டெல்லி அரசுக்கு எதிரான மத்திய அரசின் சட்டத்தை திமுக நிச்சயம் எதிர்க்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லி அரசின் ஏ பிரிவு அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல் விவகாரத்தில் பரிந்துரை செய்வதற்கான அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பறிக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது.
மாநில அரசுக்குத் தான் அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், இந்த அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்த அவசர சட்டத்துக்கு மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சியினரை சந்தித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கேட்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று (ஜூன் 1) டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் சென்னை வந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பை தொடர்ந்து மூன்று மாநில முதல்வர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்,
“கெஜ்ரிவால் ஒரு நல்ல நண்பர். டெல்லி யூனியன் பிரதேச முதல்வருக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மக்களால் தேர்தெடுக்கப்படும் அரசை சுந்தந்திரமாக செயல்பட விடாமல் நெருக்கடிகளை கொடுத்துக்கொண்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் டெல்லி துணை நிலை ஆளுநர் மூலம் பல்வேறு தொல்லைகள் கொடுக்கப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு டெல்லி மாநிலத்துக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆனால் ஒன்றிய பாஜக ஒரு அவசர சட்டத்தை பிறப்பித்திருக்கிறது.
இந்த அவசர சட்டத்தை நிச்சயமாக திமுக எதிர்க்கும். இதுதொடர்பாக பஞ்சாப், டெல்லி மாநில முதல்வர்கள் என்னுடன் கலந்து பேசினர்.
மற்ற மாநிலத்தில் இருக்கக்கூடிய முதலமைச்சர்களும், பல்வேறு கட்சி தலைவர்களும் என்னென்ன நினைக்கிறார்கள் என கலந்து பேசினோம்.
எல்லா மாநில முதலமைச்சர்களும், அகில இந்திய அளவில் இருக்கக் கூடிய கட்சித் தலைவர்களும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.
கடந்த வாரமே இந்த சந்திப்பு நடந்திருக்க வேண்டும், வெளிநாட்டில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை. அதனால் வெளிநாட்டு பயணத்தை முடித்துகொண்டு வந்ததும் சந்திக்க நேரம் ஒதுக்கினேன்.
ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வோடு இந்த கூட்டம் நடந்தது. வேறு விவகாரம் பற்றியும் பேசினோம். சூழ்நிலை வரும் போது அதை சொல்கிறோம்” என்றார்.
பிரியா
மு.க.ஸ்டாலினுடன் கெஜ்ரிவால் சந்திப்பு!
ட்வீட்டை டெலிட் செய்தது ஏன்?: மனோ தங்கராஜுக்கு பாஜக கேள்வி!