திருவள்ளுவர் தினமான நேற்று (ஜனவரி 16) காவி உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை பகிர்ந்து, அவரை சனாதனவாதி என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டிருந்தார்.
ஆளுநரின் இந்தப் பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அதிமுக எம்.பி தம்பிதுரை, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
தமிழக அரசு பயன்படுத்தி வரும் திருவள்ளுவரின் தற்போதைய புகைப்படமானது, கடந்த 1959-ஆம் ஆண்டு ஓவியர் கே.ஆர்.வேணுகோபால் சர்மாவால் வரையப்பட்டது. திருவள்ளுவர் படம் வரைந்து முடிக்கப்பட்ட பின், 1960-ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் அரசால் அஞ்சல் தலையாக வெளியிடப்பட்டது. திருவள்ளுவர் உருவப்படத்தை அப்போதைய ஆளுநராக இருந்த பிஷ்ணுராம் மேதி ஏற்றுக்கொண்டார்.
இதுதொடர்பாக 1960-ஆம் ஆண்டு பிப்ரவரி 17-ஆம் தேதி அவர் வெளியிட்டிருந்த வாழ்த்துச் செய்தியில், “தமிழ்க் கவிஞரையும், துறவியையும் போற்றுவதற்காக, வேணுகோபால் சர்மாவால் வரையப்பட்ட திருவள்ளுவர் திருவுருவப் படம், அஞ்சல் மற்றும் தந்தித் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
1959-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வேணுகோபால் சர்மாவால் வரையப்பட்ட வெள்ளாடை தரித்த திருவள்ளுவர் புகைப்படமானது, 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின் அரசுடைமையாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
வெள்ளாடை திருவள்ளுவர் புகைப்படம் திராவிட ஆட்சியாளர்களால் மாற்றப்பட்டது என்ற கருத்து நிலவி வரும் நிலையில், உண்மையில் காங்கிரஸ் ஆட்சியில் தான் திருவள்ளுவர் புகைப்படம் வரையப்பட்டு ஆளுநரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை 1960-ஆம் ஆண்டு வெளியான ஆளுநரின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்தசூழலில், காவி உடையணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தை ஆளுநர் ரவி பயன்படுத்தியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஸ்டார்ட்அப் தரவரிசைப் பட்டியல் : தமிழ்நாடு எங்கு உள்ளது?
தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!