கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அனைத்து ஜமாத் நிர்வாகிகளுடனான போலீஸாரின் ஆலோசனைக் கூட்டத்தில், ‘98 சம்பவம் போல எங்களை தள்ளிவிட்டு விடாதீர்கள்’ என்று ஜமாத் நிர்வாகிகள் போலீஸாரிடம் கண்ணீர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
கோவை கார் வெடிப்பு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அக்டோபர் 26 ஆம் தேதி மாலை கோவை மாவட்ட அனைத்து ஜமாத்தார்களை போலீஸ் அதிகாரிகள் வரவழைத்து ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது பேசிய ஜமாத் புள்ளிகள், “அந்த சம்பவத்தில் உயிரிழந்த முபீன் மற்றும் கைது செய்யப்பட்ட 5 இளைஞர்கள் யாரும் பள்ளிவாசல்களுக்கு தொழுவதற்கு கூட வந்ததில்லை.
மேலும் இந்த இளைஞர்கள் அனைவரும் வறுமையான குடும்பப் பின்னணியை கொண்டவர்கள் என்பதால் முஸ்லீம் என்கிற கண்ணோட்டத்தில் இருந்து விலகி விசாரிக்க வேண்டும்.
இவர்களை ஏதேனும் அரசியல் கட்சிகள் தங்களுடைய ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொண்டனவா என ஆராய வேண்டும்.
1998-ல் நடந்த குண்டு வெடிப்புக்கு பிறகும் இதேபோல அப்போதும் ஜமாத் புள்ளிகளை எல்லாம் அழைத்து பேசினீர்கள். அப்போது நாங்கள் சொன்னோம்.
இதில் மதத்தைக் கலக்காதீர்கள். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யுங்கள், விசாரணை செய்யுங்கள் என்றுதான் அன்றைக்கும் சொன்னோம்.
ஆனால், அன்றைக்கு போலீஸ் இழைத்த அநீதிக்கான வடு இன்றைக்கும் எங்கள் மனங்களில் ஆறவில்லை. ஏராளமான அப்பாவிகளை விசாரணைக்கு என போலீசார் பிடித்துச் சென்றார்கள்.
அவர்கள் அத்தனை பேரையும் கைது செய்தார்கள். இன்னும் இருபது வருடங்களாக சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குடும்பங்கள் அனாதையாகிவிட்டன. ஏராளமான அப்பாவி குடும்பங்கள் சின்னாபின்னமாகிவிட்டன.
இனியாவது அந்தத் தவறை செய்யாதீர்கள். குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் முஸ்லிம் என்பதற்காக நாங்கள் விடுதலை செய்யச் சொல்லவில்லை.
ஆனால் முஸ்லிம் என்ற ஒற்றை காரணத்துக்காகவே கைது செய்ய வேண்டாம். உங்கள் விசாரணையில் மதம் என்றைக்கும் குறுக்கிட வேண்டாம். ஆனால் 1998 போல் அப்பாவிகள் மீது கை வைத்து விடாதீர்கள்.
அதுபோல இன்னொரு அடியை முஸ்லிம் சமுதாயம் தாங்காது” என்று கண் கலங்க கோரிக்கை வைத்துள்ளனர்.
அதற்கு போலீஸ் அதிகாரிகள் அளித்த பதிலில், “ இதுவரை கைது செய்யப்பட்ட 6 பேரின் பின்னணியையும் ஆராய்ந்த பிறகே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை முஸ்லீம் இந்து என பிரித்துப் பார்ப்பதில்லை என கூறி அப்பாவிகளை கைது செய்ய மாட்டோம்” என்று உறுதி கூறியுள்ளனர். இப்படியாக மாலை 5 மணிக்கு தொடங்கிய கூட்டம் 6.50 மணிக்கு முடிவுக்கு வந்துள்ளது.
அப்துல் ராஃபிக்
கோவை கார் வெடிப்பு: என்.ஐ.ஏ விசாரிக்க மத்திய அரசு உத்தரவு!
இரண்டு சத்தங்கள்: கோவை ஜமாத்தினரிடம் அதிகாரிகள் தெரிவித்த முக்கிய தகவல்!