கவுன்சிலர்களைப் பற்றி குறிப்பாக சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களைப் பற்றி பொது மக்கள் நெஞ்சங்களில் ஒரு நிரந்தர பிம்பம் இருக்கிறது. அது என்னவென்றால் கமிஷன் கேட்பார்கள், வசூல் செய்வார்கள், மிரட்டுவார்கள் என்பதுதான். Do you know the history of Kalingapatti?
ஆனால் சென்னை மாநகராட்சியில் 35 ஆவது வார்டு கவுன்சிலராக இருக்கும மதிமுகவின் வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஜீவன் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக தரமான சம்பவத்தை நடத்திக் காட்டியிருக்கிறார்.
ஜீவனுடைய 35 வார்டுக்கு உட்பட்ட சென்னை கொடுங்கையூர் டி.ஹெச். சாலையில் புதிய டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட ஏற்பாடுகள் நடந்ததன. இந்த புதிய டாஸ்மாக் கடையால் அப்பகுதி பெண்கள், மாணவர்கள், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கவுன்சிலர் ஜீவனிடம் மக்கள் மனு கொடுத்திருக்கிறார்கள்.
ஜீவன் அந்த மனுக்களை எல்லாம் தன் கைப்பட எடுத்துக் கொண்டு, தானும் ஒரு மனு எழுதிக் கொண்டு டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன் ஐ.ஏ.எஸ்.சிடம் மனு கொடுக்க நவம்பர் 20 ஆம் தேதி அவரது அலுவலகத்துக்கு சென்றிருக்கிறார்.
‘எங்க வார்டுல புதுசா வர இருக்குற டாஸ்மாக் கடையை அனுமதிக்கக் கூடாதுனு மக்கள் என்கிட்ட புகார் சொல்லியிருக்காங்க சார்’ என்று மதிமுக கவுன்சிலர் ஜீவன் புகார் மனுக்களை கொடுக்க, அதை வாங்கிய விசாகன் ஐ.ஏ.எஸ், தனது எதிரே அமர்ந்திருந்த இன்னொரு அதிகாரியிடம்…
‘எங்கே கடை திறக்க பர்மிஷன் கொடுத்தாலும் எதிர்க்குறதுக்குன்னே இப்படி சில பேர் வந்துடறாங்க. நாட்ல ஒரு கோடி பேர் குடிக்கிறாங்கனு இவங்களுக்கெல்லாம் தெரியுமா தெரியாதா?” என்று கவுன்சிலர் ஜீவனை வைத்துக் கொண்டே ஜாடை மாடையாக பேசியிருக்கிறார் டாஸ்மாக் எம்.டி. விசாகன் ஐ.ஏ.எஸ்.
அப்போது கவுன்சிலர் ஜீவன், “சார்… ஒரு குடும்பத்துல சராசரியா 3 பேர் குடிக்கிறாங்கனு கூட ஒரு புள்ளி விவரம் இருக்கு. அதுவும் எனக்குத் தெரியும். ஒரு கோடி பேர் குடிகாரனா இருக்கான்னா அதுக்கு யார் காரணம்? நீங்கதானே… கடையை இப்படி திறந்துக்கிட்டே இருந்தா குடிக்க வரத்தான் செய்வாங்க? என் வார்டை சுற்றி ஒரு கிலோமீட்டர் ரவுண்டிங்ல சுமார் 15 டாஸ்மாக் கடை இருக்கு. மதுக் கடைகளை அதிகம் திறந்து மக்களை குடிகாரர்களாக ஆக்க வேணாம்னு என்கிட்ட பல அமைப்புகள், பள்ளிகள் மனு கொடுத்திருக்காங்க. என்னை மக்கள் தேர்தல்ல ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்திருக்காங்க. அவங்க கோரிக்கையை நான் உங்ககிட்ட கொடுத்திருக்கேன்” என்றார் சற்று கோபமாக.
உடனே முகம் சிவந்த டாஸ்மாக் எம்.டி. விசாகன், ‘ஒகே.நீங்க கெளம்புங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு”என்று கூறியுள்ளார்.
இதை எதிர்பாராத ஜீவன், “நான் வேலை வெட்டி இல்லாம உங்களைப் பார்க்க வரலை. என் வார்டு மக்கள் பிரச்சினைக்காகத்தான் வந்திருக்கேன். மக்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுங்க. மீறி அந்த டாஸ்மாக் கடையை தெறந்தா, அதை எப்படி எதிர்கொள்ளணும்னு எனக்கு தெரியும். எங்கள் தலைவர் வைகோ சொந்த ஊரான கலிங்கப்பட்டியில டாஸ்மாக் கடை எப்படி மூடப்பட்டதுனு வரலாறு உங்களுக்கு தெரியுமா? தெரியலைன்னா தெரிஞ்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்கங்க” என்று கவுன்சிலர் ஜீவன் ஆவேசமாக பேசியபடியே விருட்டென எழுந்து கிளம்பிவிட்டார்.
அதன் பின் டாஸ்மாக் எம்.டி. விசாகன், ‘கலிங்கப்பட்டியில் என்ன நடந்தது?’ என விசாரித்திருக்கிறார்.
2015 அதிமுக ஆட்சியில் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி வைகோவின் தாயார் மாரியம்மாள் மற்றும் ஊர் பொது மக்கள் போராட்டம் நடத்தினார்கள். வைகோவும் போராட்டத்தில் குதித்தார். தொண்டர்களும் ஊர் மக்களும் டாஸ்மாக் கடையை அடித்து உடைத்தனர். போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த கடையை அகற்ற நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. கடைசியில் கடையை அகற்றினர் டாஸ்மாக் நிர்வாகத்தினர்.
இந்த, ‘கலிங்கப்பட்டி வரலாறு’ டாஸ்மாக் எம்.டி. விசாகனுக்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கிடையே மதிமுக மாவட்டச் செயலாளரும் கவுன்சிலருமான ஜீவன் டாஸ்மாக் எம்.டி. விசாகனுடன் நடந்த சந்திப்பு விவரங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் எழுதிவிட்டார்.
இந்நிலையில் அடுத்த நாளான நவம்பர் 21 ஆம் தேதி டாஸ்மாக் வடசென்னை டாஸ்மாக் மண்டல அலுவலகத்தில் இருந்து அதிகாரி ஒருவர் கவுன்சிலர் ஜீவனுக்கு அலைபேசி மூலம் தொடர்புகொண்டிருக்கிறார்.
’சார்.. உங்க பதிவை பாத்தேன். எம்.டி.க்கிட்டயும் எடுத்துச் சொன்னேன். அவர் உங்கக்கிட்ட தப்பான எண்ணத்துல பேசலை. ரெண்டு நாளா அவருக்கு உடம்பு சரியில்லாததால யாரையுமே பாக்கல. சென்னை கார்ப்பரேஷன் கவுன்சிலரா இருக்குறதால உங்களை மட்டும் பாத்து பேசியிருக்காரு. தப்பான எண்ணத்துல பேசலைனு உங்கக்கிட்ட எம்.டி. சொல்லச் சொன்னாரு சார். அதுமட்டுமல்ல உங்க உணர்வையும் மக்கள் உணர்வையும் மதிச்சு அந்த இடத்துல புதிய டாஸ்மாக் கடை திறக்கமாட்டோம்னும் சொல்லச் சொன்னாரு சார்’ என்று வடசென்னை மதிமுக மாசெவான கவுன்சிலர் ஜீவனிடம் உறுதியளித்திருக்கிறார் அந்த வடசென்னை மண்டல டாஸ்மாக் அதிகாரி.
இதுபற்றி மதிமுக மாவட்டச் செயலாளரும் மாமமன்ற உறுப்பினருமான ஜீவன்,
“கோரிக்கை வைத்த 24 மணி நேரத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் சார்பில் அந்த இடத்தில் புதிய மதுக்கடை அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை, கடை அமைக்கும் உத்தேசமும் இல்லை என்று கடிதமே எழுதியிருக்கிறார்கள்.
இது எனது தனிப்பட்ட முயற்சியின் வெற்றியல்ல என் உயிரினும் மேலான தலைவர் வைகோ அவர்களின் தம்பி என்பதால் எனது குரலில் இருந்த உறுதிக்கு கிடைத்த வெற்றி. ஒன்றுபட்ட வார்டு மக்களின் போராட்ட உணர்வுக்கு கிடைத்த வெற்றி! உத்தரவு பிறப்பித்த டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அவர்களுக்கு நன்றி” என்றார்.
வருமுன் காப்போம் என்ற அடிப்படையில், வர இருந்த டாஸ்மாக் கடையை விரட்டியடித்த மதிமுக மாசெவும் கவுன்சிலருமான ஜீவனை கொடுங்கையூர் மக்கள் புன்னகையால் வாழ்த்துகிறார்கள். Do you know the history of Kalingapatti?
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
Bigg boss 7 Day 52: சர்க்கரையால் ஏற்பட்ட மோதல்…மன்னிப்பு கேட்க மறுக்கும் தினேஷ்
திருநெல்வேலி: மூன்று திமுக கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்!
மாமன்ற உறுப்பினர் மற்றும் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அவர்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும். அரசு படிப்படியாக கடைகளை குறைப்போம் என்கிறது. அதற்கான பட்டியலையும் வெளியிடுகிறது. அதே நேரத்தில் புது கடைகளையும் திறக்க ஏற்பாடு செய்கிறது. இது ஒரு கொள்கை முரண். அரசு மக்கள் நலனில் கருத்தில் கொண்டு “இனிமேல் புதிய கடைகள் திறக்கப்படமாட்டாது” என அறிவிக்க வேண்டும். இதனால் சிலருக்கு தனிப்பட்ட முறையிலும் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படலாம். ஆனால் இந்த அரசு மக்கள் நலன் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இதை ஏற்று அறிவிக்க வேண்டும் என அன்புடன் அக்கறையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.