இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணி மாநாடு வரும் ஜனவரி 21ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. DMK Youth Conference on January 21
திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு சேலத்தில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
முதலில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி மாநாடு நடத்த திட்டமிட்டு அதற்கான அழைப்பிதழ்களை இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கொடுத்து வந்தார்.
ஆனால் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபட்டார் உதயநிதி. இந்தச்சூழலில் டிசம்பர் 17 அன்று நடைபெறவிருந்த மாநாடு டிசம்பர் 24க்கு ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பெருமழையால் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறவிருந்த இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது..
அடுத்து எப்போது மாநாடு தேதி அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில் இதுதொடர்பாக, இளைஞரணி நிர்வாகிகள் தரப்பில் விசாரித்தோம்.
“கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கத்துடன் 9 லட்சம் சதுரடியில் திமுக இளைஞர் அணி மாநாடு நடத்தச் சேலம் பெத்தநாயகன்பாளையத்தில் பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மாநாடு பந்தல் தயார் நிலையிலிருந்து வருகிறது.
மாநாடு தேதி இரண்டு முறை தள்ளிப்போனதால் புத்தாண்டில் ஜனவரி 21 ஆம் தேதி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திட இளைஞர் அணி மாவட்ட, மாநில நிர்வாகிகளுக்கு அன்பகத்திலிருந்து உத்தரவு பறந்துள்ளது.
ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் மாநாட்டுக்காக இளைஞர்களை திரட்டுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக தேதி அறிவிக்கப்படும்” என்கிறார்கள் இளைஞர் அணி நிர்வாகிகள்.
அதுபோன்று இளைஞரணி மாநாட்டுக்கான தேதி குறித்து தலைவர் முடிவு செய்வார். இரண்டு, மூன்று நாட்களில் தேதி அறிவிக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வணங்காமுடி
ஸ்டிரைக் முடிவு தொடரும் : போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை!
ரூபாய் 15 கோடி நஷ்டம்: நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தோனி
DMK Youth Conference on January 21