வைஃபை ஆன் செய்ததும், ‘முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்துவிட்டார். திமுகவை ஒரு கை பார்க்க பாஜக தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் ஸ்டாலின் அடுத்த மூவ் என்ன?” என்ற கேள்வி வந்து விழுந்தது.
வாட்ஸ் அப் இந்த கேள்விக்கான பதிலை மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“ஸ்பெயின் நாட்டில் இருந்தபடியே அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 2 ஆம் தேதியே ஸ்டாலின் திமுகவினருக்கு ஒரு மடல் எழுதினார். அந்த மடலின் கடைசி பத்திக்கு முதல் பக்கத்தில் ஸ்டாலின் எழுதிய வரிகள் திமுகவுக்குள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.
அந்த மடலில், ‘நம்மைத் திசைதிருப்ப அவதூறுகளைப் பரப்புவதில் பா.ஜ.க.வும் அ.தி.மு.கவும் சளைத்தவையல்ல. பொய் வழக்குகளின் பேரில் தங்களை எதிர்க்கும் ஜனநாயக சக்திகள் மீது மிரட்டல் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒன்றே ஒன்றிய பா.ஜ.க அரசின் பத்தாண்டுகால சாதனையாக இருப்பதால் தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கும் வகையிலான ஊடகப் பரபரப்புக்கான செயல்பாடுகள் இருக்கும்.
எதற்கும் அஞ்சாத இயக்கம்தான் தி.மு.க என்பதைக் களத்தில் ஆற்றும் பணிகள் மூலமாக அவர்களுக்குப் புரிய வைப்போம்’ என்று எழுதியிருந்தார் ஸ்டாலின்.
ஊடகப் பரபரப்புக்கான செயல்பாடுகள் என்னவாக இருக்கும் என்பது செய்தித் தாள்களிலேயே வந்துகொண்டிருக்கின்றன.
ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜி விசாரணைக் கைதியாக 200 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டு அமைச்சர் பதவியை இழந்தார்.
அடுத்தடுத்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, கே.எஸ்.எஸ்.எஸ்.ஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் மீதான தீர்ப்புகளையும் மறு ஆய்வு செய்ய சூமோட்டாவாக எடுத்தார் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்.
இதை எதிர்த்து கே.கே.எஸ்.எஸ்.ஆர். , தங்கம் தென்னரசு ஆகியோர் உச்ச நீதிமன்றம் சென்றனர். உச்ச நீதிமன்றம், ‘இந்த வழக்கு உள்ளிட்ட ஆனந்த வெங்கடேஷ் எடுத்த அனைத்து சூமோட்டோ வழக்குகளையும் யார் விசாரிக்கலாம் என்பதை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு செய்வார்’ என்று தீர்ப்பளித்தது. அதன் பின் தலைமை நீதிபதி இவ்வழக்குகளை நீதிபதி ஆனந்த வெங்கடேஷே விசாரிக்கலாம் என்று தெரிவித்தார்.
நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் ஏற்கனவே அறிவித்தபடி பிப்ரவரி 12, 13 தேதிகளில் அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணையும், பிப்ரவரி 19-22 வரை பொன்முடி மீதான வழக்கு விசாரணையும் நடைபெற இருக்கிறது.
பிப்ரவரி 27, 28, 29, மார்ச் 5 ஆகிய தேதிகளில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்,.ஆர். ஆர், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான வழக்கு விசாரணை நடக்கிறது.
இந்த வழக்குகளின் தீர்ப்பில் ஒருவேளை அமைச்சர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டால்… அவர்கள் அமைச்சர் பதவியை இழப்பார்கள். இது தேர்தல் பிரச்சார நேரத்தில் நடந்தால் திமுகவுக்குதான் கடும் அரசியல் சரிவு ஏற்படும் என்பது அமைச்சர்களிடையே நடக்கும் விவாதமாக இருக்கிறது.
அமைச்சர்களின் மீதான வழக்கு விவகாரங்கள் பற்றி ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர்தான் அட்வகேட் ஜெனரலாக இருந்த மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய அட்வகேட் ஜெனரலாக ராமன் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் ஸ்பெயினில் இருந்தபடியே தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் பிப்ரவரி 2 ஆம் தேதியே திமுகவினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஸ்டாலின் அந்த அறிக்கையை விடுத்திருந்தார்.
ஸ்டாலின் சென்னை திரும்பிய பிறகு அவரை தலைமைக் கழக நிர்வாகிகள், சீனியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்தனர். பயண விவரங்கள், உடல் நலன் பற்றி விசாரித்தனர். அப்போது சிலர் ஸ்டாலினிடம்,
‘ஏற்கனவே மோடி நம் மீது பெரிய கோபத்தில் இருக்கிறார். விரைவில் சில அமைச்சர்கள் மீதான தீர்ப்பு வந்தால் அவர்கள் பதவியும் போய்விடும் என்று ஊடகங்களில் எல்லாம் பேசுகிறார்கள். அடுத்த ஆட்சியும் மோடிதான் என்று கருத்துக் கணிப்புகளும் சொல்கின்றன.இந்த நிலையில் நாம் மோடியோடு கொஞ்சம் நீக்கு போக்காக போகலாம். அனுசரித்து செல்லலாம்’ என்று தயங்கியபடியே சொல்லிருக்கிறார்கள்.
அதற்கு சற்றே கோபமாக பதில் சொன்ன ஸ்டாலின், ‘அவங்க கொள்கை என்ன, நம்ம கொள்கை என்ன? மத்திய அரசு கூட மாநில அரசு என்ற வகையில் இணக்கமாதான் போக முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் இன்னும் வெள்ள நிவாரணம் ஒரு பைசா கூட நமக்கு தரலை. நிர்வாக ரீதியாக நாம் இணக்கமாக இருக்க முயன்றாலும் மோடி அரசு தொடர்ந்து நமக்கு எதிராகவே இருக்கிறது.
இந்த நிலையில் நாம் எதற்காக அவர்களோடு வளைந்துகொடுக்கணும்? பெரியார், அண்ணா, கலைஞர் கொள்கையை ஸ்டாலின் புதைச்சிட்டார்னு என் மேல விமர்சனம் வர்றதுக்கா? அமைச்சர்களின் பதவி என்ன, இந்த ஆட்சியே போனாலும் பாஜகவோடு எந்த சமரசமும் கெடையாது. அவங்களுக்கு எதிரா நம்ம அரசும், நம்ம கட்சியும் இன்னும் தீவிரமா செயல்படணும். நான் மோடிக்கெல்லாம் பயந்தவன் கெடையாது’ என்று வீரியமாகவும் வேகமாகவும் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.
இதை வைத்து பார்க்கும்போது தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் திமுக தீவிரப்படுத்தும் என்றே தெரிகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேற லெவல் கூட்டணி: ராஜு முருகனின் அடுத்த ஹீரோ இவர்தான்!
என் தகுதியைப் பற்றிப் பேச எடப்பாடிக்கு யோக்கியதை இல்லை: ஆ.ராசா காட்டம்!