புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ள நிலையில் திமுகவும் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று தற்போது திறப்பு விழாவிற்கு தயாராக உள்ளது. இதனை வரும் மே 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
மக்கள் பணத்தில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டின் முதல் குடிமகளாக இருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே ஏற்கெனவே அறிக்கைகளும் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்று (மே 23) எம்.பி.க்களுக்கு புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான அழைப்பிதழ் ஆன்லைனில் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனையடுத்து புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கான அழைப்பிதழில் குடியரசுத் தலைவர் பெயர் இடம்பெறாததைச் சுட்டிக்காட்டி அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து திரிணாமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதாதளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகளும் திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன.
இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுகவும் புறக்கணிக்க உள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா இன்று அறிவித்துள்ளார்.
திமுகவுடன் மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளும் இந்நிகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்கேற்பதை புறக்கணித்துள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழா: புறக்கணிக்கும் விசிக