சீமான் அவரது இதயத்தில் இருந்து பேசவில்லை என்பதால் அதை தங்களது மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை என தவெக நிர்வாகி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க விமரிசையாக முடிந்தது. அதில் பங்கேற்ற விஜய், கட்சியின் கொள்கைகள், செயல்திட்டங்களை விளக்கினார். அப்போது அவர் கூறிய பல்வேறு கருத்துகள் அரசியல் கட்சிகளிடையே ஆதரவையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளன.
குறிப்பாக மாநாடு நடைபெறும் முன் விஜய்க்கு பெரும் ஆதரவு தெரிவித்து வந்த சீமான், அதன்பின்னர் விஜய் மற்றும் அவரது கட்சியின் கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.
எனினும் மாநாட்டை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் தவெக தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி விஜய் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், கட்சியில் பொறுப்பாளர்களை நியமிக்கும் பணி வேகமெடுத்துள்ளது.
இதற்காக சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நேற்று மாலை அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 20 பேர் பங்கேற்றனர்.
சீமான் பேச்சில் பெரிய வேறுபாடு தெரிகிறது!
இதற்கிடையே தவெக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் சீமான் குறித்து அக்கட்சியின் நிர்வாகி சம்பத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “நவம்பர் 1ஆம் தேதி நடந்த தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில் சீமான் முன்வைத்த விமர்சனங்களால் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள், அவரையும் இனி மற்ற அரசியல்வாதிகளில் ஒருவராகக் கருதி விலகிச் செல்வார்கள்.
த.வெ.க. மாநாடு நடப்பதற்கு முன்பு சீமான் பேசிய பேச்சுக்களுக்கும் மாநாட்டின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவர் பேசிய பேச்சுகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு தெரிகிறது.
த.வெ.க. தலைவருக்கும், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகளுக்கும் பல வேலைகள் உள்ள நிலையில், சீமானை போன்று பேசுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும்.
எங்கள் அரசியல் எதிரி யார் என்பதை முடிவுசெய்து விட்டு களத்தில் இறங்கியுள்ளோம். யாரை விமர்சனம் செய்ய வேண்டும், யாரை கடந்து போக வேண்டும் என்பதை விஜய் எங்களுக்கு உணர்த்தியுள்ளார்.
சீமான் தன் கருத்தை அவரது இதயத்தில் இருந்து பேசவில்லை என்பதால் அதை எங்களது மூளைக்குள் கொண்டுபோக விரும்பவில்லை. அவரவர் கருத்து அவரவர் உரிமை. முடிவை தமிழ்நாட்டின் மக்களின் கரங்களில் கொடுத்துவிட்டு தங்கள் பணியை கவனிப்பதே அனைவருக்கும் நல்லது” என்று சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம் : விஜய் பங்கேற்பு?
இந்த நிலையில் தான் இரண்டாவது நாளாக கட்சியின் ஆலோசனை கூட்டம் இன்றும் நடைபெற உள்ளது. அதில் விஜய் நேரடியாகவோ அல்லது காணொலி வாயிலாகவோ கலந்து கொள்ள இருப்பதாக என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில், தவெக கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை, பொறுப்பாளர்கள் நியமனம், தவெக மீதான மற்ற கட்சிகளின் பார்வை, அதற்கு எப்படி ரியாக்சன் அளிப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
இணைய அச்சுறுத்தல் ‘எதிரிகள்’ பட்டியலில் இந்தியா!
பிக் பாஸ் சீசன் 8 : வீட்டை விட்டு வெளியேறும் அன்ஷிதா!