ஹிட்லர் வென்ற கதை தெரியாதா? மோடி மீது ராகுல் விமர்சனம்

அரசியல்

“ஹிட்லரும் தான் வெற்றி பெற்றார், அவர் எப்படி வெற்றி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியாதா?” என்று ராகுல்காந்தி மத்திய அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். விலைவாசி உயர்வைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் இன்று (ஆகஸ்டு 5) டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி சென்றனர். அதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசினார் ராகுல் காந்தி.

5 பேரை காப்பாற்றவே அரசு

அப்போது, இந்தியாவில் ஜனநாயகம் என்பதே இல்லாமல் போய்விட்டதாக குற்றம் சாட்டினார். ”விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், சமூகத்தில் வன்முறை போன்றவை பற்றிய கேள்விகள் எழுப்பப்படக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம். 5 பேரின் நலனைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படும் சர்வாதிகார அரசாங்கம் இது. இந்த சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டார் அவர்.

நிர்மலா நிதியமைச்சர் அல்ல… பாஜகவின் ஸ்பீக்கர்

நூற்றாண்டாக கட்டமைக்கப்பட்ட இந்திய ஜனநாயகத்தை பாஜக உடைத்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இந்திய பொருளாதாரத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி எந்த புரிதலும் நிதி அமைச்சருக்கு இல்லை என்றும் பாஜக-வின் ஸ்பீக்கராக மட்டுமே அவர் செயல்பட்டு வருவதாகவும் ராகுல் கூறினார்.

என்னை தாக்குங்கள்

மேலும் செய்தியாளர்களிடம், நீங்கள் விரும்பும் அனைத்து கேள்விகளையும் கேளுங்கள். அனைத்திற்கும் பதிலளிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறிய அவர், ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்தை எதிர்ப்பதே எனது வேலை என்றார். இதனால் நான் கடுமையாகத் தாக்கப்படுவேன். ஆனால் அதை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன் என்றும் கூறினார்.

ஹிட்லரும் தான் ஜெயிச்சார்

“ஜெர்மனியில் ஹிட்லரும் தான் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார். அவர் எப்படி வெற்றி பெற்றார் என்பது தெரியும். ஜெர்மனியின் அனைத்து நிறுவனங்களையும் அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்,முழு அமைப்பையும் எனக்குக் கொடுங்கள், தேர்தல்களில் எப்படி வெற்றி பெறுகிறேன் என்பதை நான் உங்களுக்குக் காண்பிப்பேன்” என்று மத்திய அரசை ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்தார்.

காந்தி குடும்பம் தொடர்ந்து போராடும்

தொடர்ந்து, “நாட்டிற்காக என் குடும்பம் உயிர் தியாகம் செய்தது. இது ஒரு குடும்பம் மட்டுமல்ல, இது ஒரு சித்தாந்தம். காந்தி குடும்பத்தை மட்டும் ஏன் தாக்குகிறார்கள்? நாங்கள் ஒரு சித்தாந்தத்திற்காக போராடுவதால் அவர்கள் எங்களை தொடர்ந்து ஒடுக்க நினைக்கிறார்கள். நாங்கள் ஜனநாயகத்திற்காகவும், மத நல்லிணக்கத்திற்காகவும் தொடர்ந்து போராடுவோம்” என்று குறிப்பிட்டார் ராகுல்காந்தி.

கலை.ரா

நிர்மலா சீதாராமன் – பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு… பின்னணி என்ன?

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *