சிக்க என்ன தகுதி வேணுமனு சொன்னாங்கன்னா  அறிவாலயத்துல வந்து நீட் மாதிரி பரீட்சை எழுதி பாஸ் பண்ணனுமா? இந்த ஆட்சி மக்களால் விரட்டப்படப் போகிற ஆட்சி” என்று பேசினார் தினகரன்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “அமமுக என்பது தனிக் கட்சி. இனி இதை அதிமுகவுடன் இணைக்க முடியாது. வேண்டுமென்றால் திமுகவைத் தோற்கடிக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்கத் தயார்” என்று தெரிவித்தார்.

வேந்தன், பிரியா

கமிஷன் வாங்கும் கமிஷனர்: திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு!

அண்ணாமலை ஆடு மேய்க்க தான் போகணும்: மநீம கண்டனம்!

+1
0
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “பாஜகவை காட்டி பயமுறுத்தக் கூடாது: தொனி மாறும் தினகரன்

  1. யோ, பிஜேபி ஆளும் மாநிலத்தில் என்ன இன்னமும் நடக்கணும்?8 வருடத்தில் சிறுபான்மை மக்கள் அவதிப்படுவதை சாதாரண மக்களிடம் கேளு.. தண்ணீ போட்டு பேசாதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *