வைஃபை ஆன் செய்ததும் அறிவாலயத்தில் நடைபெற்று வரும் திமுக மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு பற்றிய புகைப்படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
”திமுக தலைமையகமான அறிவாலயத்தில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளோடும் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினர் சந்திப்புகளை நடத்தி வருகிறார்கள். அமைச்சர் உதயநிதி நடுவே அமர்ந்திருக்க அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உதயநிதிக்கு இரு பக்கமும் அமர்ந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாவட்டமாய் நிர்வாகிகளை சந்தித்து சம்பந்தப்பட்ட எம்பி தொகுதியின் இப்போதைய நிலவரம் என்ன என்பது பற்றி கேட்டறிந்து வருகிறார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
எந்த தயக்கமும் இல்லாமல் உங்கள் குறைகளைச் சொல்லுங்கள் என்று ஒவ்வொருவரிடமும் உதயநிதி கேட்கிறார்.
இப்படித்தான் ஜனவரி 29 ஆம் தேதி நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நடந்தபோது பல நிர்வாகிகளும் தங்கள் உள்ளத்தில் உள்ளதைக் கூறி அமைச்சர் உதயநிதியை அதிர வைத்திருக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பேரூர் செயலாளரும், பேரூராட்சி வைஸ் சேர்மனுமான லட்சுமணன், ‘மாவட்ட கலெக்டரை மாத்தலேன்னா தேர்தல் நேரத்துல ரொம்ப சங்கடமா இருக்கும். அவர் உள்ளாட்சிப் பிரநிதிதிகளை எல்லாம் ரொம்ப மோசமா நடத்துறாரு. ஆறாயிரம் நிவாரணம் கொடுக்கும்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் போனா,’இதெல்லாம் அதிகாரிகள் வேலை. நீங்க ஏன் வர்றீங்க?’னு கேட்குறார்’ என்று புகார் சொல்லியுள்ளார்.
இந்த கலெக்டர் கார்த்திகேயன் ஏற்கனவே விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்து நெல்லைக்கு மாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இதேபோல பிடிஓ உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் பல ஒன்றிய செயலாளர்கள் கடுமையாக புகார் கூறியிருக்கிறார்கள். அதிகாரிகள் தான் இப்ப ஆட்சி நடத்துறாங்க. கட்சிக்காரங்க நியாயமான விஷயத்தை கூட செய்ய முடியலை’ என உதயநிதியிடம் சொல்லியிருக்கிறார்கள்.
அடுத்து களக்காடு ஒன்றிய செயலாளார் செல்வகருணாநிதி எழுந்து, ‘‘அமைச்சர்கள்ட்ட சொல்லுங்க… ஒன்றிய செயலாளர்கள் நாங்க ஏதாச்சும் கட்சிக்காரனுக்காக கேட்டா செஞ்சு தர சொல்லுங்க.. கட்சிக்காரங்களுக்கு செஞ்சாதானே அவங்க தேர்தல் வேலை பாப்பாங்க…?” என்று கேட்டிருக்கிறார்.
அப்போது அமைச்சர் நேரு, ‘எந்த அமைச்சர்னு பேரை சொல்லுங்க’ என்று கேட்க, ‘அது நல்லாருக்காதுல்லே…’ என்று பதிலளித்திருக்கிறார் ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதி. ஆனால் உதயநிதியோ பரவாயில்லை சொல்லுங்க என்று கேட்டும், செல்வ கருணாநிதி தயங்கியிருக்கிறார்.
அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் முருகன் எழுந்து, ‘ நம்ம அண்ணாச்சி கே.கே.எஸ்.எஸ் ஆர்கிட்டதான் சொன்னேன். ஒண்ணும் நடக்கலை. தலையாரி வேலைக்கு நம்ம கட்சிக்காரர் பையனுக்கு நான் தான் கேட்டேன். அவங்க ரொம்ப கஷ்டப்படுற குடும்பம். நம்ம ஆட்சியில வாங்கிக் கொடுத்த மாதிரி இருக்கும்னு அண்ணாச்சிக்கிட்ட சொன்னேன். ஆனா நடக்கவே இல்லை’ என்றார்.
இதற்கு அமைச்சர் நேரு, ‘ஏன்ய்யா… அவர் மாவட்டத்துலயே அவரால தலையாரி வேலை போட முடியலை. கலெக்டர் போட்டுட்டு போயிட்டாரு தெரியுமா?’ என்று சொல்ல சிரிப்பலை எழுந்து அந்த இறுக்கம் லேசாக தணிந்தது.
இப்படியாக நெல்லை மட்டுமல்ல மற்ற மாவட்ட நிர்வாகிகளும் அதிகாரிகளின் ஆதிக்கத்தையும் அமைச்சர்களின் இயலாமையையும்தான் அதிகமாக உதயநிதியிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியின் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் எவ்வளவு அதிருப்தியை சுமந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து அமைச்சர் உதயநிதி அதிர்ந்து போயிருக்கிறார்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
9 நாளில் பொதுத்தேர்தல்… இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை : பாகிஸ்தானில் பதற்றம்!
எடப்பாடியை சந்தித்த எஸ்டிபிஐ நிர்வாகிகள் : நடந்தது என்ன?