விநாயகர் சதுர்த்தி முடிந்து விநாயகர் சிலை ஊர்வலமும் முடிந்துவிட்ட நிலையிலும், அது தொடர்பான சர்ச்சைகள் ஓயவில்லை.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்று பாஜக தலைவர்கள் ஒருபக்கம் கேட்டுக் கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் திமுகவின் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்டத் தலைவர்கள் விநாயகர் சதுர்த்தியை விமர்சையாகக் கொண்டாடித்தான் இருக்கிறார்கள்.
அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி திமுக நகர செயலாளரும், நகர் மன்ற உறுப்பினரும், நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான சாரதிகுமார் இந்து முன்னணியினர் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி ஏற்பாடு செய்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலந்துகொண்டு, இந்து முன்னணியின் கொடியை பிடித்து அசைத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.
திமுகவினர் கோயிலுக்குப் போவதும் சாமி கும்பிடுவதும் இப்போது வெளிப்படையான இயல்பாகிவிட்டது. ஆனால் இந்து முன்னணியின் கொடியை திமுகவின் நகர செயலாளரே பிடித்து அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வு வாணியம்பாடியில் நடந்தது. இதைப் பார்த்து திமுக நிர்வாகிகள் பலர் அதிர்ந்து போய் இந்தப் புகைப்படங்களை வாட்ஸ் அப்பில் தலைமை வரைக்கும் அனுப்பி வைத்துவிட்டனர்.
இது தொடர்பாக நாம் வாணியம்பாடி திமுகவினரிடத்தில் பேசினோம்.
“வாணியம்பாடி முஸ்லிம்கள் நிறைந்த பகுதி. கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் இங்கே அதிமுகவைச் சேர்ந்த செந்தில்குமார் எம்.எல்.ஏ.வாக இருக்கும் நிலையில் இந்து எம்.எல்.ஏ.வாக இருப்பதால் நகர் மன்ற தலைவர் பதவியை முஸ்லிம்களுக்கு தாருங்கள் என்று முஸ்லிம்கள் தரப்பில் கோரிக்கை வைத்தனர்.
ஆனால் பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகனும் வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்தின் ஆதரவாளர் என்பதால் நகர செயலாளர் சாரதி குமார் தன் தாயாரான உமாவுக்கே சேர்மன் பதவியை பெற்றார். அப்போதே திமுகவை தொடர்ந்து ஆதரிக்கும் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு சலசலப்பு இருந்தது.
இந்த நிலையில் வருடா வருடம் பொன்னியம்மன் கோயில் பகுதியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஊர்வலம் நடக்கும், இந்த வருடம் திமுக நகர செயலாளரான சாரதி குமாரை அழைத்துள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ. செந்தில்குமாரையும் அழைத்துள்ளனர்.
இருவரும் அங்கே சென்றனர். திமுக நகர செயலாளரும் திமுக நகர்மன்ற உறுப்பினரும் சேர்மனின் மகனுமான சாரதி குமார், ‘தர்மம் காக்க அதர்மம் அகற்ற’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட இந்து முன்னணி கொடியை அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்துள்ளார்.
இதை சாரதி தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் படங்களோடு பகிர்ந்துள்ளார். இந்த தகவல் லோக்கலில் வாட்ஸ் அப்பில் தீயாகப் பரவி இந்து முன்னணி ஊர்வலத்தில் திமுக நகர செயலாளருக்கு என்ன வேலை? சாமி கும்பிடுவது வேறு, இதுபோன்ற சர்ச்சைகளில் ஈடுபடுவது வேறு என்று திமுக நிர்வாகிகளே கதிர் ஆனந்த் எம்பி, பொதுச் செயலாளர் துரைமுருகன் வரை தகவல் தெரிவித்துவிட்டனர்.
வரும் எம்பி தேர்தலில் மீண்டும் வேலூரில் போட்டியிடத் தயாராகி வரும் கதிர் ஆனந்த் தனது ஆதரவாளரான சாரதி குமாரின் செயல்பாடுகளால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்து முன்னணி கொடியை பிடித்து விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தால் நாளை எப்படி போய் இஸ்லாமிய பகுதிகளில் சாரதிகுமாரை அழைத்துச் சென்று ஓட்டு கேட்க முடியும் என்று, சாரதியின் எதிர்கோஷ்டியினர் கதிர் ஆனந்திடமே கேட்டுள்ளனர்.
இதையடுத்து ஒரு திருமண விழாவுக்கு வந்த துரைமுருகனும், கதிர் ஆனந்தும் இதுபற்றி சாரதிகுமாரிடம் விளக்கம் கேட்டதாகவும் தகவல். மேலும் இந்த போட்டோக்கள் அறிவாலயம் வரை சென்றுவிட்டன.
துரைமுருகனின், கதிர் ஆனந்தின் தீவிர ஆதரவாளர் என்பதால் சாரதிகுமார் மீது தலைமை என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது ” என்றனர் லோக்கல் திமுகவினர்.
இது இந்து முன்னணி கொடி இல்லை… ஆரஞ்சு கொடி- சாரதி குமார்
நாம் இதுபற்றி வாணியம்பாடி திமுக நகர செயலாளர் சாரதிகுமாரிடமே தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம்.
“முதலில் அது இந்து முன்னணி கொடியே இல்லை. விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்த ஆரஞ்சு கலர் கொடி அது” என்றார் சாரதி குமார். (ஆனால் அவர் கையில் ஏந்திய கொடியில் இந்து முன்னணி வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது)
தொடர்ந்து பேசிய சாரதி குமார், “நாங்கள் இங்கே சிறப்பாக மக்கள் பணியாற்றி வருகிறோம். இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்பது அரசியல் லாபத்துக்காக பண்ற விஷயமே இல்லை.
அதில் அரசியல் என்ன இருக்கிறது? அதில் அரசியல் லாபத்துக்கு என்ன இருக்கிறது? நான் வந்தால் அவர்களுக்கு ஒரு திருப்தி ஒரு சந்தோஷம். மரியாதையா என்னை கூப்பிட்டார்கள். ஆயிரம் சிலை வைத்தார்கள். ஒரு பத்து சிலை புறப்படும்போது முன்னே வந்து நில்லுங்கள் என்று சொன்னார்கள்.
பொன்னியம்மன் கோயில் முன்னாடிதான் இங்கே சிலைகளை வைப்பார்கள். இந்த நிகழ்வில் ஒவ்வொரு முறையும் ஆளுங்கட்சியில் இருப்பவரை அழைப்பார்கள். அந்த வகையில் இந்த வருடம் திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் அதன் நகர செயலாளரான என்னை விழாக் குழு சார்பில் அழைத்தார்கள்.
அவ்வளவுதான். இதில் அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சிக்கிறார்கள், அது நடக்காது. இதெல்லாம் மிகச் சிறிய விஷயம். பொதுச் செயலாளர் அளவுக்கெல்லாம் இதைக் கொண்டு செல்ல வேண்டிய தேவையே இல்லையே” என்றார் சாரதி குமார்,
–வேந்தன்
வேலுமணிக்காக ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர்! தமிழக அரசு எதிர்ப்பு!