முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
2019 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியின் சொந்த தொகுதியான அமேதி தொகுதியில் போட்டியிட்டு, 55 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முன்னாள் பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார்.
அவர் அமேதி தொகுதி எம்பி ஆக இருந்தபோது, இனி இந்த தொகுதியில் காங்கிரஸோ அல்லது ராகுல் காந்தியோ வெற்றி பெற முடியாது என்று விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் காந்தி குடும்பத்தின் விசுவாசியான கிசோரி லால் சர்மா போட்டியிட்டு ஸ்மிருதி இரானியை 1.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்த நிலையில் டெல்லியில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை காலி செய்யுமாறு மத்திய அரசு அறிவித்திருந்தது.
அதன்படி ஸ்மிருதி இரானி தனது பங்களாவை காலி செய்தார். இதை வைத்து காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஸ்மிருதி இரானியை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர்.
ஏற்கனவே ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டபோது பங்களாவை காலி செய்த புகைப்படத்தையும், தற்போது ஸ்மிருதி இரானி தனது பங்களாவை காலி செய்ததையும் குறிப்பிட்டு விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் ஸ்மிருதி இரானியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்யாதீர்கள் என்று ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”வெற்றி தோல்வி என்பது வாழ்க்கையில் நடப்பதுதான்.
எனவே, ஸ்மிருதி இரானி உட்பட எந்தத் தலைவரையும் இழிவாக பேசுவதையும் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
ஒருவரை அவமானப்படுத்தும் வகையில் பேசுவது என்பது பலவீனத்தின் அடையாளமே, தவிர பலத்தின் அடையாளம் கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
சென்னை – இரவில் இடி மின்னலுடன் மழை : மற்ற மாவட்டங்களில்?
அரசியலமைப்பு படுகொலை தினம் : மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்!