அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவர்கள் தான் தெரிவிப்பார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் உலக வெண்புள்ளிகள் தினத்தை முன்னிட்டு இன்று (ஜூன் 26) நடைபெற்ற விழிப்புணர்வு உறுதியேற்பு நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மாணவர்களிடையே வெண்புள்ளி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், ”வெண் புள்ளிகள் விழிப்புணர்வு 20 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்பட்டு வருகிறது.
உத்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் வெண் குஷ்டம் என்ற பெயர் மாற்றி வெண் புள்ளிகள் என்று சொல்ல வேண்டும்.
வெண்புள்ளிகள் பாதித்தவர்களை பள்ளிகளில் பாகுபாடு பார்க்க கூடாது என்று ஒரு அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.
2030 க்குள் தொழு நோய் இல்லா தமிழ்நாடு என்ற நிலையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
தொடர்ந்து, ஆஷா பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் அறிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர்,
”அதை பார்த்தால் நகைப்பு தான் வருகிறது. ஆஷா பணியாளர்கள் நேரடியாக பணியில் சேர்க்கப்பட்டவர்கள் இல்லை. ஒன்றிய அரசின் தேசிய நலவாழ்வு குழுமம் சார்பில் அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு முன் வாங்கிய ஊதியத்தை விட 2 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. தொற்றா நோய்க்கு உதவினால் 500 ரூபாய் கூடுதலாக ஊக்கத் தொகை வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் மூலம் 6,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது” என்றார்.
தொடர்ந்து, மருத்துவப் பேராசிரியர்களுக்கான கலந்தாய்வை விரைந்து நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை குறித்த கேள்விக்கு,
“உதவி பேராசிரியர்களை இணைப் பேராசிரியர்களாக பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 4 ஆம் தேதி தொடங்க உள்ளது. 6 ஆம் தேதி தீர்ப்பு வர உள்ளது.
சில மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாகத் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் ஸ்டான்லி, தர்மபுரி, திருச்சி ஆகிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 36 மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது” என்றார்.
கேரளாவில் மர்ம காய்ச்சல் குறித்த கேள்விக்கு,
”இதுவரை எந்த மர்ம காய்ச்சலும் தமிழகத்தில் இல்லை. வந்தால் பாதுகாப்போம். எல்லை ஓர பகுதிகளில் 13 இடங்களில் தொடர்ச்சியாக கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் ஓய்வில் உள்ளார். டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவர்கள் தான் தெரிவிப்பார்கள்” எனக் கூறினார்.
அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள்: சஸ்பென்ஸ் வைக்கும் ஜெயக்குமார்
கடிதம் எங்கே? – செந்தில் பாலாஜி வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி!