யோகி Vs மோடி…யோகியின் முதல்வர் பதவி பறிப்பா?… அகிலேஷ் கொடுத்த ஆஃபர்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

உத்திரப்பிரதேசத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் விழுந்த அடியிலிருந்து பாஜகவினால் இன்னும் மீள முடியவில்லை. பாஜகவின் அசைக்க முடியாத எஃகு கோட்டையாகப் பார்க்கப்பட்ட உத்திரப் பிரதேசத்தில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்ததற்கு யார் காரணம் என்று பாஜகவிற்குள் ஒரு பனிப்போர் நடைபெற்று வருகிறது. எப்போது வேண்டுமானாலும் பாஜகவில் ஒரு பிளவு நடக்கலாம் என்ற சூழல் நிலவுவதாக உத்திரப் பிரதேசத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மோடி-அமித்ஷா கூட்டணிக்கும், யோகி ஆதித்யநாத்துக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு உருவாகியுள்ளது. யோகி ஆதித்யநாத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்றும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக சில தகவல்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. இப்போது உத்திரப்பிரதேசத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

பெருமளவு குறைந்த வாக்கு சதவீதம்

உத்திரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 நாடாளுமன்றத் தொகுதிகளில், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 73 தொகுதிகளையும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 64 தொகுதிகளையும் பாஜக கூட்டணி கைப்பற்றியது. இந்த முறையும் உத்திரப் பிரதேசத்தில் 70க்கு மேல் வெற்றி பெறுவோம் என்று முழங்கி வந்த பாஜக, தேர்தல் முடிவுகள் வெளியான போது ஏமாற்றத்தையே சந்தித்தது.

36 தொகுதிகளில் மட்டுமே பாஜக கூட்டணியால் வெல்ல முடிந்தது. இந்த 36-லும் பல தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பாஜக வென்றிருக்கிறது. பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசமே கடந்த தேர்தல்களைக் காட்டிலும் குறைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 50% சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு சதவீதம் 41.3% சதவீதமாகக் குறைந்துள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியெழுப்பிய விவகாரம் பாஜகவிற்கு நாடு முழுவதும் பெரிய அளவிலான பாசிட்டிவாக அமையும் என்று பாஜக எதிர்பார்த்தது. ஆனால், ராமர் கோயில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியிலேயே பாஜக சமாஜ்வாதி கட்சியிடம் தோல்வியடைந்தது. பொதுத் தொகுதியான பைசாபாத்தில் பட்டியலின வேட்பாளரான அவதேஷ் பிரசாத்தை நிறுத்தி பாஜகவை வீழ்த்திக் காட்டியது சமாஜ்வாதி கட்சி.

வெளியே வந்த யோகி – மோடி மோதல்

தேர்தலுக்கு முன்பே பாஜகவில் புகைந்து கொண்டிருந்த யோகி vs மோடி சிக்கல்கள், தேர்தல் முடிவுகள் வெளியானதற்குப் பிறகு பெரும் பூகம்பமாய் மாறியிருக்கிறது. ஏற்கனவே உத்திரப் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பாஜகவிற்கு தேர்தலில் பிரச்சாரம் செய்யவில்லை என்ற விடயம் பெரிதாகப் பேசப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் பாஜகவின் மோடி-அமித்ஷா தலைமைக்கும் இடையில் பல பிளவுகள் ஏற்பட்டிருப்பதாக தேர்தலுக்கு முன்பே செய்திகள் வெளியாகி இருந்தன.

அதுமட்டுமல்லாமல் உத்திரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத்தின் வளர்ச்சியை மோடி-அமித்ஷா கூட்டணி விரும்பவில்லை என்றும், வேட்பாளர் தேர்வில் கூட யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், அவரது பரிந்துரைகள் ஓரங்கட்டப்பட்டதாகவும் யோகியின் ஆதரவாளர்களிடையே ஒரு அதிருப்தி இருந்து வந்தது.

ராஜபுத்திர சமூகத்தில் எழுந்த எதிர்ப்பு

யோகி ஆதித்யநாத் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர். மத்திய அமைச்சராக இருந்த புருஷோத்தம் ரூபாலா ராஜபுத்திர சமூகத்தை இழிவுபடுத்திப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பாஜகவிற்கு எதிராக ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிளர்ந்தெழுந்தனர். உத்திரப் பிரதேசத்தில் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் மோடியால் ஒதுக்கப்படுவதாக ஏற்பட்ட அதிருப்தி, ராஜபுத்திரர்களின் ஆவேசத்திற்கு மேலும் தூபம் போட்டது.

மோடி மீண்டும் பிரதமராக வந்தால் 2 மாதங்களில் யோகி ஆதித்யநாத்தை உத்திரப் பிரதேச முதல்வர் பதவியிலிருந்து மாற்றி விடுவார் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலுக்கு முன்பே சர்ச்சையைக் கிளப்பிவிட்டார். கெஜ்ரிவால் பேசியபோது அப்படி எந்த சிக்கலும் பாஜகவில் இல்லை என்று பாஜக தலைமை சமாளித்தாலும், தற்போது அந்த சண்டை மீடியா வெளிக்கு வந்துவிட்டது.

வெளிப்படையாக குற்றம் சாட்டிய யோகி

உத்திரப் பிரதேசத்தில் பாஜகவின் தோல்விக்கு யோகி ஆதித்யநாத்தே காரணம் என்ற பிரச்சாரம் கட்சிக்குள் நடப்பதாக யோகி ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். தேர்வுகள் முடிவுகள் பாஜகவிற்கு எதிரானதாக மாறியதற்கு, பாஜகவினர் மத்தியில் கட்டியெழுப்பப்பட்ட Over Confidence தான் காரணம் என்று இப்போது யோகி ஆதித்யநாத் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார். மோடியும், அமித்ஷாவும் முன்வைத்த 400 சீட்டுகள் ஜெயிப்போம் என்ற முழக்கத்தையும், மோடி பிராண்ட் என்பதை மட்டுமே முன்வைத்து தேர்தலை சந்தித்தையும் தான் யோகி ஆதித்யநாத் குறிப்பிடுவதாக பாஜக பிரமுகர்களே சொல்கிறார்கள்.

மேலும் மோடியும், அமித்ஷாவும் யோகியை ஒதுக்கிவிட்டு தேர்வு செய்த வேட்பாளர்களில் பெரும்பாலானோர் தோல்வியடைந்து விட்டார்கள் என்பதும் மோடியின் மீதான குற்றச்சாட்டாக எழுந்துள்ளது. மேலும் உத்திரப் பிரதேசத்தில் பாஜக அடைந்த தோல்வி ஹிந்துத்துவாவின் தோல்வியாக நாடு முழுதும் விவாதமாகி இருப்பதும் பாஜகவிற்கு தலைவலியாக மாறியுள்ளது. யோகியை புறக்கணித்ததால் தான் பாஜக தோல்வியை சந்தித்ததாகவும், சங் பரிவார் அமைப்புகளின் சித்தாந்த அடையாளமாக யோகியே இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புணர்வு எழுந்துள்ளது.

யோகிக்கு எதிராக கேஷவ் பிரசாத் மெளரியா

இந்த விவகாரத்தை கேஷவ் பிரசாத் மெளரியாவை வைத்து மோடியும் அமித்ஷாவும் டீல் செய்வதாக சொல்லப்படுகிறது. உத்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக இருப்பவர் கேஷவ் பிரசாத் மெளரியா. இவர் மோடி மற்றும் அமித்ஷாவின் நம்பிக்கைக்குரியவராக இருப்பவர். இவருக்கும் யோகி ஆதித்யநாத்திற்கும் இடையில் தற்போது வெளிப்படையாக பிரச்சினைகள் வெடித்துள்ளன. யோகி ஆதித்யநாத் நடத்திய கேபினெட் கூட்டங்களையும் மெளரியா புறக்கணித்துள்ளார். யோகி ஆதித்யநாத் குழு மற்றும் மெளரியா குழு என்று உத்திரப் பிரதேச பாஜக பிரிந்து நிற்கிறது.

மெளரியா தொடர்ச்சியாக யோகி ஆதித்யநாத்தை நோக்கி அவர் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை புறக்கணித்து விட்டு, அதிகாரவர்க்கத்தினை கையில் வைத்துக் கொண்டு, ஆட்சி அதிகாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அரசை நடத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டை தொடர்ச்சியாக வைத்துக் கொண்டு வருகிறார். மெளரியா தனது எக்ஸ் பக்கத்தில், “நான் முதலில் கட்சியின் உறுப்பினர். அதன் பிறகுதான் துணை முதல்வர். அரசாங்கத்தை விட கட்சியே பெரியது. கட்சியை விட யாரும் பெரிதானவர்கள் அல்ல” என பதிவிட்டு சர்ச்சையைக் கிளப்பினார். யோகி ஆதித்யநாத்தை எதிர்த்தே அவர் இதனை பதிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் பாஜக தலைமை

விரைவில் உத்திரப் பிரதேசத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஏற்பட்டிருக்கிற உட்கட்சிப் பூசல் பாஜக தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. முதலில் இடைத்தேர்தலை கவனியுங்கள், இடைத்தேர்தல் முடியும் வரை பொறுத்திருக்குமாறு அனைவருக்கும் பாஜக தலைமை அறிவுறுத்தியிருக்கிறது. இடைத்தேர்தல் முடிந்தவுடன் உத்திரப் பிரதேச பாஜகவில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாஜக தலைவர்கள் யாரும் பொதுவெளியில் அறிக்கையோ, பேட்டியோ கட்சியைப் பற்றி கொடுக்கக் கூடாது என டெல்லி தலைமை அறிவுறுத்தியுள்ளது.

உத்திரப் பிரதேச மாநில பாஜக தலைவர் பூபேந்தர் செளத்ரி ஜூலை 16 அன்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுடன் சந்திப்பை நடத்தினார். அடுத்த நாள் பிரதமர் மோடியையும் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று சொன்னதாக தகவல்கள் வெளிவருகின்றன. மேலும் துணை முதல்வர் மெளரியாவும் ஜூலை 16 அன்று ஜே.பி.நட்டாவை சந்தித்துள்ளார்.

எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டணி கட்சிகள்

இடைத்தேர்தலுக்கு தயாராவது குறித்து யோகி ஆதித்யநாத் நடத்திய கூட்டத்தையும் மெளரியா மற்றும் அவரின் ஆதரவாளர்கள் புறக்கணித்துள்ளனர். மேலும் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளாக இருக்கக் கூடிய நிஷாத் கட்சி மற்றும் அப்னா தள் ஆகியவற்றின் தலைவர்களும் பாஜகவின் மீது விமர்சனங்களை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

அப்னா தள் கட்சியின் தலைவரான அனுபிரியா படேல் உத்திரப் பிரதேசத்தின் வேலைவாய்ப்புகளில் SC, ST, OBC இடஒதுக்கீட்டிலிருந்த பணியிடங்கள் Unreserved பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் SC மற்றும் OBC வாக்குகள் எதிர்கட்சிகளுக்கு மாறியதையும் அவர் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறார். நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத், யோகி அரசின் புல்டோசர் கலாச்சாரத்தைக் கண்டித்து, ”ஏழைகளை நாம் தூக்கி எறிந்தால், அவர்கள் நம்மை அரசியலிலிருந்து தூக்கி எறிவார்கள்” என்று கூறியுள்ளார்.

அகிலேஷ் கொடுத்த ஆஃபர்

பாஜகவிற்குள் நடக்கும் இந்த சண்டை குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பல கருத்துகளை தெரிவித்து பரபரப்புகளை உருவாக்கி வருகிறார். பாஜகவைச் சேர்ந்தவர்கள் நாற்காலிக்காக சண்டை போட்டுக் கொண்டிருப்பதால், மக்கள் தான் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தொடர்ந்து சொல்லி வருகிறார்.

மேலும் அகிலேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “Monsoon offer: bring 100, form the government” என்று பதிவிட்டது பல விவாதங்களை உருவாக்கியுள்ளது. பாஜகவிலிருந்து 100 எம்.எல்.ஏகள் வந்தால் ஆட்சி அமைத்து விடலாம் என்பதைத் தான் அகிலேஷ் குறிப்பிட்டிருப்பதாகவும், பாஜக எம்.எல்.ஏ களுக்கு அகிலேஷ் யாதவ் அழைப்பு விடுத்துள்ளதாகவும் இது ஊடகங்களில் பிரதான செய்தியாக மாறியுள்ளது.

யோகியின் முதல்வர் பதவி பறிக்கப்படுமா?

உத்திரப் பிரதேசத்தில் ஓபிசி அரசியல் மீண்டும் வீரியமாக எதிர்கட்சிகளால் எழுப்பப்படுவதும் யோகிக்கு சிக்கலாக மாறியிருக்கிறது. உத்திரப்பிரதேசம் மட்டுமல்லாமல், உயர்சாதி தலைமை கொண்ட ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் பாஜக பின்னடைவை சந்தித்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டும் கட்சிக்குள் விவாதமாகி இருக்கிறது.

இதன் காரணமாக யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளன. ஆனால், யோகி ஆதித்யநாத் உத்திரப்பிரதேசம் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமே மோடிக்கு அடுத்தபடியாக இந்துத்துவா கொள்கையின் அடையாளமாக பார்க்கப்படுவதால், அவரை நீக்கினால் அது இந்துத்துவா கொள்கையின் தோல்வியாக பார்க்கப்படும் சூழல் இருக்கிறது.

அதேபோல் யோகி ஆதித்யநாத் கணிசமான செல்வாக்கை பாஜக தொண்டர்கள் மத்தியிலும் பெற்றிருக்கிறார். எனவே அவர் முதல்வர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே. ஆர்.எஸ்.எஸ் அப்படி ஒரு ரிஸ்க்கை எடுக்க முன்வராது என்றே உத்திரப்பிரதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் பாஜகவில் மிகப்பெரிய மாற்றங்கள் இடைத்தேர்தலுக்குப் பிறகு நடக்கும் என்று தெரிகிறது.

பாஜகவிற்குள் நடக்கும் உட்கட்சி சண்டை வெளியில் தெரியாமல் இருப்பதற்குத் தான் இப்போதைக்கு பாஜகவின் டெல்லி மேலிடம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இனிமேல் ஆன்லைனில் கட்டிட அனுமதி: வந்தாச்சு புதிய திட்டம்!

எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சிபிசிஐடி கஸ்டடி: கோர்ட் உத்தரவு!

+1
0
+1
2
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *