திமுக இளைஞரணி மாநாடு தேதி அறிவிப்பு!
இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு வரும் ஜனவரி 21-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெறும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் டிசம்பர் 4,5 ஆகிய தேதிகளில் பெய்த கன மழை காரணமாக, இளைஞரணி மாநாடு டிசம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மாநாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், டிசம்பர் 17-ஆம் தேதி இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சேலம் பெத்தநாயக்கன் பாளையம் மாநாட்டு திடலுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்தசூழலில் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக கடுமையான சேதம் ஏற்பட்டது. இதனால் திமுக இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணி மாநாடு ஜனவரி 21ஆம் தேதி நடத்த திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக நேற்றே மின்னம்பலத்தில், ஜனவரி 21ல் திமுக இளைஞரணி மாநாடு? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு ஜனவரி 21-ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் என திமுக இன்று (ஜனவரி 6) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொங்கல் பரிசு தொகுப்பு: டோக்கன் விநியோகம் எப்போது?
ED அதிகாரிகள் மீது தாக்குதல்: திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கைது!