நான் ஆளுநர் ஆர்.என்.ரவியை விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிட வேண்டாம் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாடு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி வளாகத்தில் இன்று (ஜனவரி 18) நடைபெற்றது.
இதில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட வடிவை திரும்பப் பெற வலியுறுத்தியும், ஆளுநரைக் கண்டித்தும், ஆளுநர் உரையைப் படிக்காமல் வெளியேறியதற்கு தமிழர்களிடம், ஆர்.என். ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் மாநாட்டில் கலந்துகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், “அண்ணா காலத்தில் வழக்கறிஞர் குழுவாக இருந்ததை, கலைஞர் சட்டத்துறையாக வளர்த்தெடுத்தார். சட்டத்துறையின் பங்களிப்பை கழகத்திற்காக போராடிய ஒவ்வொரு முன்னோடியை கேட்டாலும் சொல்வார்கள்.
1975-இல் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டபோது, நான் உட்பட பலரும் ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டோம். வெளியில் இருந்த கட்சித் தொண்டர்கள் பலரும் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டார்கள். அவர்கள் அனைவரையும் பாதுகாத்தது நமது சட்டத்துறைதான். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கலைஞர் மீது ஏராளமான வழக்குகள் போடப்பட்டது. அப்போது அவருக்காக ஏராளமான வழக்கறிஞர்கள் வாதிட வருவார்கள்.
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் கட்ட தடை போடப்பட்டபோது, அதனை தகர்த்தெறிந்தது இந்த சட்டத்துறை தான். கழகத்தின் கட்சிக்கொடிக்கும், உதய சூரியன் சின்னத்திற்கும் சிக்கல் வந்தபோது, அதனை மீட்டு தந்தது இந்த சட்டத்துறைதான். கலைஞர் நள்ளிரவு கைது செய்யப்பட்டபோது, நீதிமன்றத்தில் கவனப்படுத்தி வாதிட்டதனால் தான் அன்றைக்கு இருந்த அராஜக அரசு அடிபணிந்து அவரை விடுவித்தது. இது எல்லாத்துக்கும் மேலாக எம்.பி. வில்சன் போன்ற வழக்கறிஞர்களால் தான் நாம் அண்ணாவிற்கு அருகில் உறங்கும் கலைஞர் நினைவிடத்தை நாம் போராடி பெற்றோம்.
திமுகவிற்காக மட்டுமல்ல, மக்கள் பிரச்சனையிலும் திமுக சட்டத்துறையின் பங்கு முக்கியமானது. அதிமுக ஆட்சியில் முடக்க நினைத்த சமச்சீர் கல்வியை காப்பாற்றினோம். குடியுரிமை சட்டத்திருத்ததிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டோம். நீட் தேர்வு முறைகேடுகளை தடுக்க அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவிற்கு எதிராக போடப்பட்ட வழக்கை தடுத்தோம். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதல்முறையாக வழக்கு தாக்கல் செய்து தடை வாங்கினோம். இவை அனைத்திற்கும் மேலாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்தது இந்த வழக்கறிஞர் படை தான்.
தமிழ்நாட்டையும், தமிழ்மொழியையும், தமிழினத்தையும், காக்கும் காவல் அரணாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தாங்கிப் பிடிக்க, தூணாகத் தூக்கி நிறுத்த, எத்தனையோ சார்பு அணிகள் இருக்கிறது. அதில் தனித்துவமானது நம்முடைய சட்டத்துறை. இது, வழக்கறிஞர்கள் அணி மட்டுமல்ல; கட்சியைக் காக்கும் காவல் அணி.
சோதனை நெருப்பாறுகள் பல கடந்து, அள்ளிவீசப்பட்ட அவதூறுகளை எதிர்கொண்டு, நாள்தோறும் கட்டமைக்கப்படும் பொய்களைத் தகர்த்தெறிந்து, 75 ஆண்டுகளாகக் கற்கோட்டையாகக் கட்சி நிமிர்ந்து நிற்கிறது. ஆறாவது முறை ஆட்சியமைத்து இருக்கிறது என்றால், அதற்கு லட்சக்கணக்கான கட்சி வீரர்களின் தியாகம்தான் காரணம். அந்தத் தியாகங்களுக்கு துணை நின்ற வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள்தான் சட்டத்துறையைச் சார்ந்த நமது வழக்கறிஞர்கள்.
இந்த மாநாடு வாயிலாக, நான் அனைவருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புவது, ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க.வை பொருத்தவரைக்கும், ஒரே மதம் – ஒரே மொழி – ஒரே பண்பாடு – ஒரே உடை – ஒரே உணவு என்று ஒற்றைப் பண்பாட்டை நோக்கி நாட்டை நகர்த்த பார்க்கிறது. அதற்காகத்தான் ஒரே தேர்தல் என்று கிளம்பியிருக்கிறார்கள். ஒரே அரசு என்ற நிலையை உருவாக்க மாநிலங்களை அழிக்கப் பார்க்கிறார்கள்.
பா.ஜ.க.வைப் பொருத்தவரைக்கும் பெரும்பாலும் குறுகிய கால செயல்திட்டமாக இருக்காது. நீண்டகால செயல்திட்டமாகத்தான் இருக்கும். இப்போது நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்று சொல்பவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல்தான் என்று சொல்லும் நிலைமையை உருவாக்க நினைக்கிறார்கள். இது ஒற்றையாட்சிக்குதான் வழிவகுக்கும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இது, தனிமனிதர் ஒருவரிடம்தான் அதிகாரத்தைக் கொண்டு சென்று சேர்க்கும். இது, பா.ஜ.க. என்ற கட்சிக்கே கூட நல்லதல்ல.
இன்றைக்கு பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியை சர்வாதிகாரியாக ஆக்கத்தான் இந்தச் சட்டம் பயன்படும். பா.ஜ.க.வும் – பா.ஜ.க.வுக்கு மூளையாக இருந்து செயல்படும் அமைப்புகளும் விரிக்கும் வலையில், இன்று அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க.வை ஆதரிக்கும் கூட்டணிக் கட்சிகள் விழுந்துவிடக் கூடாது. இந்தச் சட்டத்தை ஆதரிக்கக் கூடாது என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கோரிக்கை வைக்கிறேன்.
பா.ஜ.க. ஆட்சியை ஆதரிப்பது, உங்கள் தனிப்பட்ட விருப்பம்… ஆனால், இந்தியாவின் கூட்டாட்சிக் கருத்தியலுக்கே முரணான சட்டங்களை, மக்களாட்சி மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எந்த அரசியல் அமைப்புகளும் ஆதரிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். பாஜகவின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நாம் இறுதிவரை எதிர்க்க வேண்டும்.
தன்னுடைய செயல்திட்டங்களுக்கு இடையூறாக இருப்பவர்களுக்கு எதிரான கருத்துகளை மெதுவாக சமூகத்தில் விதைக்க பார்க்கின்றனர். அதற்கு துணையாக பல எடுபிடிகளை பேச வைப்பார்கள். மீடியாக்கள் மூலம் பொய் செய்திகளை பரப்புவார்கள். விவாதங்களை கட்டமைப்பார்கள். அளவில்லாமல் அவதூறுகளை அள்ளி இறைப்பார்கள். பச்சையான பொய்களால், கொச்சைப்படுத்துவார்கள். பா.ஜ.,வின் வாட்ஸ் அப் பல்கலை தீயாக வேலை செய்யும். இதை தாண்டி தான் போராட வேண்டும். வெற்றி பெற வேண்டும்.
இப்போது கூட இந்திய நாட்டையும், அரசியலமைப்பு சட்டத்தையும், மக்களாட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் திமுக போராடி கொண்டிருக்கிறது. ஆனால், நம்மை அரசியலமைப்புக்கு எதிரானவர்களாக சித்தரிக்கிற முயற்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி இறங்கி உள்ளார். அவர் தான் மரபுபடி இறுதியில் பாடப்படக்கூடிய தேசிய கீதத்திற்கு கூட நிற்காமல் ஓடிய ஆளுநர். நான் ஆளுநரை விமர்சிக்கிறேன் என்பதற்காக அவரை மாற்றிவிட வேண்டாம் என்பது தான் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். அவர் பேசப் பேசத்தான் நாட்டில் பாஜக அம்பலப்படுகிறது. திராவிட கொள்கைகள் மேலும் மேலும் மக்களிடம் சேர்கிறது. அவர் பேசப்பேசத் தான் மாநில சுயாட்சியின் முழக்கத்தின் உரிமைகள் புரிகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் இன்றைய மாநாட்டில், கட்சியினர், திராவிட இயக்கங்கள் உணர்வோடு பேசுவதற்கு தூண்டுதலாக இருந்தவர் ஆளுநர் தான்.
இதைதான், என்னை செயல்பட வைப்பது எதிரிகள் தான் என்று பெரியார் சொல்வர். அப்படிப்பட்ட பண்பாட்டு எதிரிகளை கொள்கை எதிரிகளை பார்த்து கொண்டு உள்ளோம். இன்றைய எதிரிகள் கருத்தியல் மோதலுக்கு தயாராக இல்லை. அவர்கள் கருத்தியலாக பேசினால் வெற்றி பெற முடியாது. அதனால் தான் அவதூறுகளை ஆயுதங்களாக எடுக்கின்றனர். அந்த துரோக கூட்டங்களை துடைத்து எறிய வேண்டிய கடமை, அரசியலமைப்பை பாதுகாக்கும் கடமை, நாடு முழுதும் சமூக நீதியை பாதுகாக்கும் கடமை நமக்கு உண்டு. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
2019 முதல் நடந்த அனைத்து தேர்தல்களிலும் நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு உங்களுடைய பணிகளும் முக்கியக் காரணம். இந்த வெற்றிப் பயணம் 2026-லும் தொடர வேண்டும்.
2026 தேர்தல் வெற்றி என்பது, நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்கு, மக்கள் அளிக்கப் போகும் மகத்தான அங்கீகாரமாக அமையப் போகிறது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மீண்டும் அமைய – இந்தியா முழுமைக்கும் திராவிடக் கோட்பாடுகளை வென்றெடுக்க – கட்சி சட்டத்துறை சளைக்காமல் – சமரசம் இல்லாமல் உழைக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
- எப்படி மாத்தி மாத்தி பேசுறாங்க… அப்டேட் குமாரு
- டிஜிட்டல் திண்ணை : எடப்பாடி இல்லாத அதிமுக… செங்கோட்டையன் சபதம்! – பக்கா ஸ்கெட்ச் பின்னணி!
- வேளாண் பட்ஜெட்… விவசாயிகளுக்கு ஏற்றமா? ஏமாற்றமா? – தலைவர்கள் ரியாக்சன்!
- திரையுலகில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!
- சபாநாயகரை சந்தித்தது ஏன்? – செங்கோட்டையன் விளக்கம்!