திமுக இளைஞரணி மாநாடு : சேலத்தில் போக்குவரத்து மாற்றம் – தவிக்கும் பயணிகள்!

Published On:

| By Kavi

DMK Youth Conference Traffic change in Salem

DMK Youth Conference Traffic change in Salem

திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கள்ளக்குறிச்சி முதல் சேலம் வரையிலான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாளை (ஜனவரி 21) சேலம் மாவட்டம் பெத்தநாயகன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாடு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று இரவு முதலே சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திமுகவினர், கூட்டணி கட்சியினர் என பலரும் வரத் தொடங்கியுள்ளனர்.

இதனால் சேலம் வழித்தடத்தில் மாநாட்டுக்கான வாகனங்கள் குவிந்து வருகின்றன. இதன் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சேலம் வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை (ஜனவரி 21) உளுந்தூர்பேட்டை வழியாக சேலம், கோவை, கேரளா செல்லும் வாகனங்கள் உளுந்தூர்பேட்டையில் இருந்து பெரம்பலூர், துறையூர், முசிறி, நாமக்கல் வழியாக சேலத்துக்கும்,

உளுந்தூர்பேட்டையில் இருந்து பெரம்பலூர், துறையூர், முசிறி, குளித்தலை, கரூர் வழியாக கோவை, கேரளாவுக்கும் செல்லலாம்.

கோவை மார்க்கத்தில் இருந்து சேலம் வழியாக சென்னை அல்லது கர்நாடகா செல்லும் வாகனங்கள், ஈரோடு மாவட்டம் லட்சுமி நகர் (பவானி பைபாஸ்), பவானி, அம்மாப்பேட்டை, மேட்டூர், மேச்சேரி, தொப்பூர், தருமபுரி வழியாக செல்லலாம்.

தருமபுரி மார்க்கத்திலிருந்து, சேலம் வழியாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் தொப்பூர் பிரிவு, மேச்சேரி, ஓமலூர், தாரமங்கலம், கொங்கணாபுரம், சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி, கரூர் வழியாகவும்,

தருமபுரி மார்க்கத்திலிருந்து ஈரோடு, கோவை, கேரளா செல்லும் வாகனங்கள் தொப்பூர் பிரிவு, மேச்சேரி, மேட்டூர், அம்மாப்பேட்டை பவானி, பெருந்துறை வழியாகவும் செல்லலாம்.

தென் மாவட்டங்களில் இருந்து நாமக்கல் வழியாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,கர்நாடகா செல்லும் வாகனங்கள் நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி, கொங்கணாபுரம், தாரமங்கலம், ஓமலூர், மேச்சேரி, தொப்பூர் வழியாக செல்லலாம்.

வாணியம்பாடி, திருப்பத்தூர், ஊத்தங்கரை அரூர் வழியாக சேலம் வரும் வாகனங்கள் வாணியம்பாடியில் இருந்து நாட்றாம்பள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக செல்லலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள்

இதுபோன்று ஆம்னி பேருந்துகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னையிலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி வழியாக சேலம் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளை வழிமாற்றி காஞ்சிபுரம், வேலூர் வழியாக சேலம் செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து சில ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் தரப்பில், ‘விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பணம் வசூலித்துவிட்டோம், திடீரென போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ரூட் மாற்றி போக சொல்கிறார்கள், இப்படி போனால் டீசல் செலவு கட்டுப்படியாகாது, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர் டிக்கெட் வாங்கியவர்களை இறக்கிவிடவும் முடியாது. அதனால் பேருந்து சேவையை ரத்து செய்துவிட்டதாக கூறுகிறார்கள்.

ஒரு சில ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து ஏறியவர்களை இறக்கிவிட்டுவிட்டு, விழுப்புரம் கள்ளக்குறிச்சி சேலம் போகக்கூடியவர்கள் கிளாம்பாக்கம் சென்று அரசு பேருந்துகளில் செல்லுங்கள். நீங்கள் முன்பதிவுக்காக செலுத்திய பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கே வந்துவிடும் என்று கூறி இறக்கிவிட்டுள்ளனர்.

இதனால் ஆம்னி பேருந்துகளில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தலைவாசல், ஆத்தூர், சேலம் டிக்கெட் வாங்கியவர்கள் வேறு வழியில்லாமல் கிளாம்பாக்கம் சென்று அரசு பேருந்துகளில் சேலம் செல்லலாமென்றால் ‘கள்ளக்குறிச்சி வரையில்தான் பேருந்து போகும், சேலம் போகாது. அங்கு ஓவர் டிராஃபிக்” என்று இறக்கிவிடுவதாகவும் பயணிகள் கூறுகின்றனர்.

அரசு பேருந்துகளில் ஏறினாலும் சேலம் போகாது என்று சொல்வதால், பயணிகள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதுதவிர, ஆத்தூர் முதல் சேலம் செல்லக் கூடிய உள்ளூர் பேருந்துகளும் மாற்றிவிடப்பட்டுள்ளன.

ஆத்தூரில் இருந்து நரசிங்கபுரம், புத்தரகவுண்டன்பாளையம், பெத்தநாயகன்பாளையம், பெரிய கிருஷ்ணாபுரம் வழியாக சேலம் செல்லக் கூடிய பேருந்துகள் மாற்று வழியில் விடப்பட்டுள்ளன.

நரசிங்கபுரத்தில் இருந்து மல்லியகரை, திம்மநாயக்கன்பட்டி வழியாக வாழப்பாடி சென்று அங்கிருந்து சேலம் செல்கின்றன.

இந்த போக்குவரத்து மாற்றத்தால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா, வணங்காமுடி

ராஷ்மிகா மந்தனா Deep Fake வீடியோ… முக்கிய குற்றவாளி கைது!

அக்னி தீர்த்த கடலில் நீராடிய பிரதமர் மோடி

DMK Youth Conference Traffic change in Salem

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share