ஜாசன்
சுதந்திர இந்தியாவில் 18 முறை பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடந்துள்ளது. இதில் காங்கிரஸ் ஏழு முறையும், பாஜக இரண்டு முறையும் தனிப் பெரும்பான்மையுடன் அதாவது மற்ற கட்சிகள் ஆதரவில்லாமல் ஆட்சி அமைத்தன. 73 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில் 32 ஆண்டுகள் கூட்டணி ஆட்சி நடந்தது. கூட்டணி ஆட்சி என்பது தேசியக் கட்சிகள் மாநிலக் கட்சிகளின் தயவில் ஆட்சி செய்வது தான்.
முதல் கூட்டணி ஆட்சி
அவசர நிலை பிரகடனத்திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை எதிர்த்து 1977-இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மொரார்ஜி தேசாய் தலைமையிலான பழைய காங்கிரஸ், பாரதிய ஜனசங் அதாவது இன்றைய பாரதிய ஜனதா கட்சி, பாரதிய லோக் தளம், பிரஜா சோஷலிஸ்ட் இணைந்து கூட்டணியாகப் போட்டியிட்டு 296 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மொரார்ஜி தேசாய் பிரதமர் ஆனார். அதுதான் முதல் கூட்டணி ஆட்சி. ஆனால் அந்த கூட்டணி முழு ஐந்தாண்டு நீடிக்கவில்லை. மொரார்ஜி தேசாய் மற்றும் சரண் சிங் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அந்த ஆட்சி கவிழ்ந்தது.
1989 முதல் 2009 வரை மத்தியில் ஏழு முறை கூட்டணி ஆட்சி தான் நடந்தது. 2014 மற்றும் 2019-ல் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தியது. ஆனால் 2024 தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 240 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. எனவே மாநிலக் கட்சிகள் தயவில் ஆட்சி செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு மோடி ஆளாகியிருக்கிறார்.
கூட்டணி ஆட்சியால் மோடியிடம் ஏற்பட்ட மாற்றம்
தேர்தல் ஆண்டான இந்த ஆண்டுக்கு முன் ஆண்டு வரை பாரதிய ஜனதா ஆட்சி தான் என்று பெருமை பேசிக்கொண்டு இருந்த பாரதிய ஜனதா சென்ற ஆண்டு இறுதியில் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்தது. வெளியே 400 இடங்கள் வெற்றி பெறுவோம் என்று சவடால் பேச்சு பேசிக் கொண்டிருந்த பாரதிய ஜனதாவுக்கு அப்போதே உள்ளுக்குள் மெஜாரிட்டி கிடைக்குமா என்ற ஒரு பயம் இருந்திருக்கிறது என்பது தான் இப்போது ஊர்ஜிதம் ஆகியிருக்கிறது.
இப்போது கூட தனது பத்தாண்டு சாதனைக்கு கிடைத்த வெற்றி, ராமர் கோயில் இது பற்றியெல்லாம் மறந்து கூட பேசாமல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று தேசிய ஜனநாயக கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எச்சரிக்கையுடன் பேச ஆரம்பித்திருக்கிறார் மோடி.
நாற்காலியின் 4 கால்கள் மோடிக்கு சொந்தமில்லை
தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று பேசும் பிரதமர் மோடி பீகாரில் கலந்து கொண்ட சில பிரச்சாரக் கூட்டங்களில் நிதிஷ்குமார் கலந்து கொள்ளவில்லை. இப்போது அவர் தயவு தேவைப்படுகிறது. இதேபோல் சந்திரபாபு நாயுடு ஆரம்பத்தில் பாஜகவால் கவனிக்கப்படாதவராகத் தான் இருந்தார். அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு அந்த வாய்ப்பு கிடைக்காமல் திரும்பிப் போனவர்தான். பாரதிய ஜனதா ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் இரண்டு கட்சிகளிடமே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில் தெலுங்கு தேசம் முடிவானது. இதேபோல் ஒடிசாவில் பிஜூ ஜனதா தளத்துடன் கூட்டணி கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது என்று சொன்னார் அமித்ஷா. தொகுதி பங்கீடு விஷயத்தில் பிஜேபியின் போக்கு பிடிக்காததால் நவீன் பட்நாயக் தனித்துப் போட்டி என்று அறிவித்தார். மூன்றாவது முறையாக பிரதமர் மோடி என்று சாதனையாகப் பேசிக் கொண்டாலும் பிரதமர் நாற்காலியில் நான்கு கால்களுமே அவருக்கு சொந்தமில்லை என்பதுதான் உண்மை.
காங்கிரசில் இருந்து உருவான மாநில கட்சிகள்
தேசிய அரசியலில் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் என்பது 1967-இல் ஆரம்பமானது என்று சொல்லலாம். அதைத் தொடங்கி வைத்தது திமுக தான். மாநில உரிமைக்காக தேசிய அரசியலில் தனது பங்களிப்பை அப்போது விரிவுபடுத்தியது திமுக.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மொத்தம் ஆறு தான். அவை பாரதிய ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தேசிய மக்கள் கட்சி இந்த பட்டியலில் திரிணாமுல் காங்கிரஸ் சேர வாய்ப்பு இருக்கிறது. வாக்கு சதவீதத்தை வைத்துத் தான் தேசிய கட்சி மற்றும் மாநில கட்சி என்று வகைப்படுத்துகிறது தேர்தல் ஆணையம்.
இந்தியாவில் 600 அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் உள்ளன. மாநிலக் கட்சிகள் ஆரம்பமே காங்கிரஸ் கட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தொடங்கப்பட்டது தான். மம்தா பானர்ஜி, சரத் பவார், மூப்பனார், தேவராஜ் அர்ஸ், நெடுமாறன், குமரி ஆனந்தன், பிஜு ஜனதா தளம் தலைவர் கூட முன்னாள் காங்கிரஸ்காரர் தான்.
இந்தியாவைப் பொறுத்தவரை தற்போதைய நிலைமையில் தேசிய கட்சிகளை விட மாநில கட்சிகள் தான் செல்வாக்குள்ள கட்சிகளாக இருக்கிறது. இதற்குக் காரணம் இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. மொழி, கலாச்சாரம், பொருளாதார ஏற்றத்தாழ்வு மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது. இதனை தேசிய கட்சிகள் சரிவர புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் அதிக அளவு மாநில கட்சிகள் இந்தியாவில் இருப்பதற்கு முக்கியக் காரணம்.
இந்தியாவின் மிகப் பழமையான மாநில கட்சி
இந்தியாவில் மிகப் பழமையான மாநில கட்சி திமுக தான். 1949-இல் தொடங்கப்பட்டு 1957-இல் திமுக தன்னை தேர்தல் அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டது. தேர்தலில் போட்டியிடுவதா வேண்டாமா என்று கட்சித் தொண்டர்களிடம் தேர்தல் நடத்தி கருத்து கேட்டார் அண்ணா. திருச்சியில் நடந்த மாநாட்டில் இரண்டு வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. ஒரு வாக்குப்பெட்டியில் தேர்தல் வேண்டும் என்று எழுதி இருந்தது. இன்னொரு பெட்டியில் தேர்தல் வேண்டாம் என்று எழுதியிருந்தது. பெரும்பான்மையானோர் தேர்தல் வேண்டும் என்று வாக்களித்து இருந்தார்கள். அதனைத் தொடர்ந்து தான் தேர்தலில் போட்டியிட அண்ணா முடிவு செய்தார். உட்கட்சி ஜனநாயகத்திற்கு இதை விட வேறு உதாரணம் தேவை இல்லை.
காங்கிரஸ் பின்புலம் இல்லாத கட்சியாக ஆரம்பத்தில் இருந்து இரண்டு கட்சிகளில் ஒன்று திமுக, மற்றொன்று ஜனசங்கமாக இருந்து பாரதிய ஜனதா கட்சியாக மாறிய தேசிய கட்சி. காலப்போக்கில் இந்த இரண்டு கட்சியிலும் காங்கிரஸ் கட்சியினர் விரும்பி சேர ஆரம்பித்தது வேறு விஷயம்.
இந்தியாவில் மாநில கட்சிகள்
தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள் ஆதிக்கம் இல்லை என்பது 1967லிருந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக இன்று வரை தொடர்கிறது. மேற்கு வங்கத்தில் முதலில் காங்கிரஸ் கட்சி தான் ஆதிக்கம் செலுத்தியது. அதன் பிறகு மேற்குவங்கம் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதிக்கத்தில் இருந்தது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய மம்தா பானர்ஜி தனி கட்சி தொடங்கி இன்று காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி இரண்டையுமே அங்கு காணாமல் போகச் செய்து விட்டார். இப்போது பாஜக மெல்ல அங்கு தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது. இதுதான் மம்தா பானர்ஜிக்கு மிகப்பெரிய சவாலாகவும் இருக்கிறது என்பதும் உண்மை.
ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் என்ற மாநில கட்சி தான் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆட்சி செய்து தற்சமயம் அவர்களிடம் இருந்து பாஜக கைக்கு போய் இருக்கிறது. உத்திரப்பிரதேசம் மிகப்பெரிய மாநிலம். அது ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டை. இப்போது காங்கிரஸ் அங்கு மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி கூட ஆட்சி அதிகாரத்தை அனுபவித்தார்கள். ஆனால் இழந்த ஆட்சி அதிகாரத்தை காங்கிரஸ் கட்சியால் அங்கு இன்னும் அனுபவிக்க முடியவில்லை. இப்போது பாஜக ஆட்சி அமைத்தாலும் இப்போதைய பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு அதிர்ச்சி முடிவைத்தான் தந்திருக்கிறது.
இந்தியா கூட்டணியின் தன்மை
இந்தியா கூட்டணி என்பது பெரும்பான்மை மாநிலக் கட்சிகள் கொண்ட ஒரு கூட்டணி தான். எனவே மாநில கட்சிகளின் முக்கியத்துவம் மற்றும் அதன் தாக்கம் தேசிய கட்சிகளுக்கு தெரிந்தும் தெரியாமல் இருப்பது போல் சில சமயம் நடிப்பது உண்டு. தேசிய கட்சிகளுக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் என்ன வேறுபாடு? தேசிய கட்சிகளின் பார்வை தேசிய அளவில் இருந்தது. குறிப்பிட்ட மாநிலம் என்று வகைப்படுத்தி அதன் செயல்பாடு இல்லை. மாநிலக் கட்சிகள் மாநில நலன் சார்ந்து யோசித்தது திட்டமிட்டது. அதுதான் அவர்கள் வெற்றிக்கு காரணம்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அது 60-களில் இந்தியா முழுவதும் செல்வாக்குள்ள ஒரு கட்சியாகத் தான் இருந்தது. அதே சமயம் மாநிலங்களில் ஆளும் காங்கிரஸ் முதல்வர்கள் சுய சிந்தனையுடன் ஆட்சி நடத்த டெல்லி தலைமை அவர்களை அனுமதிக்கவில்லை. இதுதான் காங்கிரஸ் கட்சியின் பலம். காலப்போக்கில் அதுவே அதற்கு பலவீனமாக மாறியது.
காணாமல் போன கட்சிகள்
அதேபோல் ஒரு காலத்தில் செல்வாக்குடன் இருந்த கட்சிகள் இப்போது இல்லை என்ற வரலாறும் இருக்கிறது. உதாரணத்திற்கு மூதறிஞர் ராஜாஜி ஆரம்பித்த சுதந்திராக் கட்சி 1967-இல் 40க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டே கூட ஆரம்பத்தில் சுதந்திராக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராகத் தான் இருந்தார். இப்போது அந்த கட்சியே இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஜனதா கட்சி இப்போது இருக்கும் இடம் தெரியவில்லை. இப்படி செல்வாக்குடன் இருந்த கட்சிகள் காணாமல் போன வரலாறு இந்திய அரசியலில் உண்டு.
அஇஅதிமுக-வாக மாறிய அதிமுக
ஒரு கட்டத்தில் இந்திரா அம்மையார் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கத்தை தகர்ப்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு நெருக்கடி தந்த மாநில கட்சிகளை தடை செய்ய முயற்சி செய்தார். அதற்கு பயந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனது கட்சி பெயரை அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றினார் எம்ஜிஆர். ஆனால் திமுக அப்படி எல்லாம் செய்யவில்லை என்ன நடக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமாக இருந்தது. ஆனால் அந்த முயற்சியில் இருந்து பின் வாங்கினார் இந்திரா காந்தி. அதே சமயம் இந்தியாவில் மிகப்பெரிய மாநிலக் கட்சிகள் திமுக, அதிமுக என்ற இரண்டு கட்சிகள் தான். இந்த இரண்டு கட்சிகளுக்கு தான் கோடிக்கணக்கில் தொண்டர்கள் இருக்கிறார்கள்.
பாஜகவிற்கு பாடம் சொல்ல ஆரம்பித்திருக்கும் மாநில கட்சிகள்
புதிய பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதாவுக்கு 240 எம்பிக்கள், காங்கிரஸ் கட்சிக்கு 99 எம்பிகள், இப்படி தேசியக் கட்சிகளுக்கு 346 பேர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், மாநிலக் கட்சிகளில் இருந்து 179 பேர் தேர்வாகியுள்ளனர். இதுதவிர அங்கீகாரம் பெறாத கட்சிகளைச் சேர்ந்த 11 பேரில் சுயேட்சை கட்சிகளைச் சேர்ந்த ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். 41 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இந்த முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
தேசிய கட்சிகள் மாநில கட்சிகளின் உரிமைகளைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல் அவர்களை புறக்கணிப்பதன் விளைவாக தொடங்கப்படுவது தான் மாநில கட்சிகள். மாநில கட்சிகள் ஏற்கனவே தக்க பாடத்தை காங்கிரஸ் கட்சிக்கு சொல்லிவிட்டது. இப்போது பாரதிய ஜனதாவுக்கு சொல்ல ஆரம்பித்திருக்கிறது.
ஜாசன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேசிய அரசியலில் ஸ்டாலின் ஆளுமை!
ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய ஜேசிடி பிரபாகர்.. உருவானது ’அதிமுக ஒருங்கிணைப்புக் குழு’!
தேசிய கட்சிகள் மாநில கட்சிகளின் உரிமைகளை அலட்சியப்படுத்தி புறக்கணிக்கப்படுவதால்தான் மாநில கட்சிகள் உருவாவதாகவும் இனி அவர்களது தயவின்றி தேசிய கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைப்பாட்டை போலவே ……
மாநில கட்சிகள் இன்றைய காலகட்டத்தில் ஜாதிய கட்சிகளின், மத இயக்கங்களின் தயவில்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்பதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு ஜாதிய, மத ஆதிக்கம் இந்த அரசியல்வாதிகளால் வீரியத்துடன் தலைதூக்கி உள்ளது. நவீன உலகில் இந்தியா இறையாண்மை என்னவாகப்போகிறதோ…..
பத்திரிகைகள், ஊடகங்கள் அரசியல்வாதிகளின் பிடியில் இல்லாமல் இருந்தாலே மக்களுக்கு நல்லது நடக்கும்