தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா இன்று தனது 102-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தநிலையில் சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சுதந்திரப் போராட்டத் தியாகியும் மிகச் சிறந்த பொதுவுடைமைத் தலைவராகவும் திகழும் மரியாதைக்குரிய சங்கரய்யாவுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகைசால் தமிழர் விருதினை வழங்கி கௌரவித்தது.
இன்று 102 வது பிறந்த நாள் காணும் சங்கரய்யா மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்ற பொழுது ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் காரணமாக அவர் கல்லூரித் தேர்வினை எழுத முடியவில்லை. இந்தியா விடுதலை பெறுவதற்கு, 12 மணி நேரங்களுக்கு முன்பாக தான் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று அவர் விடுதலை செய்யப்பட்டார்.
ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும் ஒரு மிகச்சிறந்த சுதந்திர போராட்ட தியாகியுமான சங்கரய்யாவுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
மகளிர் உரிமைத்தொகை: திருமாவளவன் கோரிக்கை!
டிஜிபி உத்தரவு : ரவுடிகளை வேட்டையாடி விளையாடும் தமிழக போலீஸ்!
“கலைஞரால் தான் தமிழகத்தில் தொழில் துவங்கினோம்” – ஷிவ் நாடார்
இது ஆரம்பம் தான்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெருமிதம்!