வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாட்டில் நடந்து வரும் மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டங்களின் புகைப்படங்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்த படியே வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அமெரிக்காவில் இருக்கிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் செய்யப்பட்ட அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவின் பொது உறுப்பினர் கூட்டங்கள் நடந்து வருகின்றன. மாவட்ட அளவிலான பொது உறுப்பினர் கூட்டங்கள் நடத்தி முடித்த பின் ஒன்றிய அளவிலான பேரூர் அளவிலான பொது உறுப்பினர் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
சட்டமன்றத் தேர்தல் நெருங்குகிற நிலையில் திமுகவில், மாவட்டச் செயலாளர் முதல் கிளைச் செயலாளர் வரையிலான அனைத்து நிர்வாகிகளிடையிலும், உறுப்பினர்களிடையிலும் ஒருங்கிணைப்பு வரவேண்டும் என்பதற்காகவும்… திமுக உறுப்பினர்களின் குரல்கள், கோரிக்கைகள், பிரச்சினைகளை மாவட்ட செயலாளர்கள் எதிர்கொண்டு அவற்றுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும் இந்த பொது உறுப்பினர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் மாவட்ட செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தலைமையில் பொது உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மயிலாடுதுறை முன்னாள் திமுக எம்பி திருவிடைமருதூர் ராமலிங்கம், ‘ சமீப காலமாக காங்கிரஸ் கட்சியில் கூட்டணி ஆட்சி என்ற குரல்கள் அதிகரித்து வருகின்றன, 2026 இல் ஆட்சியில் நாமும் பங்கு பெற வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் போன்றோர் பேசி வருகிறார்கள். அப்படி என்றால் அதற்கு என்ன அர்த்தம்? வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்கக் கூடாது என்பது தானே அர்த்தம்? இப்படிப்பட்ட கூட்டணியில் போட்டியிடுவதை விட நாம் தனித்து போட்டியிடலாமே?’ என்ற ரீதியில் பேச மாவட்ட பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொண்டஅனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து ஆதரவு தெரிவித்தனர்.
இவர் போட்டியிட்ட தொகுதியில் காங்கிரஸுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதால் இப்படி பேசுகிறாரா என்று மயிலாடுதுறை திமுகவினரிடையே கேட்டபோது, ‘மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதில் அவருக்கு எந்த அதிருப்தியும் இல்லை. வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பே வேலை செய்யத் தொடங்கி, வாக்கு எண்ணிக்கை தினம் வரை தேர்தல் பணியாற்றியவர் ராமலிங்கம். ஆனபோதும் இப்போது காங்கிரஸ் நிர்வாகிகள் பேசிவருவது பொறுக்காமல்தான் தன் கருத்தை வெளிப்படுத்தினார்’ என்கிறார்கள்,
இதேபோல மற்ற மாவட்ட பொது உறுப்பினர் கூட்டங்களிலும் திமுகவின் பல ஒன்றிய செயலாளர்கள், தற்போது கூட்டணி கட்சியினர் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கும் தொகுதிகளில் வருகிற தேர்தலில் திமுகவே போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இது மட்டும் அல்லாமல், திமுக நிர்வாகிகளுக்கு இடையிலான உட்கட்சிப் பூசலும் இந்த பொதுக்குழு உறுப்பினர் கூட்டங்களில் பல இடங்களில் பகிரங்கமாக எதிரொலித்து வருகிறது.
லேட்டஸ்டாக இன்று ஆகஸ்ட் 29ஆம் தேதி திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டம் கட்சியின் முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான நேரு தலைமையில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ‘ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்’ என்றெல்லாம் புகார் குரல்கள் எழுந்தன.
நிறைவாக பேசிய அமைச்சர் கே என் நேரு, ‘முப்பது வருஷத்துக்கு முன்னாடி இருந்த பிரச்சனை இப்பவும் இருக்கு. அதெல்லாம் தலைமை பார்த்துக் கொள்ளும். 2026 சட்டமன்றத் தேர்தலில் தலைமை யார் வேட்பாளர் என முடிவெடுத்து அறிவிக்கிறார்களோ அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டியது நமது பொறுப்பு’ என்று சொல்லி கூட்டத்தை முடித்திருக்கிறார்.
இவ்வாறு திமுக பொது உறுப்பினர் கூட்டங்களில் உட்கட்சி விவகாரங்களும் கூட்டணி விவகாரங்களும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நைட்டு நடந்தா நாய் கடிக்கும்ல : அப்டேட் குமாரு
”தலைவருடன் நடிக்க காத்திருக்கிறேன்” : நாகார்ஜூனா ஹேப்பி!