திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் 12 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு ஒருமனதாக இன்று (டிசம்பர் 22) நிறைவேற்றப்பட்டது.
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டுள்ளனர். மேலும் 800க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தின் முதல் நிகழ்வாக 12 தீர்மானங்கள் திமுக செய்தித்தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவனால் வாசிக்கப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதன்படி,
????அண்ணல் அம்பேத்கரை தரம் தாழ்ந்து, அவதூறாகப் பேசி- அவரது தியாகத்தை இழிவுபடுத்தியிருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
????ஃபெஞ்சல் புயலில் சிறப்பாக செயல்பட்ட தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம்.
????ஃபெஞ்சல் புயல் வெள்ள நிவாரணமாக ரூ.2,000 கோடி நிதி வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம்.
???? பேரிடர் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காமல் – தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதற்கு செயற்குழு கண்டனம். பேரிடர் நிதி என்பது பா.ஜ.க.வின் கட்சி நிதி அல்ல என்பதை மனதில் நிலைநிறுத்தி – இயற்கை சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான மாநில அரசு கேட்கும் பேரிடர் நிதியை விரைவில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிட வலியுறுத்தி தீர்மானம்.
???? டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல சட்டத்தை ஆதரித்த அதிமுகவும், மாநில உரிமைகளைப் பறிக்கும் அப்படியொரு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்றி டங்ஸ்டன் கனிம ஏலம் விட்ட ஒன்றிய பா.ஜ.க. அரசும் போடும் கபடநாடகத்திற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
???? “டங்ஸ்டன் கனிமத்தை ஏலம் விடும் உரிமையை எடுத்துக்கொண்ட ஒன்றிய பா.ஜ.க. அரசும்”, “அப்படி பறித்துக்கொள்ள வாக்களித்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்த அதிமுகவும்” கைகோத்துக் கொண்டு உருவாக்கிய டங்ஸ்டன் பிரச்சினையை மறைத்து கபட நாடகம் போடும் அதிமுகவிற்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் கண்டனத்தை தெரிவித்து தீர்மானம்.
????காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு திமுக இரங்கல் தீர்மானம்.
???? ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தீர்மானம்.
????பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதிசமத்துவத்தைக் குறளாகத் தந்த அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழா ஆண்டினை பெருமிதத்துடன் கொண்டாடுவோம். அய்யன் வள்ளுவரின் சிலையின் வெள்ளிவிழாச் சிறப்பைப் பெருமிதத்துடன் வெளிப்படுத்தும் வகையில் டிசம்பர் 30, 31 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் உலகப் பொதுமறை தந்த அய்யன் திருவள்ளுவர் சிலையை ‘பேரறிவுச் சிலை’யாக (StatueOfWisdom ) போற்றிடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னெடுத்து, சமத்துவத்தை நிலைநாட்டுவோம் என தீர்மானம்.
????குலத்தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாது என தீர்மானம்.
????தமிழர் பண்பாட்டிற்கு உரிய கலை, இசை, பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த தீர்மானம்.
????2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற இன்றே புறப்படுவீர். திமுக அரசின் சாதனைகளை போர்ப் பரணி பாட வேண்டும் என தீர்மானம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திமுக பொதுக்குழு கூட்டம் எங்கே?
பாஜக நிர்வாகி கொலை… திமுக ஊராட்சி மன்ற தலைவர் கைது : அண்ணாமலை கண்டனம்!