கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தலில் திமுக ஆதரவுடன் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் ஜூன் 23ஆம் தேதி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கவுன்சிலர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் வாக்களிக்க வேண்டும்.
கோவை மாவட்ட ஊராட்சியில் இருந்து 5 உறுப்பினர்கள், பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சியில் இருந்து 13 உறுப்பினர்கள் என மொத்தம் 18 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடைபெற்றது.
இதற்காக 44 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் இருந்து மொத்தம் 822 பேர் வாக்களித்தனர்.
இவர்களில் கோவை மாவட்ட ஊராட்சியில் மட்டும் அதிமுக கவுன்சிலர்கள் 7 பேர், பாஜக கவுன்சிலர்கள் 2 பேர், திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் 8 பேர் என 17 பேர் வாக்களித்தனர்.
நேற்றைய தினம் நடந்த தேர்தலில் கோவை மாவட்ட ஊராட்சியில் இருந்து 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் பாஜகவை சேர்ந்த கோபால்சாமி 15 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதிமுக, பாஜகவில் இருந்து மொத்தம் 9 பேர் மட்டுமே கவுன்சிலர்களாக இருக்கும் நிலையில், கூடுதலாக 6 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் கோபால்சாமி. இதன்மூலம் திமுகவினரும் பாஜகவைச் சேர்ந்த கோபால் சாமிக்கு வாக்களித்திருப்பது தெரியவந்துள்ளது.
கோபால்சாமி பாஜகவை தாண்டி மற்ற கட்சியினரிடமும் நட்பு பாராட்டுவார் என்பதால் அவருக்கும் திமுகவைச் சேர்ந்தவர்களும் வாக்களித்திருக்கின்றனர்.
இதுகுறித்து கோபால்சாமி கூறுகையில், “கோவை மாவட்ட ஊராட்சி வார்டு எண் 8ல் கவுன்சிலராக இருக்கிறேன். மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மட்டுமல்லாது திமுகவைச் சேர்ந்தவர்களும் எனக்கு வாக்களித்திருக்கின்றனர்.
அவர்களுக்கு எனது நன்றி. என்னுடைய நட்பின் காரணமாக கட்சி வித்தியாசம் இல்லாமல் திமுக, கொ.நா.மு.க.வைச் சேர்ந்தவர்களின் ஓட்டுகளும் எனக்கு கிடைத்திருக்கிறது” என்றார்.
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி தற்போது செயல்பட முடியாத அமைச்சராக இருக்கிறார். அமலாக்கத் துறை கைதை தொடர்ந்து நெஞ்சுவாலியால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஜூன் 21 பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டதை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார்.
இந்தசூழலில் கோவை மாவட்ட தி. மு. க வினர் பா. ஜ. க வுக்கு வாக்களித்திருக்கின்றனர். செந்தில் பாலாஜி இருந்திருந்தால் திமுக காரர்கள் பாஜகவுக்கு வாக்களித்திருப்பார்களா? என செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கோவை திமுகவினர் கேள்வி எழுப்புகின்றனர்.
பிரியா
உலகக் கோப்பை கிரிக்கெட்: ஐசிசி அறிவிப்பு!
சிறையிலும் தொடரும் ரவுடியின் அட்ராசிட்டி!