”ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்” என திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த மாதம் காலமானார்.
தொடர்ந்து அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இடைத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று (ஜனவரி 17) காலை 10 மணியளவில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரக்குமாரும் இன்று பிற்பகலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவருடன் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ், மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் ஆகியோர் உடனிருந்தனர்.

200% வெற்றி பெறும்!
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் ஆசியோடும், அமைச்சர் முத்துசாமியின் வழிகாட்டுதலோடும் நான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்.
இந்த இடைத்தேர்தல் வந்திருக்கவே கூடாத தேர்தல். திருமகன் ஈவெரா, ஈவிகேஎஸ் இளங்கோவனும் மக்களால் 5 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் காலமானார்கள். அவர்கள் விட்டு சென்ற பணியை நான் தொடர்ந்து நிறைவேற்ற எனக்கு வாக்களித்துள்ளார்கள்.
திராவிட மாடல் அரசின் மக்கள் நல திட்டங்களை முன்னிறுத்தியே இத்தேர்தலை சந்திக்கின்றோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக 200% வெற்றி பெறும் என பொதுமக்கள் சொல்கின்றனர். அதன்படி இந்த தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்” என வி.சி.சந்திரக்குமார் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எம்.ஜி.ஆர் சிலைக்கு அமமுகவினர் போட்ட மாலையை அகற்றிய அதிமுகவினர்: என்ன நடந்தது?