இன்னுமொரு தேசிய கட்சி தேவையா? சாத்தியமா?

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

இந்திய தேசிய காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டது என்றும், அதனால் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக இன்னொரு தேசிய கட்சியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம், கருத்து, முனைப்பு பலரிடம் காணப்படுகிறது. இது காலத்திற்கு பொருந்தாத சிந்தனை எனலாம். மூன்றாவது தேசியக் கட்சி என்பது தேவையுமில்லை; சாத்தியமும் இல்லை.

தேர்தல் கமிஷனை பொறுத்தவரை மூன்று, நான்கு மாநிலங்களில் குறிப்பிட விதிகளின்படி தேர்தலில் வாக்குகளைப் பெற்றால் அல்லது தொகுதிகளை வென்றால் அது தேசியக் கட்சி என அங்கீகாரம் பெற்றுவிடும். எல்லா மாநிலங்களிலும் அது கட்சியாகச் செயல்படவேண்டிய தேவை இல்லை.

மற்றபடி காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டுமே கூட தேர்தல் கமிஷன் அங்கீகாரம் என்ற பொருளில்தான் தேசிய கட்சிகளே தவிர, அவற்றின் இயக்கமெல்லாம் அந்தந்த மாநில நலன்களின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன என்பதை காணமுடியும். மாநிலத் தலைவர்களே வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றனர்.  

உதாரணமாக கர்நாடகாவில் பாஜகதான் ஆட்சி செய்கிறது. மஹாராஷ்ராவிலும் அது கூட்டணி அரசில் பங்கேற்றுள்ளது. ஆனால் இரண்டு மாநிலங்களுக்கும் இடையில் எல்லை பிரச்சினை இன்று கொழுந்துவிட்டு எரிகிறது. இது நீண்டகாலமாக  நிலவிவரும் பிரச்சினைதான். ஏன் திடீரென பெரிதாகிறது?

பேராசிரியரும், மொழியியல் வல்லுநருமான ஜி.என்.தேவி பிரச்சினைக்கு காரணம் மொழியோ, எல்லைப் பிரச்சினையோ இல்லை, கர்நாடகாவில் தேர்தல் வரும் நேரத்தில் மக்களை மொழி உணர்வின் மூலம் திசை திருப்ப விரும்பும் ஆளும் கட்சி அரசியல்வாதிகள்தான் என்கிறார். கர்நாடக பாஜக அரசு ஊழல் குற்றச்சாட்டுகளில் மூழ்கி தத்தளிப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தேசிய கட்சிகளே மாநில மொழியுணர்வை தூண்டிவிட்டு அரசியல் செய்யும்போது தேசிய கட்சி என்பதற்கு பொருள் என்ன என்பதுதான் கேள்வி. ஏற்கனவே காவிரி நதி நீர் பங்கீடு என்று வந்தால், கர்நாடகாவில் எல்லா கட்சிகளும் அந்த மாநிலம் சார்பாகவே நிலைப்பாடு எடுப்பதும், அதே கட்சிகள் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டின் கோரிக்கையை ஆதரிப்பதையும் பார்த்துள்ளோம்.

does India need a third national party Rajan Kurai

இந்த நிலையில்தான் ஆம் ஆத்மி கட்சி அகில இந்தியக் கட்சியாக முனைகிறது. சந்திரசேகர ராவ் தெலங்கானா ராஷ்டிர சமிதியை, பாரத் ராஷ்டிர சமிதி என்று பெயர் மாற்றம் செய்துவிட்டார். மமதா பானர்ஜி கூட கோவா தேர்தலில் கால் பதிக்க பிரசாந்த் கிஷோர் மூலம் கடுமையாக முயற்சி செய்தார்.

இப்படி ஒரு மூன்றாவது தேசிய கட்சி இந்திய அரசியல் எதிர்காலத்துக்குத் தேவையா என்பது ஒரு கேள்வி என்றால், அது சாத்தியமா என்பது இரண்டாவது கேள்வி.

இரண்டுக்குமே விடை காண நாம்  எப்படி முதலில் தேசமும், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளும் உருவாயின என்பதைக் காண வேண்டும். இந்தியாவின் பெரும்பகுதி பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் 1858ஆம் ஆண்டு வந்ததால், பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்ட இந்திய தேசம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் காங்கிரஸ் உருவானது.

இந்தியாவில்  நிலவிய வழிபாட்டு முறைகளையெல்லாம், ஹிண்டுயிசம், Hinduism என்ற பெயரில் ஒற்றை மதமாக ஆங்கிலேயர்கள் அடையாளப்படுத்தியதால் உருவான ஒற்றை மத அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதாரமான சங்க பரிவார் இயக்கங்கள் உருவாயின.

இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கியது யார்?

ஆலன் அக்டேவியன் ஹியூம் என்ற பிரிட்டிஷ்காரர்  (1829-1912) இந்தியாவில் ஆட்சிப் பணியாற்ற 1849ஆம் ஆண்டு வந்தார். அவரது தந்தை இங்கிலாந்தில் தீவிரமான ஓர் அரசியல்வாதியாக விளங்கியவர். மக்கள் நலனில் அக்கறை செலுத்திய அதிகாரியாக இருந்த அவர், விவசாயச் சீர்திருத்தங்களை முன்னெடுத்தார். பிரிட்டிஷ் ஆட்சி செய்த பிழைகளை விமர்சித்தார்.

ஒரு கட்டத்தில் பதவி விலகி, இந்திய மக்கள் நலனுக்காக பணி செய்யத் தொடங்கினார். இவர் கல்கத்தா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எழுதிய கடிதத்தில் இந்திய மக்களின் நலனுக்காக வாதாடவும், சுயாட்சி உரிமைகளைப் பெறவும் இந்திய தேசிய காங்கிரஸ் ஒன்றை தொடங்க வேண்டிய தேவையை சுட்டிக்காட்டினார். அவருடைய முன்முயற்சியிலேயே முதல் இந்திய தேசிய காங்கிரஸ் மும்பையில் 1885ஆம் ஆண்டு கூடியது.

does India need a third national party Rajan Kurai

ஒவ்வொரு தேசமும் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்கிறது என்று கூறிய அவர் இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கியதன் மூலம் இந்திய தேசம் என்ற கருத்தாக்கத்தையும் வலுப்படுத்தினார்.

இதற்கு அடிப்படை என்னவென்றால் பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்ததுதான். அதற்கு முன் எந்த மன்னரும், எந்த சாம்ராஜ்யமும் இந்திய நிலப்பரப்பு முழுவதையும் ஆண்டதில்லை என்பதுடன் இந்தியாவை ஒற்றை தேசமாக கருதியதுமில்லை.

பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராகப் பல்வேறு இந்திய மன்னர்களும், சிப்பாய்களும் 1857ஆம் ஆண்டு கிளர்ந்து எழுந்ததை முதல் இந்திய சுதந்திரப் போர் என்று அலங்காரமாகச் சொன்னாலும், அப்படி அந்த மன்னர்களெல்லாம் ஒற்றை அரசாகவோ, தேசமாகவோ தங்களை கருதியதில்லை. எனவே இந்திய தேசம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியதே இந்திய தேசிய காங்கிரஸ்தான்.

ஹியூம் உருவாக்கியதை பார்சி வகுப்பைச் சேர்ந்த தாதாபாய் நெளரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, கோபாலகிருஷ்ண கோகலே உள்ளிட்ட பலர் வளர்த்தெடுத்தாலும், பெரும்பாலும் செல்வாக்கான, மேல்தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களே காங்கிரஸில் பங்கேற்றனர். அவர்களுக்குள்ளே நிலவிய கருத்து மாறுபாடுகளால் காங்கிரஸ் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தது.

இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் ஜாதி ஒடுக்குமுறையில் சிக்கியிருப்பதும், மக்கள் பெரும்பாலோர் கல்வியின்றி, எழுத்தறிவின்றி இருப்பதெல்லாம் நவீன தேசத்தை உருவாக்குவதற்கு தடையானது என்பதை உணர்ந்த பலர், இந்தியாவில் சமூக மறுமலர்ச்சி ஏற்படவேண்டும்; அதுவரை தேவையான உரிமைகளைப் பெற பிரிட்டிஷ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர். இவர்கள் மிதவாதிகள் எனப்பட்டார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து உடனே கிளர்ச்சி செய்ய வேண்டும், ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டும் என்றெல்லாம் எண்ணியவர்கள் பலர் இருந்தார்கள். தீவிரவாதிகள் எனப்பட்டார்கள். இவர்களில் முக்கியமானவரான, சித்பவன் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பால கங்காதர திலகர், ஜாதி அமைப்பை ஆதரித்தவர். சமூகச் சீர்திருத்தத்தில் பிற்போக்கு, அரசியல் விடுதலையில் தீவிரவாதம் என்பது தீவிரவாதிகள் பலரின் நோக்காக இருந்தது எனலாம்.  

இதைத்தவிர காங்கிரஸில் முஸ்லிம்களுக்கும், இந்துக்களுக்கும் இடையிலும் பல பிரச்சினைகள் இருந்தன. காங்கிரஸ் கூட்டங்களில் இந்தியில் பேசினால் இந்தி தெரியாதவர்களுக்குப் புரியாது என்ற சிக்கல் இருந்தது. அதனால் ஆங்கிலத்திலேயே கருத்து பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.

காந்தியின் வருகைக்குப் பிறகுதான் காங்கிரஸ் வெகுமக்கள் பங்கேற்கும் ஒரு உண்மையான தேசிய இயக்கமாக மாறியது. அவரே அத்தனை மாறுபாடுகளையும் கடந்து காங்கிரஸை ஒருங்கிணைக்கும், வெகுமக்களை அணிதிரட்டும் ஆன்மிக பலம் கொண்ட தலைவரானார். மகாத்மா என்று கொண்டாடப்பட்டார். அவர் தலைமையின் கீழ் பல்வேறு கருத்தியல் போக்குகளைக் கொண்டவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள் அனைவரும் ஜாதி, மதம், மொழி கடந்து அணி திரண்டார்கள்.

அந்த வகையில் காங்கிரஸ் கருத்தியல் ஒரு நிலப்பரப்பு சார்ந்த தேசியமாக, அதாவது ஆட்சிப் பரப்பில் வசிக்கும் அனைவரும் ஒருங்கிணைந்து சுயாட்சி பெற நினைக்கும் அனைவரையும் உள்ளடக்கிய தேசியமாக வளர்ந்தது. இன்று வரை காங்கிரஸ் அதைப்போலவே பல்வேறு தரப்பினரும், கருத்தியல் போக்குகளும் பங்கெடுக்கக் கூடிய விரிவான ஒருங்கிணைப்பு அரசியலை முன்னெடுப்பதாகவே உள்ளது. இதுதான் முதல் தேசிய கட்சியின் வரலாறு.

இந்து ராஷ்டிரம் என்ற மதவாத தேசியம்

இந்திய பண்பாட்டின் குணாதிசயம் பல கடவுள்களை வழிபடுவதாகும். ஆங்கிலத்தில் Polytheism என்பார்கள். ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்களையும் வழிபடுவார். அதே சமயம் தன்னுடைய குல தெய்வத்துக்கு என்று முன்னுரிமை அளிக்கவும் செய்வார். குல தெய்வம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள கோயிலில் உள்ள தெய்வமாகவே இருக்கும். இந்த தெய்வங்கள் பலதும் தொன்மையானவை. எல்லா தெய்வங்களையுமே தொன்மையானதாக நம்புவதும் பழக்கம்.

பிரிட்டிஷ்காரர்களுக்கு இந்த அமைப்பை எப்படிப் புரிந்துகொள்வது என்பது சவாலாக இருந்தது. பொதுவாக இந்த மக்களை முஸ்லிம்கள் ஹிண்டு என்று அழைப்பதைக் கண்டார்கள். அதனால் இவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கும் மதத்தின் பெயர் ஹிண்டுயிசம் என்று கூறினார்கள். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், சாஸ்திரங்கள் இவையெல்லாம் எல்லா இந்துக்களுக்கும் பொதுவானவை என்று முடிவு செய்தார்கள்.

இதற்கு முன்னமே கூட பல்வேறு பகுதிகளில் வழிபடப்பட்டு வந்த கடவுளரை எல்லாம் சமஸ்கிருத புராண, இதிகாசக் கதைகளுடன் தொடர்புபடுத்தி ஒரு வலைப்பின்னலை உருவாக்கும் போக்கு பல்வேறு சாம்ராஜ்யங்களில் அரசியல் முக்கியத்துவம் பெற்ற பார்ப்பனர்களின் செயல்பாடாக இருந்தது.

சேயோனோ, அருகனோ முருகன் என்றானதுடன் ஸ்கந்தனாக அறியப்பட்டு, சிவனின் மகனாக, ஆறுமுகமாக கதையாடலில் இணைத்து விடுவதன் மூலம் இந்து புராணங்களின் கிளையாக சூரபத்மனை வதைத்த கதை உருவாகிவிடுவது உதாரணம்.

does India need a third national party Rajan Kurai

இன்னொரு வேடிக்கையான சமகால கதை ஒன்று இதனை மேலும் விளக்கும். பொள்ளாச்சிக்கு அருகே ஆனைமலையில் மசாணத்தம்மன் கோயில் அல்லது மாசாணி அம்மன் கோயில் என்று ஒன்று உள்ளது. மசாணம் அதாவது சுடுகாட்டு அம்மன் என்பதுதான் இதன் பொருளாகத் தோன்றுகிறது.

இந்த தெய்வம் படுத்த நிலையில் இருக்கும் பெரியதொரு சிலையாகும். இது ஆகம விதிகளின்படி அமைந்த கோயில் அல்ல. கூரைக் கொட்டகையாக இருந்தது, சமீபத்தில்தான் பிரபலமடைந்து பெரிய கட்டடமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

இந்த அம்மனுக்கு தலபுராண கதையாக ஊரில் ஒரு கதை உண்டு. அது அரசன் வளர்த்த விசேஷ சக்தி கொண்ட மாமரத்தின் கனியை ஒரு பெண் உண்டதால் கோபமடைந்த அரசன் அவளைக் கொன்றுவிட்டான், அந்த பெண் சுடுகாட்டு தெய்வமாகி விட்டாள் என்பதுதான் அந்தக் கதையின் சுருக்கம்.

இந்தக் கோயிலில் பத்தாண்டுகளுக்கு முன் இன்னொரு கதையும் கூறப்படுவதை கண்டோம். அது என்னவென்றால் ராமர்தான் இந்த அம்மனை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்பதுதான் அது. ராமர் மாசாணி அம்மனை வழிபடும் படங்கள் நிறைய கோயிலைச் சுற்றிய கடைகளில் விற்கப்பட்டது. இப்படியொரு கதை முதலில் கூறப்பட்டதாகத் தெரியவில்லை என்று சுற்றுவட்டாரத்தில் சில பெரியவர்கள் சொன்னார்கள்.

இது போலத்தான் பல்வேறு உள்ளூர் தெய்வங்களையும் சமஸ்கிருத புராண, இதிகாசங்களுடன் இணைத்து இந்து மதம் என்ற சங்கிலித் தொடர் உருவாக்கப் படுகிறது. ஒரு மாநிலத்தில் உள்ளது போன்ற கோயில்களும், கடவுள்களும் இன்னொரு மாநிலத்தில் காணப்பட மாட்டார்கள். வெங்கடாசலபதி என்ற தெய்வம் திருப்பதியில் மட்டுமே காணப்படுவது. இவருக்கான புராணம் தனியானது. ஆனால் இவரும் திருமால் எனப்படும் விஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறார்.  

இப்படியாக, பல்வேறு தெய்வ வழிபாடுகளும், பல்வேறு வாழ்க்கை முறைகளும் கொண்ட பெரும் மக்கள் திரளை இந்துக்கள் என்ற ஒற்றை மத அடையாளத்தினுள் பிரிட்டிஷ் ஆட்சி ஒருங்கிணைத்தது. தீவிரவாதத்தில், வன்முறையில் நாட்டம் கொண்டிருந்த  சாவர்க்கர் மத அடையாளத்தைக் கொண்டு தேசத்தை கட்டமைப்பதுதான் வலுவாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்துத்துவம் என்ற கொள்கையை உருவாக்கினார்.

இத்தாலிய பாசிசத்தால் கவரப்பட்ட மூஞ்சே, சாவர்க்கர் ஆகியோர் இந்து மகா சபா என்ற அமைப்பை உருவாக்கினர். ஹெட்கவார், கோல்வால்கர் ஆகியோர் ராஷ்டிரிய சுவம் சேவக் சங்க் என்ற அமைப்பை பாசிஸ்டுகளைப் பின்பற்றி உருவாக்கினர். ஹிட்லர், முசோலின் ஆகிய ராணுவ மயமாக்கலை முன்னெடுத்த ஐரோப்பியர்களை அவர்கள் முன்மாதிரியாகக் கொண்டார்கள்.  

நாடெங்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கிளைகளை அமைத்தாலும் அவர்களால் வெகுஜன ஆதரவை வெகுகாலம் பெற முடியவில்லை. முஸ்லிம் லீக் தனி நாடு கோரி பாகிஸ்தானாகப் பிரிந்து சென்ற பிறகும் இந்தியாவில் அனைவரும் உள்ளடக்கிய காங்கிரஸின் நிலப்பரப்பு தேசியமே செல்வாக்குடன் இருந்தது.

ஆனால் காலப்போக்கில் பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் அணி திரட்டல் என்பது மாநிலங்கள் சார்ந்த அரசியலை வலுப்படுத்தியபோது காங்கிரஸ் பலவீனமடைய தொடங்கியது. அந்த நேரத்தில் இந்து அடையாளவாத அடிப்படையில் ஒன்றிய அரசினை ஒற்றை அரசாக்கி வலிமைப்படுத்தக் கூடியதாக இந்து ராஷ்டிர சக்திகள் தலையெடுத்தன.

மாநில சுயாட்சியும், மாநில அரசியலுமே நாட்டின் எதிர்காலம்  

இந்து மத அடையாளத்தாலும் இந்தியாவில் அதிகாரத்தை ஒரு புள்ளியில் குவிக்க முடியாது என்பதே தெளிவு. இந்து, இந்தி, இந்தியா கட்டமைப்பால் இந்தியாவின் மொழி, பண்பாட்டு பன்மையை அழிக்க முடியாது. மேலும், மேலும் அடித்தள மக்கள் கல்வி பெறுவதும், பொருளாதார வளர்ச்சி பெறுவதும் தவிர்க்க முடியாமல் அதிகாரப் பரவலையே வலியுறுத்தும்.

இந்திய ஒன்றியத்தை கூட்டாட்சியாக நிலை நிறுத்த பல்வேறு மாநிலங்களிலும் இயங்கும் பொதுவான கட்சிகள் இருப்பதில் தவறில்லை. அவை மாநில கட்சிகளுடன் இணைந்து கூட்டணி காண்பது , கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் எனலாம்.

அந்த நோக்கில் இந்திய வரலாற்றில்  நிலப்பரப்பு தேசியம் பேசும் காங்கிரஸ், மத அடையாள தேசியம் பேசும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகள் தேசியக் கட்சிகளாக தங்களை கூறிக்கொள்வதே அதிகம். இதற்கு மேலும் மூன்றாவதாக எந்த கருத்தியலின் அடிப்படையில் ஒரு கட்சி எல்லா மாநிலங்களிலும் வளர்ந்து காலூன்றி மூன்றாவது தேசியக் கட்சியாக மாறும் என்று சிந்தித்தால், அது சாத்தியமும் இல்லை, தேவையும் இல்லை என்பது புரியும்.

கலையின் மனசாட்சி: நடாவ் லபீட் என்ற கலைஞனும், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படமும் 

ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: தவிக்கும் மக்கள் – உக்ரைன் அதிபர் கவலை!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கட்டுரையாளர் குறிப்பு:

does India need a third national party Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

+1
0
+1
0
+1
0
+1
6
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *