”அதிமுக இரண்டாக பிரிந்துவிட்டது என தயவு செய்து இனி பேசாதீர்கள். எங்கள் தரப்பு தான் அதிமுக” என்று செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி ’அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கினார் எம்.ஜி.ஆர்.
அதன்பின்னர் தமிழ்நாட்டில் இதுவரை 31 ஆண்டுகள் ஆளுங்கட்சியாக அரியணையில் அமர்ந்த அதிமுக, இன்று 53ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இதனையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கட்சிக் கொடியை ஏற்றி வைத்த பழனிசாமி, அங்கிருந்த தொண்டர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
புயல் வேகத்தில் பணியாற்றினோம்!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அதிமுகவின் 53ஆம் ஆண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.
இந்திய வானிலை மையம் அறிவிப்பின் படி, ரெட் அலர்ட் கொடுத்த பின்னரும், சென்னையில் நேற்று மழை பெய்யவில்லை. ஆனால் கடந்த 14, 15ஆம் தேதி ஓரளவு பெய்த மழைக்கே, பல இடங்களில் நீர் தேங்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் முதலமைச்சர், துணை முதலமைச்சர், ஏனைய அமைச்சர்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்கவில்லை என்று சொல்லி வருகிறார்கள். மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஆளுநர் அரசைப் பாராட்டியது குறித்து அவரிடம்தான் கருத்து கேட்க வேண்டும். நான் எதுவும் சொல்ல முடியாது
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட வடிகால் பணிகளை முடிக்காததால் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது . சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க பரிந்துரைகளை வழங்க திருப்புகழ் கமிட்டி அமைக்கப்பட்டது. திருப்புகழ் கமிட்டி அளித்த பரிந்துரை அறிக்கையின்படி எடுத்த நடவடிக்கைகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். வெள்ளை அறிக்கை வெளியிட மறுப்பது நல்ல அரசாங்கத்திற்கு அழகல்ல.
அதிமுக ஆட்சியில் தானே, வர்தா, கஜா என பல புயல்கள் வந்தன. அப்போது புயல் வேகத்தில் பணியாற்றி மக்களின் பிரச்னைகளை தீர்த்தோம்” என்றார்.
எங்கள் தரப்பு தான் அதிமுக!
மேலும் அவர், “அதிமுகவில் பிரிந்து கிடக்கிறார்கள் என்ற வார்த்தையை இனிமேல் பயன்படுத்தாதீர்கள். அவர்கள் பிரிந்து சென்றவர்கள் அல்ல அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். அவ்வளவுதான். அதிமுக பிரிந்து கிடக்கவில்லை. பிரிந்து கிடக்கின்ற என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.
அதிமுகவில் உட்பகை இல்லை.. அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களே உட்பகை கொண்டவர்கள். ஊடகங்களில் 6 முக்கிய தலைவர்கள் என்னிடம் வந்து, நீக்கப்பட்டவர்களை இணைக்கச் சொன்னார்கள் என்று சொல்வது பச்சைப் பொய்.
வேண்டுமென்றே திட்டமிட்டு சில ஊடகங்களும், பத்திரிகைகளும் அதிமுகவின் நன்மதிப்பை கெடுப்பதற்காக விளம்பரப்படுத்துகின்றன. அதிமுக இரண்டாக பிரிந்துவிட்டது என தயவு செய்து இனி பேசாதீர்கள். எங்கள் தரப்பு தான் அதிமுக” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சந்திரசூட் பரிந்துரைத்த அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்?
போராட்டம் வாபஸ் : இன்று பணிக்கு திரும்பிய சாம்சங் ஊழியர்கள்!