திமுக இளைஞரணி செயலியைத் தொடங்கி வைத்து திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
திமுகவின் இளைஞரணி மற்றும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை இன்று (ஜனவரி 14) அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி. ஆர். பாலு, அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது, “உதயநிதியின் தந்தையாக இருந்து மகிழ்ச்சி அடைகிறேன், தலைவனாக இருந்து பெருமைப்படுகிறேன்.
உதயநிதி பேசும்போது ‘நான் இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்று மூன்று வருடங்கள் ஆனது. ஆனால் தலைவரை ஒரு நிகழ்ச்சிக்கும் நான் கூப்பிடவில்லை” என்று சொன்னார். அது ஏன் என்று எனக்கும் தெரியவில்லை.
ஆனால், நான் ஒவ்வொரு நாளும் உதயநிதியை கண்காணித்துக் கொண்டிருக்கிறேன். டிவி, ஊடகங்கள், பத்திரிக்கை செய்திகள் மூலமாக. சமூக ஊடகங்களில் நல்ல செய்தியும் வருகிறது. கேலி விமர்சனங்கள் செய்வது போன்ற செய்திகளும் வருகிறது.
திமுகவில் பல்வேறு அணிகள் இருக்கின்றன. ஆனால் நான் இளைஞரணி செயலாளராக இருக்கும் போது ‘நம்முடைய அணி தான் முதலில் இருக்கிறது’ என்று சொல்லிக் கொண்டிருப்பேன். தற்போதும் இளைஞரணி முதலிடத்தில் இருப்பது பாராட்டிற்குரியது.
உதயநிதி இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்றுப் பல பணிகளைச் செய்துள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஊராட்சித் தேர்தல் நடைபெற்றது.
அப்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது உதயநிதி, கிராமங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெற்றிக்கு உதவினார் என்பதோடு, மக்களுக்கு, கட்சி தொண்டர்களுக்கு, கட்சி அமைப்பிற்கு ஒரு எழுச்சியை ஏற்படுத்தித் தந்தார் என்பதை மறுக்க முடியாது.
தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு செங்கல் தான். அது எந்தளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.
எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்தில் ஆளும்கட்சிச் செய்ய வேண்டிய, நீர் நிலைகளை தூர்வாரும் பணியை இளைஞரணி தோழர்களுக்கு அறிக்கை மூலம் உத்தரவிட்டார்.
கொரோனா தொற்று நோயின் போதும் ஆளும்கட்சி செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம், எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு நாம் செய்தோம். ஒன்றிணைவோம் வா என்ற தலைப்பு மூலம் மக்களுக்குப் பல நலத்திட்ட உதவிகளைச் செய்தோம். இந்த செயலிலும் இளைஞரணி செயலாளராக இருந்த உதயநிதி அறிக்கை வெளியிட்டு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டார்.
தொடர்ந்து என்னுடைய உத்தரவின் படி இந்தி திணிப்பிற்கு எதிராக இளைஞர் அணியும் மாணவர் அணியும் இணைந்து போராட்டங்களை நடத்தினார்கள். நீட் தேர்வு ரத்து மற்றும் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டங்களிலும் கலந்து கொண்டார்கள்.
இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், இந்த 3 வருடங்களில் இளைஞரணி பல செயல்களைச் செய்துள்ளது என்று நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இளைஞர் அணியில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 10 ஆயிரம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று செயலாளர் பெயரில் அறிக்கை வந்ததைத் தொடர்ந்து தற்போது 25 லட்சத்திற்கும் அதிகமான புதிய உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், சென்னை மாநகராட்சியின் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை அமைத்து சாதனை செய்திருக்கிறார்.
மாவட்ட வாரியாக நடந்து வந்த திராவிட மாடல் பயிற்சி பாசறை இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்ற உதயநிதியால் தற்போது 234 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறுகிறது.
இன்றைய இளைஞர்கள் திராவிட மாடல் என்று முழங்குவதை விட 100 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு எப்படி இருந்தது என்ற வரலாறுகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.” என்று பேசினார்.
மோனிஷா
அரசியல் தலைவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இளம்பெண்கள் சப்ளை: பாலியல் தொழில் மன்னன் கைது!
”தமிழ்நாடு” ஆளுநரின் பொங்கல் வாழ்த்து!