’தமிழர்களின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்’: மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

அரசியல்

ஆளுநருக்கு கடிவாளம் போடாவிட்டால் தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் அவருக்கும், ஆளும் திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு ஆர்.என்.ரவி மற்றும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேட்டியளித்துள்ளார்.

குழப்பத்தை ஏற்படுத்தும் ஆளுநரின் பேச்சு

அதில் முதல்வர் கூறியதாவது, “எனது தலைமையிலான திமுக அரசு சுமூகமாக இயங்கி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தக்கூடாது என்பதே ஆளுநரின் நோக்கம். பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகத்தை இரண்டாவது வளர்ந்த மாநிலமாக மாற்றியுள்ளோம். தமிழகத்தின் இந்த வளர்ச்சி பாதையை ஆளுநர் ஆர்.என்.ரவியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற நாட்டம் அவருக்கு இல்லை. அதனால்தான் அவர் அரசாங்கத்திற்கு எதிராக நியாயமற்ற விதண்டாவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும், உலக முதலீட்டாளர் சந்திப்புக்கு முதலீட்டாளர்களை அழைக்கவும் நான் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் சென்றிருந்தேன். அப்போது, ’சுற்றுப்பயணத்தால் முதலீட்டை ஈர்க்க முடியாது’ என்றால் ஆளுநர் என்ன கூற விரும்புகிறார்?

தமிழ்நாடு பற்றி தவறான பிம்பத்தை உருவாக்க ஆளுநர் முயல்கிறார். முதலீட்டாளர்கள் மத்தியில் தமிழ்நாடு முதலீடுகளை இழந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

அவரது அடிப்படையற்ற மற்றும் அரசியல் சட்டத்திற்கு எதிரான பேச்சுகள் தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கிறது.

ஆளுநர் தேவையே இல்லை

தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதும், தான் அரசியலமைப்புச் சட்டப்படி நியமிக்கப்பட்டதும் அவருக்குத் தெரியும். எனினும் அவர் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக விபரீத விளையாட்டை பொறுப்பற்ற முறையில் ஆடி வருகிறார்.

ஆர்.என்.ரவி பாஜக தலைமையிலான மத்திய அரசின் கட்டளைப்படி செயல்படுகிறார், அட்டர்னி ஜெனரலின் கருத்தைக் கேட்பதற்காக மத்திய உள்துறை அமைச்சரின் ஆலோசனையின் பேரில், செந்தில்பாலாஜியின் ‘டிஸ்மிஸ்’ கடிதத்தை அவர் கிடப்பில் போட்டுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிவாளம் போடாவிட்டால் மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கு உள்ளாக நேரிடும். தமிழ்நாட்டிலிருந்து ரவியை திரும்ப பெறுவது மட்டுமல்ல. மாநிலத்திற்கு ஆளுநர் தேவையே இல்லை என்பதே எங்களின் நிலைப்பாடு” என்றார்.

அமலாக்கத்துறையால் தடுக்க முடியாது

மேலும் அவர், ”விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை பாஜக கட்சியின் ஒரு கிளையாக மாறிவிட்டது. நேர்மையாக செயல்பட வேண்டிய விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காக பாஜக பயன்படுத்துகிறது. அமலாக்கத்துறையின் செலக்டிவ் கைதைத்தான் அதிகார துஷ்பிரயோகம் என எதிர்க்கிறோம். பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. அமலாக்கத்துறை விசாரணையின் மூலம் எங்களது செயல்பாட்டை தடுக்க முடியாது.” என்று தெரிவித்தார்.

பாட்னா பயம் வந்து விட்டது

தொடர்ந்து அவர், “வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதால் தமிழக அமைச்சர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.

காங்கிரசை உள்ளடக்கிய ஒரு அணியால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்பதே நிலைப்பாடு. நான் எடுத்த நிலைப்பாடே சரியானது.

மேலும், பாட்னா பயம் வந்து விட்டதால் மத்திய பிரதேசத்தில் திமுக, கலைஞரை பற்றி பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மக்களின் மவுனத்தை தங்கள் மீதான பயம் என நினைத்த பாசிசவாதிகள் அனைவரும் வீழ்ந்தது தான் வரலாறு. பாஜகவின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை மக்கள் மவுனமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

எங்களுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ளன. பொறுத்திருந்து பாருங்கள். ஒரு கூட்டணிக்கு தேவை ஒரு தலைவர் அல்ல, இலக்கு. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதி, கூட்டாட்சி, அரசியல் சாசனம் ஆகியவற்றுக்கு எதிரான பாஜகவை தோற்கடிப்போம் என்ற கொள்கை வகுத்து நாங்கள் செயல்படுகிறோம்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

அஜித் பவார் உள்ளிட்ட 9 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி மனு: தேசியவாத காங்கிரஸ்

கால்பந்து: சாம்பியன் கோப்பையுடன் முதல்வரை சந்தித்த வீராங்கனைகள்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *