”போலீசுக்கே இந்த நிலையா”?: டிடிவி தினகரன்

அரசியல்

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் காவலர் கதறி அழுதும் மனமிறங்காத வக்கிர புத்தி கொண்டவர்களாக ஆளும் தி.மு.க.வினர் நடந்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திமுக சார்பில் நேற்று முன் தினம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கனிமொழி எம்.பி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி. மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் போது 129 ஆவது வட்ட இளைஞர் அணியை சேர்ந்த இரண்டு திமுகவினர் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலரிடம் அத்து மீறி நடந்து கொண்டனர்.

உடனே பாதிக்கப்பட்ட பெண் காவலர் கதறி அழவும், அந்த இரண்டு பேரையும் மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்ய முயன்றனர்.

இதனையடுத்து பொதுக்கூட்டத்திற்கு வந்த கட்சியினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இறுதியாக பெண் காவலரை சமாதானம் செய்த எம்.எல்.ஏ பிரபாகர ராஜா அத்துமீறிய கட்சியைச் சேர்ந்த இரண்டு பேரையும் எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தினைத் தொடர்ந்து எதிர்கட்சிகளைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பெண் காவலருக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் தி.மு.க பொதுக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அளித்த பெண் காவலருக்கு அக்கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகியிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

பாலியல் தொல்லைக்கு ஆளான பெண் காவலர் கதறி அழுதும் மனமிறங்காத வக்கிர புத்தி கொண்டவர்களாக ஆளும் தி.மு.க.வினர் நடந்து கொண்டதாகவும், அவர்களைக் கைது செய்யவிடாமல் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் தடுத்து நிறுத்தியதாகவும் வரும் செய்திகள் மேலும் அதிர்ச்சியளிக்கிறது.

எந்தக் காலத்திலும் தி.மு.க.வினர் திருந்தவே மாட்டார்கள் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் உதாரணம். காவல்துறையினருக்கே இந்த கதி என்றால், மற்ற பெண்களின் நிலை என்ன ஆகும்?

இதற்கு தி.மு.க.வின் தலைவரும், இளைஞர் அணி செயலாளரும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

சுருட்டிய பணம் எங்கே? மிரட்டிய மாஜி அமைச்சர் குடும்பத்தினர் மீது வழக்கு!

பணமதிப்பழிப்பு தீர்ப்பு : மத்திய அரசுக்கு விழுந்த அடி – காங்கிரஸ்!

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *