நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணி – காங்கிரஸ் கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது என்ன நடந்தது என்று எம்.பி.ஜோதிமணி விளக்கமளித்துள்ளார்.
அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று(டிசம்பர் 19) நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாஜக எம்.பி.க்களும் காங்கிரஸுக்கு எதிராக நாடாளுமன்ற நுழைவு வாயிலில் படிக்கட்டில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் காங்கிரஸ் – பாஜகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு இரு பாஜக எம்.பி.க்களுக்கு தலையில் அடிபட்டுள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தள்ளியதால் தான் அவர்களுக்கு தலையில் அடிபட்டதாக பாஜகவினர் கூறுகின்றனர்.
மறுபக்கம் ராகுல் காந்தியையும், மல்லிகார்ஜுன கார்கேவையும் பாஜகவினர் தள்ளிவிட்டனர் என்றும் இதில் கார்கேவுக்கு காலில் அடிபட்டுள்ளதாகவும் காங்கிரஸார் கூறுகின்றனர்.
இதுதொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ நாடாளுமன்ற வளாகத்தில் அமைதியான முறையில் பேரணியாக வந்த எங்களை உள்ளே நுழைய விடாமல் பாஜக எம்.பிகள் வழிமறித்து தடுத்தனர்.
பிரியங்கா காந்தியோடு நான் உட்பட பல பெண் எம்.பிக்கள் போராட்டத்தின் முன்வரிசையில் இருந்தோம். அம்பேத்கர் சிலையிலிருந்தே பெண் எம்.பிக்கள் தான் பிரியங்கா காந்தி முன்னிலையில் முன்வரிசையில் சென்றோம்.
எங்களுக்குப் பிறகுதான் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட ஆண் எம்.பிக்கள் அணிவகுத்து வந்தனர். பாஜக எம்.பிக்கள் எங்களை நாடாளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் வழிமறித்ததால் நாங்கள் தரையில் அமர்ந்தோம்.
அப்போது ராகுல்காந்தி எங்களுக்கு அருகே நின்று கொண்டிருப்பதை வீடியோவில் பார்க்கலாம். அம்பேத்கரை அவமதித்து விட்டு , அதிலிருந்து தப்பிக்க ராகுல்காந்தி மீது பழிசுமத்தி ஒரு பொய்யை வழக்கம்போல பரப்புகின்றனர்.
பொய் புகார் அளித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்வரிசையில் சென்ற பெண் எம்.பி.க்களிடம் மோசமாக நடந்துகொண்டனர். நாடாளுமன்றத்துக்குள்ளே செல்ல விடாமல் பிடித்து தள்ளினர்.
இதில் மல்லிகார்ஜுனே கார்கேதான் கீழே விழுந்தார். அவருக்கு ஒரு நாற்காலி எடுத்துவந்து போட்டு உட்காரவைத்தோம்” என்று கூறினார்.
மேலும் அவர் “நேற்று நாங்கள் வழக்கமாக செல்லும் வழியில் செல்லவில்லை. தள்ளுமுள்ளு காரணமாக CISF பாதுகாவலர்கள் வந்துதான் எங்களை வேறு வழியில் அழைத்துச் சென்றனர். அப்போது மேலே ஏறி நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், பாஜக எம்.பி.க்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.
“மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.க்கள் ஒன்று அவர்களாகவே கீழே விழுந்திருக்க வேண்டும். அல்லது பாஜகவினரே பிடித்து தள்ளியிருக்க வேண்டும். இந்த இரண்டு வாய்ப்புகளை தவிர வேறு எதுவும் அங்கு நடக்க வாய்ப்பே இல்லை. வீடியோவை பாருங்கள் ராகுல் காந்தி எங்கு நிற்கிறார் என்று அனைவருக்கும் தெரியவரும்.
அமித்ஷா தான் பேசியதை ஏஐ மூலம் சித்தரித்துவிட்டார்கள் என்று சொல்கிறார். இந்த பெரிய பொய்யோடு ஒப்பிடும் போது ராகுல் காந்திதான் பாஜக எம்.பி.க்களை தள்ளிவிட்டார் என்பது சின்ன பொய்யாகத்தான் எனக்கு தெரிகிறது.
ராகுல் காந்திதான் டார்கெட்டாக உள்ளார். அவரை பார்த்து பாஜக பயப்படுகிறது. அதனால் தான் அவர் மீது பொய்யான தகவலை பரப்புவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். ராகுல் காந்தி மீது எந்தவிதமான நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கப்படலாம். அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என கூறினார்.
இந்நிலையில் இன்று கடைசி நாளாக நாடாளுமன்றம் கூடவிருக்கும் நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் உள்ளிட்டோர் அமித்ஷா பேசியது குறித்து விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“என்னை கொலை செய்ய சதி” : அதிகாலை 3 மணிக்கு போலீசுக்கு எதிராக சி.டி.ரவி போராட்டம்!
டாப் 10 செய்திகள்: ஈரோட்டில் ஸ்டாலின் முதல் அமித்ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் வரை!