மணிப்பூர் கொடூரத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மகளிரணியினர் இன்று (ஜூலை 24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் இரு சமூகங்களுக்கு இடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக கலவரம் தொடங்கிய நிலையில் கடந்த மே 4 ஆம் தேதி இரு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.
நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வீடியோவிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் வேண்டுமென்றும், மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமென்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் மக்களவை எம்.பியுமான கனிமொழி தலைமையில் திமுக மகளிரணி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களில் திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் ஊட்டியில் மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
சேலத்தில் முன்னாள் எம்.பி. டி.எம்.செல்வகணபதி தலைமையில் திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு, கோவை, தேனி, திருப்பத்தூர், புதுக்கோட்டை, இராணிப்பேட்டை, திருவள்ளூர், அரக்கோணம், திருப்பூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது மோடி மற்றும் மணிப்பூர் அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஏராளமான மகளிர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பெண் வன்கொடுமைக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினர்.
மோனிஷா
கொடநாடு வழக்கு : ஓபிஎஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் டிடிவி
’கலவரத்தில் மாநில அரசும் ஈடுபட்டது’: மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ புகாரால் பரபரப்பு!