அதிமுக நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என்பதை மாற்றினார்களே அவர்களுக்கு மனசாட்சி இருக்கிறதா என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் பொதுக்குழுவை கூட்டிய அதே நேரத்தில் ஓபிஎஸ் கோவையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “அன்றைய பொதுக்குழுவில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். அதிமுகவின் பொருளாளராக 12 ஆண்டுகாலம் பணியாற்றினேன்.என்னிடம் இந்த பொறுப்பை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுக்கும் போது 2 கோடி ரூபாய் பாற்றாக்குறை இருந்தது. இரண்டே வருடத்தில் அது 4 கோடி ரூபாய் ஆனது. எனக்கு தனிப்பட்ட முறையில் நிதிசுமை இருக்கிறது, என் மீது வழக்குகள் நிறைய போட்டிருக்கிறார்கள், வழக்கறிஞர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். கட்சி நிதியில் இருந்து 2 கோடி ரூபாய் கொடுங்கள் என்று கேட்டார் ஜெயலலிதா. அந்த பணத்தை வாங்கி ஒரே மாதத்தில் திருப்பி கொடுத்தார். இதுதான் வரலாறு” என்றார்.
எடப்பாடி பழனிசாமியை தாக்கி பேசிய ஓபிஎஸ், “நான்கரை ஆண்டு முதலமைச்சராக இருந்த ருசி அவரை விடவில்லை. மீண்டும் வந்து இந்த நாட்டை கொள்ளையடித்து செல்ல வேண்டும் என்று தான் அங்கு பொதுக்குழுவை நடத்துகிறார். முதலமைச்சர் பதவி கொடுத்த அந்த அம்மாவையே (சசிகலா) கீழ்தரமாக பேசினார் எடப்பாடி.
முதலமைச்சராக உட்கார்ந்து கொண்டு எடப்பாடி என்னென்ன செய்தார் என்று எனக்குத் தெரியும். நான் கையெழுத்து போட்டதால் தான் கோப்புகள் எல்லாம் அடுத்தநிலைக்கு செல்லும். நான் அவிழ்த்துவிட்டேன் என்றால் எடப்பாடி திகார் சிறைக்குதான் செல்ல வேண்டும். அதெல்லாம் அரசாங்க ரகசியம்” என குறிப்பிட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஜனவரி 19 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு வர உள்ளது. அந்த வழக்கில் பொதுக்குழு மற்றும் பொதுக்குழு தீர்மானங்கள் உள்ளிட்ட மற்ற பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வரும். ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை தற்காலிகமாக தான் கொடுக்கப்பட்டிருந்தது.
என்னை கட்சியில் இருந்து நீக்கியதற்கு காரணம் என்ன? நான் என்ன குற்றம் செய்தேன். யாருக்கு நான் நம்பிக்கை துரோகம் செய்தேன் என்று சொல்ல முடியுமா? கிட்டத்தட்ட 16 மாதங்களாக அதிமுக ஒன்றுபட்டால் தான் வெற்றி பெற முடியும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். யாராவது கேட்கிறார்களா?
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தை பொறுத்தவரை சட்டமன்ற விதிகளில் எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பு மட்டும் தான் சட்ட விதிகளில் இருக்கின்றது. துணைத்தலைவர் என்ற பொறுப்பு இல்லை என்பதை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை எங்களுடைய நிலைப்பாடு, 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி தந்திருக்கிறார். அவர் மீண்டும் பிரதமராக வந்தால் நாடு நன்றாக இருக்கும்.
ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அதை நீக்குவதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அதை நீக்கினார்களே, மனசாட்சி இருக்கிறதா அவர்களுக்கு. எந்த காலத்திலும் அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாமியால் மேலே வர முடியாது” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய வைத்திலிங்கம், “அதிமுக தலைமை கழகம் ஜானகி அம்மாவின் சொத்து. அந்த தலைமை கழகத்திற்கு எம்.ஜி.ஆர் மாளிகை என்று பெயர் வைக்க வேண்டும் என்று ஜேசிடி பிரபாகர் சொன்னார். கீழ்த்தளத்தில் உள்ள அரங்கத்திற்கு ஜெயலலிதா பெயரையும், மேல் தளத்திற்கு ஜானகி அம்மாள் பெயரையும் வைக்க வேண்டும் என்றும் சொன்னோம். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு முகம் சுருங்கிவிட்டது.
போராடித் தான் எம்.ஜி.ஆர் மாளிகை என்று வைத்தோம். ஆனால் ஜெயலலிதா, ஜானகி அம்மாள் பெயர்களை வைக்கவில்லை. இன்றைக்கு ஜானகி அம்மாவிற்கு நூற்றாண்டு விழா என்று நாடகமாடுகிறார். உண்மையான அன்பு இருந்தால் அவர்கள் பெயரை வைக்க சொல்லுங்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கு திராவிடம், ஆரியம்னா என்னனே தெரியாது. திராவிடத்தின் வரலாறே தெரியாதவர் விபத்தில் முதலமைச்சர் ஆகிவிட்டார். பொதுச்செயலாளர் என்று அவரே பெயர் சூட்டிக் கொண்டார். சீக்கிரம் அவுட் ஆகிவிடுவார்” என்று தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
இனியேனும் பணியிடத்திற்கு ஏற்ற உடைகள் பரவலாகட்டும்!
IND vs SA 1st Test: 5 ரன்களுக்கு ஆட்டமிழந்த ரோஹித்… கனவாகவே போயிரும் போல புலம்பும் ரசிகர்கள்!