திமுக பொதுக்குழு முடிந்து ஒரு மாதம் இரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இளைஞர் அணி, மகளிர் அணி ஆகிய அணிகளுக்கான புதிய நிர்வாகிகள் இன்று (நவம்பர் 23) அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், மகளிரணித் தலைவராக விஜயா தாயன்பன், மகளிரணிச் செயலாளராக ஹெலன் டேவிட்சன், இணைச் செயலாளராக குமரி விஜயகுமார், துணைச் செயலாளராக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
திமுகவின் மகளிரணிச் செயலாளராக இருந்த கனிமொழி எம்.பி. கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூடியபோது, கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். திமுகவின் தலைமைக் கழக நிகழ்ச்சிகள் உட்பட கட்சியின் எந்த நிகழ்ச்சிகளிலும் மேடையில் அமரக் கூடிய அளவு உயர்த்தப்பட்டார் கனிமொழி.
அப்போதே கனிமொழி துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டாலும் அவரிடம் இருக்கும் மகளிரணிச் செயலாளர் பதவி தொடரும், அந்த உத்தரவாதத்தின் பேரில்தான் அவர் துணைப் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டிருக்கிறார் என்று மகளிரணி நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசப்பட்டது.
துணைப் பொதுச் செயலாளர் என்றால் அந்த பதவியில் கௌரவம் இருக்கிறதே தவிர பெரிய அளவு அதிகாரம் இல்லை. ஆனால் அணிச் செயலாளர் என்றால் அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகளை நியமிக்கலாம். எனவே அணிச் செயலாளர் என்ற அனைத்து மாவட்டங்களிலும் அதிகாரம் மிக்க பதவியை கனிமொழி இழக்க விரும்பமாட்டார் என்று மகளிரணியினரே கூறினார்கள்.
ஆனால் இன்றைக்கு (நவம்பர் 23) பொதுச் செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு பதிலாக ஹெலன் டேவிட்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தபோது, “கனிமொழியிடமே மகளிரணி பதவி இருக்க வேண்டும் என்று மகளிரணி நிர்வாகிகள் விரும்பினார்கள். ஆனால் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற வகையில் தன்னிடம் இருக்கும் மகளிரணிச் செயலாளர் பதவியை விட்டுக் கொடுக்கவே கனிமொழி விரும்பினார். அதேநேரம் இப்போது நியமிக்கப்பட்டிருக்கும் மகளிரணி நிர்வாகிகளில் பெரும்பாலானோர் கனிமொழி தலைமைக்கு அனுப்பிய பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள்தான். விஜயா தாயன்பன், ஹெலன் டேவிட்சன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எல்லாமே கனிமொழிக்கு மிகவும் வேண்டியவர்கள். எனவே கனிமொழியிடம் இருந்து மகளிரணிச் செயலாளர் பதவி அவரது ஆதரவாளர்களிடம்தான் கொடுக்கப்பட்டுள்ளது” என்கிறார்கள்.
–வேந்தன்
டி10 லீக் : கிரிக்கெட் களத்தில் மீண்டும் சுரேஷ் ரெய்னா
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குளிர்கால கூட்டத்தொடர்?