தமிழ்நாடு, கேரளா போன்று பஞ்சாப் மாநில அரசும் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கில் நெருப்புடன் விளையாடாதீர்கள் என ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருப்பது போல, பஞ்சாபில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும், ஆம் ஆத்மி அரசுக்கும் மோதல் போக்கு ஏற்பட்டிருக்கிறது.
பஞ்சாப் மாநில சட்டப்பேரவையைக் கூட்ட விடாமல் முடக்குவது, பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களை முடக்கி வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஆளுநர் ஈடுபட்டு வருவதாக உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு இன்று (நவம்பர் 10) தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி ஜேபி பரிதிவாலா, நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் செயல்பாடுகளை ஆளுநரால் எப்படி முடக்கி வைக்கமுடியும்? அரசு அனுப்பிய மசோதாக்களை எப்படிக் கிடப்பில் போட முடியும்? ஆளுநருக்கு இதுபோன்ற அதிகாரங்களைக் கொடுத்தது யார்?
சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்துவிட்டது என்பதாலேயே மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்கமாட்டேன் என்பது எப்படிச் சரியாகும்?. உங்களுடைய செயல்பாட்டின் தீவிர தன்மை புரிகிறதா?
கடந்த ஜூன் மாதம் நடந்த கூட்டத்தொடரை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது நெருப்புடன் விளையாடுவது போன்றது” என்று பஞ்சாப் ஆளுநருக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலின்றி நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை கூட்டம் செல்லும் என்று தெரிவித்த நீதிபதிகள், பஞ்சாப் அரசும், மாநில ஆளுநரும் செயல்படுகிற போக்குகள் மிகவும் கவலைக்குரியது, இருதரப்புமே அரசியல் சாசனத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுகின்றன என்றும் தெரிவித்தனர்.
மேலும், நிலுவையில் உள்ள மசோதாக்கள் மீதும் முடிவெடுக்க ஆளுநருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், ”இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது” என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிடி பொதிகை பெயர் மாற்றம்: எல்.முருகன் அறிவிப்பு!
கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் எவ்வளவு?