Do not change the governor Stalin speech

ஆளுநரை மாத்திடாதீங்க : ஸ்டாலின் பேச்சு!

அரசியல்

ஆளுநர் ஆர்.என்.ரவியை மாற்றி விட வேண்டாம் என்று பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்

திமுக வழக்கறிஞர் புருஷோத்தமன் இல்ல திருமண விழா இன்று (அக்டோபர் 27) சென்னை எழும்பூரில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்கள் பூர்ணிமா- ராதாகிருஷ்ணனை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

அப்போது அவர், “இதுபோன்ற சீர்திருத்த திருமணங்கள் 1967ஆம் ஆண்டுக்கு முன்னால் நடைபெறும் என்று சொன்னால், அதற்கான சட்ட அங்கீகாரத்தை நாம் பெற்றிருக்கவில்லை.

இந்த நிலையை மாற்றிட வேண்டும் என்பதற்காகத்தான் அண்ணா 1967ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்று, சட்டமன்றத்தில் முதல் முதலாக முதல்வராக வந்தபோது சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை பெற்று தந்தார்.

இது சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணம் மட்டுமல்ல, ஒரு தமிழ் திருமணம் ஆகும்.

தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்று தந்தவர் கலைஞர். அந்த அங்கீகாரத்தோடு இது தமிழ் திருமணமாக நடந்திருப்பது எல்லோருக்கும் மகிழ்ச்சி” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “முதன் முதலில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ராஜீவ் காந்தி சொன்னபோது, எந்த மாநிலமும் அதை நிறைவேற்ற முன்வரவில்லை.

முதல் மாநிலமாக கலைஞர் முதல்வராக இருந்தபோது நிறைவேற்றப்பட்டது. இன்று அது 40% ஆக உள்ளது. போகிற போக்கை பார்த்தால் ஆண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதை நான் வேதனையோடு சொல்லவில்லை மகிழ்ச்சியோடு சொல்கிறேன். இதுதான் திராவிட மாடல். திராவிடம் என்றால் என்னவென்று இன்று யார் யாரோ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரிய பெரிய பதவியில், பெரிய பெரிய மாளிகையில் உட்கார்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த பதவியே வேஸ்டான பதவி.

திராவிடம் என்றால் உங்களை என்னவென்று கேட்க வைத்திருக்கிறது பாருங்கள் அதுதான் திராவிடம்.

இப்பொழுது இரண்டு நாட்களாக புருடா எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். என்னை பொருத்தவரை இப்படி புருடா பேசிக்கொண்டு திராவிடம் என்றால் என்னவென்று கேட்டுக் கொண்டிருக்கிறார் பாருங்கள் அவரே தொடர்ந்து இந்த பதவியில் இருக்கட்டும்.

அது நமக்கு பிரச்சாரத்துக்கு வலுவாக சேர்ந்து கொண்டே இருக்கும். நான் ஒன்றிய அரசின் பொறுப்பில் இருக்கக்கூடிய பிரதமரிடமும் உள்துறை அமைச்சரிடமும் கேட்டுக் கொள்ள வேண்டியது, இங்கு இருக்கும் ஆளுநரை மட்டும் மாற்றி விடாதீர்கள் என்பதுதான்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் வரையாவது அவர் இருந்துவிட்டுப் போகட்டும். எங்களுக்கு அதில் பல சவுகரியம் இருக்கிறது.

அவர் எதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் மக்கள் அதை பொருட்படுத்தவில்லை. இன்று சோசியல் மீடியாவில் வந்து கொண்டிருக்கும் செய்திகளை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

கருத்துக் கணிப்புகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. வரவிருக்கக் கூடிய ஐந்து மாநில தேர்தலில் நிச்சயமாக இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். அதற்கான சூழ்நிலைகள் உருவாகி கொண்டு இருக்கிறது” என்றார்.

“ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கக்கூடிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சூழ்நிலையும் உருவாகிக்கொண்டிருக்கிறது. 2024 தேர்தலுக்கு தயாராக வேண்டும்” என்றும் கூறினார் முதல்வர் ஸ்டாலின்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

’ஜப்பான்’ எப்படிப்பட்ட படம்?: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பதில்!

Asian Para Games 2023: பதக்க வேட்டையை தொடங்கிய இந்தியா!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *