காங்கிரஸ் வேட்பாளரை புறக்கணிக்கிறாரா வேல்முருகன்? – நிர்வாகிகள் கூட்டத்தில் நடந்தது என்ன?

தேசிய மற்றும் மாநில கட்சிகள் கூட்டணியை இறுதிசெய்து தொகுதி பங்கீடுகளை முடித்துக்கொண்டு பிரச்சார களத்தில் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனரும் எம்எல்ஏ-வுமான வேல்முருகன் இன்று (மார்ச் 24) கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெய்வேலி இந்திரா நகரில் உள்ள தனது இல்லத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகளின் அவசர கூட்டத்தை கூட்டினார். மாலை 3.30-க்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் சுமார் 200 நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

“ஈழப் பிரச்சனைக்கு துணை போன காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்க  மாட்டோம் என்பதற்காக தான் இந்த கூட்டம் கூட்டப்படுவதாக  செய்தி வெளியானது. இதனையடுத்து திமுக பிரமுகர் ஒருவர் மூலமாக வேல்முருகனை சமரசம் செய்து கூட்டணியை பிளவுபடுத்தும் வகையில் எந்த கருத்தும் பேச வேண்டாம் என்று தடை போட்டதாக சொல்கிறார்கள்” திமுக நிர்வாகிகள்.

நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய வேல்முருகன், “தமிழ் தேசியத்தை பற்றி பேசக்கூடிய கட்சிகள் தமிழகத்தில் இரண்டே பேர் தான். ஒன்று தவாக, மற்றொன்று நாம் நாம் தமிழர் கட்சி.

தமிழக வாழ்வுரிமை கட்சி துவங்கிய பிறகு தான் நாம் தமிழர் உதயமானது. ஆனால், அவர்கள் 234 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறார்கள். அந்தளவிற்கு கட்சி வளர்ந்துள்ளது.

ஆனால், நம்மால் வளர முடியவில்லை. என்ன காரணம்? நான் சட்டமன்றத்தில் குரல் கொடுக்கிறேன், போராடுகிறேன். ஆனால், நீங்கள் மக்களிடம் பேசுவதில்லை, அவர்களுக்காக போராடுவதில்லை. இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும் கட்சியை வளர்க்க வேண்டும் என்று தீவிரம் காட்ட வேண்டும்.

திமுக ஆதரவால் நான் எம்எல்ஏ-ஆக வந்திருக்கிறேன். அதற்காக அவர்கள் தொடர்ந்து அவமதித்து வருகிறார்கள். கொஞ்சம் கூட மதிப்பதில்லை. நானும் விரக்தியில் தான் இருந்தேன்.

இந்த நேரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு எம்பி சீட் தருகிறேன், கூட்டணிக்கு வாருங்கள் என்று அழைத்தார். ஆனால், நான் அதை மறுத்தேன்.

இப்போதுள்ள கூட்டணி கட்சி தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், மூன்று முறை என்னை தொடர்புகொண்டு பேசினார். அதனால் நானும் மதித்து சென்றேன். சில விஷயங்களை பேசினோம். கூட்டணியை ஆதரிக்கிறேன். கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். அதுபோல் நீங்களும் இருக்க வேண்டும்.

உங்களை மதித்து தேடி வந்தால், தேர்தல் வேலைகளை செய்யுங்கள். சும்மா பணம் தருகிறார்கள் என்று பல்லை இளித்துக்கொண்டு ஓடிவிடாதீர்கள். கூட்டணி கட்சி நிர்வாகிகள் உங்களை மதித்து அழைக்கட்டும். அதன்பிறகு கூட்டணி வேட்பாளருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்” என்று வேல்முருகன் தெரிவித்தார்.

இதுகுறித்து தவாக நிர்வாகிகளிடம் கேட்டோம், “பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி செளமியாவின் உடன்பிறந்தவர் தான் கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்.

பாமக நிறுவனர் ராமதாஸையும், அக்கட்சியின் தலைவர் அன்புமணியையும் கடுமையாக விமர்சித்து பேசிவரக்கூடியவர் தவாக நிறுவனர் வேல்முருகன். இந்தநிலையில், காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் வேல்முருகனை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதனால் தான் நிர்வாகிகள் கூட்டத்தில் தன்னை மதித்து வருபவர்களுக்கு ஆதரவு கொடுங்கள் மதிக்காதவர்களுக்கு தேடிப்போய் ஆதரவு கொடுக்க வேண்டும்” என்று மறைமுகமாக சுட்டிக்காட்டியதாக சொல்கிறார்கள் தவாக நிர்வாகிகள்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய ராஜ்நாத் சிங்

திமுக கூட்டணியில் கமல்ஹாசன்: தேர்தல் பிரச்சாரம் எப்போது?

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts