இன்று (நவம்பர் 13) காலை சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜியின் அறைக்குள் நுழைந்து அவரை கத்தியால் குத்தியிருக்கிறார் விக்னேஷ் என்ற இளைஞர்.
அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவர்களுக்கு மருத்துவமனைகளிலேயே பாதுகாப்பு இல்லை என்று மருத்துவர்கள் சங்கத்தினரும், அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், டாக்டரை ஏன் கத்தியால் குத்தினார் விக்னேஷ்? அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் பற்றி விசாரித்தோம்.
பதற்றத்தில் இருந்த விக்னேஷை காவல்துறை உயரதிகாரிகள் அமைதிப்படுத்தி, ’அந்த டாக்டர் மிகவும் நல்லவர் என்று எல்லாரும் சொல்கிறார்கள். ஏன் அவரை தாக்கினாய்? உன் பக்கம் நியாயம் இருந்தால் அதை பதற்றப்படாமல் சொல்” என்று கேட்டுள்ளனர்.
அதன் பிறகே விக்னேஷ் கடகடவென தனது கதையைச் சொல்லியுள்ளார்.
“சார் என் பெயர் விக்னேஷ். நான் சென்னையை அடுத்த புதிய பெருங்களத்தூரில் வசித்து வருகிறேன்.எனக்கு வயசு 26. ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன்.
எங்க அப்பா பெயர் மனோகர். மூன்று மாதத்துக்கு முன்பு இறந்துவிட்டார். எங்க அம்மா பெயர் பிரேமா. அவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
எனக்கு ரெண்டு தம்பிகள். லோகேஷ் ஆட்டோ ஓட்டுகிறான். இரண்டாவது தம்பி கமலேஷ் அப்பலோ மருத்துவமனையில் ஸ்கேன் டிபார்ட்மென்ட்ல வேலை பார்க்கிறான்.
எங்களுக்கு மருத்துவம் பார்க்க பெரிய அளவு வசதி இல்லை. அதனால, கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனையில கடந்த மே மாதத்தில் இருந்து காட்டி வருகிறோம். டாக்டர் பாலாஜிதான் என் அம்மாவுக்கு சிகிச்சையளித்தார்.
என் அம்மா அவ்வப்போது வலி தாங்காமல் வீட்டில் ரொம்ப கஷ்டப்படுகிறார். இதைப் பார்த்து நான் வேற எங்காவது காட்டலாமானு பேசியபோது, எங்கள் தாய் மாமாதான் விருகம்பாக்கத்தில் இருக்கிற ஜாக்குலின் மோசஸ் என்ற டாக்டர்கிட்ட போகச் சொன்னார்.
அவரிடம் அம்மாவை அழைத்துச் சென்றேன். எங்கள் அம்மாவை பரிசோதித்த டாக்டர், ‘கேன்சர் ஒவ்வொரு ஸ்டேஜுக்கு ஏத்த மாதிரி கீமோ ட்ரீட்மென்ட் கொடுக்கணும். அப்பதான் பேஷன்ட்டால அதை தாங்கிக்க முடியும். உங்க அம்மாவுக்கு கீமோதெரபி ஹெவியா கொடுத்திருக்காங்க. அதனால உங்க அம்மாவால வலி தாங்க முடியல. சபீதா மருத்துவமனைக்கு போங்க’ என கூறியனுப்பினார். சபீதாவில் ஒரு முறை கீமோதெரபி செய்ய 20 ஆயிரம் ரூபாய் கட்டணம்.
ஏற்கனவே எங்க அம்மாவோட கஷ்டம் ஒருபக்கம் என்றால், தனியார் மருத்துவமனையில் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து கீமோ பண்ணவேண்டும் என இன்னொரு கஷ்டம்.
இதனால் கோபமான நான், எங்கள் அம்மாவுக்கு கீமோதெரபி சிகிச்சை கொடுத்த டாக்டர் பாலாஜியைத் தேடி அந்த மருத்துவமனைக்கு போனேன்.
அக்டோபர் மாத கடைசியில் கிண்டி மருத்துவமனைக்கு போய் டாக்டர் பாலாஜியிடம், ‘எங்க அம்மாவுக்கு அவங்களுக்கு தாங்க முடியாத அளவுக்கு கீமோ கொடுத்திருக்கீங்கனு இன்னொரு டாகடர் சொல்றாரு. அதனால் தனியார் மருத்துவமனைக்கு போகச் சொல்லியிருக்காரு. ஒவ்வொரு தடவையும் 20 ஆயிரம் ரூபாய் செலவாகுமாம். நீங்கதான் அதுக்கு பணம் கொடுக்கணும்’ என்று கேட்டேன்.
அதற்கு டாக்டர் பாலாஜி, ‘நான் ஒழுங்காதான் ட்ரீட்மென்ட் கொடுத்தேன். நான் எதுக்காக பணம் கொடுக்கணும்?’ என என்னை திட்டி அனுப்பினார்.
அதற்குப்பிறகு எங்கள் அம்மா கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. இன்று (நவம்பர் 13) காலை என் அம்மாவால் வலி தாங்கமுடியவில்லை. மூச்சுத் திணறலோடு அழ ஆரம்பித்துவிட்டார்.
இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாகி மறுபடியும் அந்த டாக்டரை பார்க்க கிண்டி பன்னோக்கு மருத்துவமனைக்கு போனேன்.
இன்று காலை 10.40 மணிக்கு ஆஸ்பத்திரிக்குள்ள போனேன். அங்கே ஆறு மாதத்துக்கு மேலாக என் அம்மாவுக்கு ட்ரீட்மென்ட் எடுத்ததால், டாக்டர் பாலாஜி ரூம் எங்கே இருக்கிறது என எனக்கு நன்றாகத் தெரியும்.
அவர் ரூமுக்குள் போய், ’அம்மாவுக்கு பிரைவேட் ஆஸ்பத்திரியில கீமோ பண்ணனும். 20 ஆயிரம் ரூபாய் உடனே கொடுங்கன்’னு கேட்டேன்.
ஆனால், டாக்டர் பாலாஜி, ‘உன்னை உள்ள விட்டதே தப்பு. இதுல பணம் வேற மிரட்டி கேக்குறியா?’ என கோபமாகக் கேட்டார்.
நானும் பதிலுக்கு கோபமாக பேசினேன். ‘நீங்க எங்க அம்மாவுக்கு தப்பான சிகிச்சை கொடுத்திருக்கீங்க. அதுக்கு என்கிட்ட ஆதாரம் இருக்கு. நீங்க பணம் கொடுக்கலைன்னா நான் போலீஸ்ல போய் புகார் கொடுப்பேன்’ என்று சொன்னேன்.
உடனே பதற்றமான டாக்டர் பாலாஜி ’நீ எங்க வேணும்னாலும் போ. யார்கிட்ட வேணும்னாலும் புகார் கொடு’ என கத்தினார்.
உடனே நான், ஏன் சத்தம் போடுறீங்க. பணத்தைக் கொடுங்க நான் போயிடுறேன் என சொன்னேன். அப்போது டென்ஷனாகி என் மீது கை வைத்து தள்ளிவிட்டார் டாக்டர் பாலாஜி.
அதற்குப் பிறகு நானும் அவரை கையால் தாக்கினேன். ஒரு கட்டத்தில் நான் வைத்திருந்த கத்தியை எடுத்து அவர் கழுத்தோரத்திலும் முதுகிலும் கிழிச்சுவிட்டேன். அவருக்கு ரத்தம் கொட்டிடுச்சு. எங்க அம்மாவுக்கு கீமோ பண்ண அவர் பணம் கொடுத்திருந்தார்னா நான் சண்டை போட்டிருக்கவே மாட்டேன் சார்…” என்று போலீஸிடம் கதறி அழுது வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் 26 வயது இளைஞர் விக்னேஷ்.
இவர் கொடுத்த வாக்குமூலத்தை முதல்வர் ஸ்டாலினுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார்கள் போலீஸார்.
-வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எம்.எல்.ஏ-வை மிரட்டிய 17 வழக்குகளில் தேடப்படும் ரவுடி கைது!
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையம் வார்னிங்!