ஹிப் ஆப் ஆதி நாயகனாக நடித்து மே 24 அன்று வெளியான PT ஸ்டார் திரைப்படம் 12 நாட்களில் 12.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவித்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கடந்த மே 24 வெளியான திரைப்படம் P T சார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதை அறிவிக்கும் வகையில் நேற்று மாலை சென்னையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் பேசும்போது,
“P.T.சார்’ படம் வெளியாகி மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றைய காலத்தில் சினிமாக்கள் இரண்டு நாள் ஓடுவது கடினமாக இருக்கிறது. அதற்கு நிறையக் காரணங்கள் இருக்கிறது.
ஓடிடி தளங்கள் வந்த பிறகு சினிமா மாறிவிட்டது. அதையெல்லாம் தாண்டி ‘P T சார்’ நன்றாகப் போகிறது. 12 நாட்களில் 12.5 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. அதிலும் பலர் ஒரு நல்ல சினிமாவை எடுத்திருக்கிறார்கள் என்று பாராட்டினார்கள் அது பெரிய மகிழ்ச்சி.
வெற்றிப் படம் என்றாலும் திருப்தி இருக்க வேண்டும் அதற்குக் காரணமாக இருந்த இயக்குநர் கார்த்திக் இயக்கும் அடுத்த படத்தையும் நானே தயாரிக்கிறேன். புது இயக்குநர்கள் சிக்கனமாகப் படமெடுங்கள். நல்ல படமெடுங்கள். ஹிப் ஆப் ஆதிதான் இந்தப் படத்தை என்னிடம் கொண்டு வந்தார்.
அவர் இசையும் இதில் நன்றாக இருந்தது. பாக்யராஜ் சார் க்ளைமாக்ஸில் கலக்கிவிட்டார். இந்தப் படத்தின் 50வது நாளை இதை விட சிறப்பாக நடத்த திட்டமிட்டு வருகிறேன் என்றார்.
PT சார் வசூல், வெற்றி சம்பந்தமாக திரையரங்குகள், விநியோகஸ்தர்கள் வட்டாரங்களில் விசாரித்த போது, “12 நாட்களில் 12.5 கோடி மொத்த வசூல் என தயாரிப்பாளரே கூறியிருக்கிறார். சராசரியாக ஒரு நாளைக்கு 1 கோடியே 5 லட்சம் ரூபாய். இது ஆரோக்கியமான வசூலா ?
சூரி நடிப்பில் வெளியான கருடன் 3 நாட்களில் 12 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகியும் அப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை 10 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ள நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க லாபம் கிடைக்குமா என கேள்வி எழுந்துள்ளது.
ஒரு படம் ஓடி முடிந்து லாப கணக்கு பார்க்காமல் இவர்களை போன்றவர்கள் நாயகன் கால்ஷீட், பைனான்சியர்களிடம் தொடர்ந்து கடன் வாங்க அல்லது வாங்கிய கடன் கொடுப்பதற்கு தாமதமாவதை சமாளிக்க தொடர்ந்து ஏதாவது ஒரு படத்தை தயாரிக்க வேண்டியுள்ளது.
அதற்கு இது போன்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி ஒரு பிம்பத்தை கட்டமைக்க வேண்டியுள்ளது.
தி.நகரில் இருந்து பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவிற்கு ஆடம்பரமாக நடிகர் சிலம்பரசனை ஹெலிகாப்டரில் அழைத்து சென்றவர் புதிய இயக்குநர்களை சிக்கனமாக படம் எடுக்க சொல்வது வேடிக்கையாக உள்ளது” என்றனர்.
மேலும், அவர்கள் கூறுகிறபோது “ஒரு படத்தின் வெற்றி தோல்வி என்பது வரவு செலவு அடிப்படையில் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் வெளியான பல படங்கள் திரையரங்கில் ஓடவில்லை என்றாலும் தொலைக்காட்சி உரிமை, ஓடிடி உரிமை விற்பனை மூலம் படத்தின் பட்ஜெட் தொகையை பெற்றுள்ளது.
தியேட்டர் வருவாய் என்பது கூடுதல் வருவாயாக பார்க்கப்படுகிறது. எல்லா படங்களுக்கும் இது போன்று வியாபாரம் நடக்காது. நட்சத்திர அந்தஸ்து, தயாரிப்பு நிறுவனங்கள் அடிப்படையில் தொலைக்காட்சி, ஓடிடி உரிமை வியாபாரங்கள் பேசப்பட்டு முடிக்கப்படுகிறது.
அப்படியும் சில நேரங்களில் தயாரிப்பாளர்கள் கேட்கும் அதிகபட்ச விலை காரணமாக அரண்மனை – 4, கருடன் போன்ற படங்கள் வெளியீட்டுக்கு முன் வியாபாரம் முடிவடையாமல், படம் வெளியாகி வெற்றி பெற்ற பின் முன்னர் தயாரிப்பாளர்கள் கேட்ட விலையை காட்டிலும் அதிக விலைக்கு வியாபாரம் ஆன படங்களும் உண்டு.
அந்தவகையில் அரண்மனை – 4 படத்தை வாங்க தயங்கிய ஓடிடி நிறுவனம் படம் வெளியான பின்பு கடுமையான போட்டிக்கிடையே அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது” என்றனர்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”பிரேமலதாவின் பொய் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது” : மாணிக்கம் தாகூர்
சவுக்கு சங்கர் வழக்கு : அதிரடியாக கேள்வி எழுப்பிய நீதிபதி!