மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையை அடுத்து தற்போது வெள்ள நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் திமுக இளைஞர் அணி மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக இன்று (டிசம்பர் 8) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2007-ல் நெல்லையில் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், திமுக இளைஞரணியின் 2-வது மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று நடைபெறும் முதல் மாநாடு என்பதாலும்,
முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது என்பதாலும் இதனை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
மாநாடு குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்த இருசக்கர வாகனப் பேரணியை கன்னியாகுமரியில் இருந்து கடந்த மாதம் 15-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதனையடுத்து திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன் முன்னோட்டமாக மாநாட்டுக்கான அழைப்பிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகனிடம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அளித்து வாழ்த்து பெற்றனர்.
சுமார் 10 லட்சம் பேர் இதில் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்புடன் தொடர்ந்து இளைஞர் அணி மாநாடு தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.
தொடர்ந்து வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் 5வது நாளாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் முதல்வர் முதல் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள் என அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு, அடுத்த சில நாட்களுக்கு வெள்ள நிவாரண பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக சேலத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக வரும் 24ஆம் தேதி இளைஞரணி மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் அடுத்த முதல்வர் யார்?
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்
சனாதன ஆரம்பமா! 😋