தி.மு.க. இளைஞர் அணியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட, மாநில, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் இன்று சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அங்கம் வகித்தனர்.
கூட்டத்தில் சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது, மணிப்பூர் விவகாரம் குறித்து கண்டுகொள்ளாமல் இருக்கும் பிரதமர் மோடிக்கு கண்டனம் உள்ளிட்ட13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் : 1
முத்தமிழறிஞரின் புகழ் பரப்பும் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி!
ரூ. 215 கோடி மதிப்பில், மதுரையில் `கலைஞர் நூற்றாண்டு நூலக’த்தையும், தமிழ்நாட்டின் கலை – இலக்கியம் – அரசியல் எனப் பல்வேறு துறைகளில் பங்காற்றிய கலைஞரின் வாழ்வையும் தொண்டையும் வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லிடும் வகையில் திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள `கலைஞர் கோட்ட’த்தையும் உருவாக்கிய, முதல்வர் ஸ்டாலினுக்கு இளைஞர் அணியின் இந்த மாவட்ட – மாநில – மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் : 2
திராவிட மாடலின் மணிமகுடம்!
இந்தியாவிற்கு முன்னோடியான திட்டங்களால் வளர்ச்சிமிகு பாதையில், தமிழ்நாட்டை வளர்த்தெடுக்கும் நம் திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இளைஞர் அணியின் மாவட்ட – மாநில – மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் : 3
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!
சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் வாயிலாக ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட’த்தின் வெற்றிக்காக உழைத்து, தகுதி வாய்ந்த அனைத்து மகளிரையும் இந்த உரிமைத் தொகை சென்றடையும் வகையில், செயல்பட்டு வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், உதயநிதி ஸ்டாலினுக்கு இந்தக் கூட்டம் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறது.
தீர்மானம் : 4
புதிய நிர்வாகிகள் நியமனம்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் திமுகவின் எதிர்காலத்திற்காகவும் முதல்வர் ஸ்டாலினால் உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்டது தான் இளைஞர் அணி. 43 ஆண்டுகள் கடந்து இயக்கத்துக்கு புது இரத்தம் பாய்ச்சி அவர்களை வளர்த்தெடுக்கும் நாற்றங்காலாய் விளங்கும் இளைஞர் அணியின் பணிகளை மாவட்ட – மாநில – மாநகர அளவில் ஒருங்கிணைக்கக் கூடிய புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க முழு ஒத்துழைப்பை வழங்கிய தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கும் இந்தக் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் : 5
இல்லந்தோறும் இளைஞர் அணி!
திராவிட இயக்கத்தின் கொள்கைப் பாதையில் இளைஞர்களை வளர்த்தெடுக்கும் பாசறையாகச் செயலாற்றி வருகிறது கழக இளைஞர் அணி. அத்தகைய செயலாற்றல் மிகு அணியில் சேர, ஆர்வமுள்ள 16 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை, இல்லந்தோறும் சென்று அணியில் உறுப்பினராக இணைத்திடும், `இல்லந்தோறும் இளைஞர் அணி’ என்ற முன்னெடுப்பை முதன்மையானதாக ஏற்றுச் செய்திட வேண்டும் என மாவட்ட-மாநில-மாநகர- அமைப்பாளர்-துணை அமைப்பாளர்களை இந்தக் கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 6
கலைஞர்- 100 – திராவிட மாடல் பயிற்சிப் பாசறை!
234 தொகுதிகளிலும் இளைஞர் அணி சார்பில், திராவிட மாடல் பயிற்சிப் பாசறைகளை நடத்தி முடிக்க காரணமாக இருந்த மாவட்டச் செயலாளர்கள், கருத்துரையாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு இந்தக் கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.
தீர்மானம் : 7
மக்கள் பணிகளைத் தொடர்வோம்!
இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடெங்கும் மரக்கன்றுகள் – பனைவிதைகள் நடுதல், சுற்றுச்சூழல் காக்கத் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுதல், தனியார் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்துதல், இரத்ததான முகாம்கள், தேவையுள்ளோருக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவிகள் வழங்குதல் என மக்கள் பயனடையும் வகையிலும், கழகத்திற்குப் பெருமை சேர்த்திடும் வகையிலும் மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் : 8
மத்திய பணியிடங்களில் தமிழர்க்கு முன்னுரிமை!
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், அஞ்சல் துறை, நெய்வேலி அனல் மின் நிலையம், கல்பாக்கம் அணு மின் நிலையம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அரசு பணிகளை, தமிழருக்கே வழங்க வேண்டுமெனவும் இளைஞர் அணியின் இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.
தீர்மானம் : 9
முகமூடி அரசியலுக்கு முடிவுரை!
நீதியை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை, தங்களின் கொடுங்கரங்களாக மாற்றி, எதிர்த்து குரல் கொடுக்கும் இயக்கங்கள், எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் மீது ஏவும் சட்ட விரோத பழிவாங்கும் போக்கைக் கையாண்டு அரசியல் லாபம் அடையத் துடிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் கோழைத்தனமான போக்கை இளைஞர் அணியின் மாவட்ட – மாநில – மாநகர அமைப்பாளர்கள் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் : 10
மோடியின் முதலைக் கண்ணீருக்குக் கண்டனம்!
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், எதிர்க்கட்சிகளின் கூட்டணியை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. சர்வாதிகாரப் போக்கில், மணிப்பூரில் கலவரத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் பிரதமருக்கும், அவர் தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசுக்கும் இளைஞர் அணியின் இக்கூட்டம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்து கொள்கிறது.
தீர்மானம் : 11
`இந்தியா’வுக்கு வாழ்த்து!
முதல்வர் ஸ்டாலின் முன்னெடுப்பில் அமைக்கப்பட்டுள்ள ‘இந்தியா’ (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்க கூட்டணி) “Indian National Developmental Inclusive Alliance (I.N.D.I.A)” கூட்டணிக்கும், ஜனநாயகம் காக்கக் களமாடி வரும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இளைஞர் அணியின் இந்த மாவட்ட அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவித்து, கூட்டணியின் வெற்றிக்கு உழைக்க உறுதியேற்கிறது.
தீர்மானம் : 12
தலைவர் தலைமையில் தயாராவோம்!
2024 மக்களவைத் தேர்தல் பணிகளில் இளைஞர் அணியினர் ஒவ்வொருவரும் முழுமூச்சாக தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் : 13
இளைஞர் அணி மாநாட்டு அனுமதிக்கு நன்றி!
இளைஞர் அணியின் மீது நம்பிக்கை வைத்து, இந்த வாய்ப்பை வழங்கியுள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இளைஞர் அணியின் மாவட்ட – மாநில – மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
செல்வம்