நேற்று (ஜூன் 9) பதவியேற்ற மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. சந்திரசேகர் பெம்மாசானியே அதிக சொத்து மதிப்புடைய அமைச்சர் ஆவார்.
3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பு
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, நேற்று (ஜூன் 9) டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்து நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமராக மோடி 3வது முறையாக பதவியேற்றார். இவருடன் சேர்த்து 72 அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்த அமைச்சரவையில் அதிக சொத்து மதிப்புடையவர் தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி.யான சந்திரசேகர் பெம்மாசானி ஆவார்.
சந்திரசேகர் பெம்மாசானி
ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக குண்டூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சந்திரசேகர் பெம்மாசானி. இவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமைச்சராகுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். இவர்தான் மக்களவையின் பணக்கார உறுப்பினராகவும், மத்திய அமைச்சர்களில் பணக்கார அமைச்சராகவும் உள்ளார்.
ஆந்திர மாநிலம் தெனாலி மாவட்டம் புரிபாலம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் பெம்மாசானி. இவர் 1993-94-ல் நடந்த EAMCET தேர்வில் தேசியளவில் 27வது இடத்தை பிடித்தார். இதையடுத்து அவர் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். பின்னர், அமெரிக்கா பென்சில்வேனியாவில் உள்ள கீசிங்கர் மெடிக்கல் மையத்தில் எம்டி பட்டம் பெற்றார்.
அங்குள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்-சினாய் மருத்துவமனையில் மருத்துவராக சுமார் ஐந்து ஆண்டுகள் சந்திரசேகர் பெம்மாசானி பணியாற்றினார்.
அதன் பின் இந்தியா வந்த சந்திரசேகர் குடும்ப தொழில்களைக் கவனித்து வந்தார். கடந்த 2003-ல் UWorld என்ற ஆன்லைன் கல்வி கற்கும் நிறுவனத்தைத் தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மருத்துவரான சந்திரசேகர் பெம்மாசானி, தெலுங்கு தேசம் கட்சி சார்பாக ஆந்திராவின் குண்டூரில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்.
சந்திரசேகர் பெம்மாசானி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், இவருக்கு சுமார் ரூ. 5,785 கோடி மதிப்புள்ள குடும்பச் சொத்துக்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், பெம்மாசானிக்கான தனிப்பட்ட சொத்துக்கள் ரூ.2,448.72 கோடியும், அவரது மனைவிக்கு ரூ. 2,343.78 கோடியும், அவரது குழந்தைகள் பெயரில் ரூ. 1,000 கோடியும் சொத்துக்கள் உள்ளது.
இருந்தபோதும், அமெரிக்காவின் ஜேபி மோர்கன் சேஸ் வங்கியில் சந்திரசேகர் பெம்மாசானிக்கு ₹ 1,138 கோடி கடன் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சந்திரசேகருக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பல நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் பங்குகள் உள்ளன.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜி மனுக்கள் மீது ஜூன் 14ஆம் தேதி தீர்ப்பு!
அதிமுக தோல்விக்கு காரணம் என்ன? : மதுரை ஆதீனம் விளக்கம்!