வைஃபை ஆன் செய்ததும் மின்னம்பலத்தில் வெளியான ‘உதயநிதி வீட்டுக்கு எதிரே…. பாஜக வேட்பாளர்களுக்கு 65 கோடி… சிக்கும் சிசிடிவி காட்சிகள்… சிக்குவாரா கேசவ விநாயகன்?’ என்ற செய்தியின் லிங்க் வந்து விழுந்தது.
அதைப் படித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழ்நாட்டில் திமுகவும், அதிமுகவும் தேர்தலில் பெரிய அளவு பணத்தை புரட்டக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. இந்த இரு கட்சிகளும் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துவிடக் கூடாது என்பதை மையமாக வைத்து திமுக, அதிமுகவினரை குறிவைத்து ஐடி ரெய்டுகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இப்படி மத்திய பாஜக அரசின் ஐடி மூலம் நெருக்கடிகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில்… பாஜகவே எதிர்பாராமல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சென்னையில் இருந்து நெல்லை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 கோடி பணத்துடன் மூவர் பிடிபட்டனர்.
அவர்கள் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் வேலை செய்பவர்கள் என்று தெரிந்ததும் நயினாருக்கு சிக்கல் ஏற்பட்டது. ஆனால் அந்த பணத்துக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று மறுத்தார் நயினார்.
இந்த விவகாரம் குறித்து தாம்பரம் போலீசார் நடத்திய விசாரணையில்தான் சிக்கிய அந்த நான்கு கோடி உட்பட மேலும் 65 கோடி ரூபாய் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள கட்டிடத்தில் இருந்து பாஜக அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் மூலமாக பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.
இதுகுறித்த விசாரணை தொடரும் நிலையில் கமலாலயப் புள்ளிகளோ, ‘அடுத்து நம்ம ஆட்சிதான் வரும். அதனால் இந்த வழக்கு ஒண்ணுமில்லாம போயிடும். நீங்க ஆகவேண்டியதை பாருங்க’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதனால் பாஜக கூட்டணியில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கையை நிறுத்தாமல் தொடர்கின்றனர். நெல்லை, வேலூர், தேனி மற்றும் கோவை என பல தொகுதிகளில் பாஜக கூட்டணி பணத்தைத் தண்ணீராக செலவு செய்யத் தயாராகிவிட்டது.
அதேநேரம் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் பணப்பட்டுவாடா விவகாரத்தில் அமைச்சர்களுக்கு சில முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார்.
நேற்று முன் தினம் (ஏப்ரல் 11) ஸ்டாலின் முக்கியமான அமைச்சர்களோடு பேசியிருக்கிறார். அப்போது, ‘நாம் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தேர்தல் செலவுக்கான கரன்சியை கைப்பற்றி அதன் மூலம் வேறு சில தோற்றங்களை ஏற்படுத்தி குறைந்தது ஐந்து தொகுதிகளிலாவது தேர்தலை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. அதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
மேலும் திமுக சார்பில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் முயற்சியெல்லாம் வேண்டாம். நம் கட்சியில் யாராவது ஒருவர் தன்னிச்சையாக இதுபோல முயற்சி எடுத்து பணம் கைப்பற்றப்பட்டால், திமுகவுக்கு இந்திய அளவில் கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் அதை பெரிதாக்கிக் கொண்டு செல்வார்கள். அதன் மூலம், இந்தியா கூட்டணியை டேமேஜ் செய்ய முயற்சிப்பார்கள். எனவே அப்படி ஒரு முயற்சி வேண்டாம்.
மகளிர் உரிமைத் தொகை, இலவச பஸ் பயணம், புதுமைப் பெண், காலை உணவு போன்ற திட்டங்களால் நமக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருப்பதாக எனக்கு ரிப்போர்ட் வந்திருக்கிறது.
அதுவும் குறிப்பாக பெண்கள் ஆதரவு நமக்கு அதிகமாகியிருக்கிறது. எனவே திமுக ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என்று அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இதைக் கேட்டு டென்ஷனாகிவிட்டார்கள் அமைச்சர்கள்.
ஏனென்றால் களத்தில் இப்போதே ஓட்டுக்கு எவ்வளவு கொடுக்கப் போகிறார்கள் என்ற பேச்சு மக்களிடையே எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது.
இந்த நிலையில் முதலமைச்சரின் இந்த உத்தரவு அமைச்சர்கள் மூலம் மாசெக்களுக்கும், வேட்பாளர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும் சில மாசெக்கள், ‘தேர்தலுக்கு முதல் நாள் அதிகாலையோ, இரவோ வாக்குக்கு பணம் கொடுத்தால் பிரச்சினை வராது…’ என்ற ஆலோசனையில் இருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”2026 தேர்தலிலும் அதிமுகவுடன் தான் கூட்டணி” : ஒவைசி சொன்ன காரணம் தெரியுமா?