செப்டம்பர் 15… மதுரையில் அரசு விழா- விருதுநகரில் அரசியல் விழா: ஸ்டாலின் அழைப்பு!

Published On:

| By Prakash

விருதுநகரில் திமுகவின் முப்பெரும் விழா, வரும் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகள் விருதுநகரில் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் உடன்பிறப்புகள் கலந்துகொள்ளும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (செப்டம்பர் 12) எழுதியிருக்கும் கடிதத்தில், “செப்டம்பர் மாதம் பிறந்தாலே கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்கும் சிலிர்ப்பும் புத்துணர்ச்சிப்பெருக்கும் வந்துவிடும்.

ஆம்! இது நமக்கான மாதம்; திராவிடர்க்கான மகத்தான மாதம் என்ற எண்ணம் நம் உணர்வெங்கும் ஊற்றெடுத்து ஓடும். ஈரோட்டுப் பூகம்பம் – பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மாதம், செப்டம்பர் மாதம்தான்.

அவருடைய இலட்சியப் படையின் இணையற்ற தளபதியாக இயங்கிய பேரறிஞர் அண்ணா பிறந்த மாதமும் செப்டம்பர் மாதம்தான்.

தந்தை பெரியாரின் புதுமைக் கருத்துகளையும், புரட்சிகரமான கொள்கைகளையும், அரசியல் களத்தில் அனைவர்க்கும் அறிமுகம் செய்து, அறிவொளி ஏற்றி, அமைதி வழியில் வென்றெடுக்கும் வகையில் பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்ட நம் உயிரினும் மேலான இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்த மாதமும் செப்டம்பர் மாதம்தான்.

அதனால் செப்டம்பர் மாதம் என்பது திராவிட இயக்கத்தின் தனிச் சொந்த மாதம்.

dmk triennial celebration chief minister mkstalin call to activists

கழகம் காத்திட, தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மூத்த முன்னோடிகளை மதித்துப் போற்றும் வகையில், முப்பெரும் விழாவில் தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர்தம் திருப்பெயர்களில் விருதுகள் வழங்கிடும் நிகழ்வை நம் உயிர்நிகர் தலைவர் தொடங்கி வைத்து,

ஆண்டுதோறும் தொடர்ந்து அவற்றை வழங்கி வந்தார். அதன் தொடர்ச்சியாக, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பெயரிலும், நம் இனமானப் பேராசிரியர் பெயரிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இத்தனை சிறப்புமிக்க முப்பெரும் விழா இந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் நாள் பெருமைமிகு விருதுநகரில் நடைபெறுகிறது. விழா ஏற்பாட்டுப் பணிகளை உங்களில் ஒருவனான நானும் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன்.

விழா பிரம்மாண்டமாக அமையும் என்பதில் துளியும் அய்யமில்லை. ஆயிரமாயிரமாய், இலட்சோப லட்சமாய் திரண்டுவரும் உடன்பிறப்புகளாம் உங்களின் வருகையால், கடல் இல்லா விருதையில், பொங்குமாங்கடல் புகுந்ததோ என நினைக்கும் அளவுக்கு முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற உங்களில் ஒருவனான நான், கழகத் தலைவர் என்ற முறையில் அன்புடனும் பாசத்துடனும் அழைக்கிறேன்.

செப்டம்பர் 15, நம் கழகத்தை உருவாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாள். அதனை மனதில் கொண்டு, அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்குகிற மகத்தான புதிய திட்டம் தொடங்கப்பட இருக்கிறது.

கழகத்தின் திராவிட மாடல் அரசு, இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாக காலைச் சிற்றுண்டித் திட்டத்தைத் தொடங்குகிறது. சங்கத் தமிழ் வளர்த்த மாமதுரையில் அதனைத் தொடங்கிவைத்து, அதன்பின் மாலையில் விருதுநகரில் உங்களை சந்திக்கும் விருப்பம் மேலிட ஓடோடி வருவேன். உடன்பிறப்புகளான உங்களையும், உங்களில் ஒருவனான என்னையும் ‘விருதை’ அழைக்கிறது.

dmk triennial celebration chief minister mkstalin call to activists

முப்பெரும் விழாவில் கழகத்தின் மூத்த முன்னோடிகளை மதித்துப் போற்றும் பண்பின் அடிப்படையில் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த ஆண்டு பெரியார் விருது பெறுபவர் மிசா காலத்தில் தன் கணவரை சிறையில் அடைத்தபோதும் கலங்கி நிற்காமல் கழகம் காக்கும் பணியில் ஈடுபட்ட சம்பூர்ணம் சாமிநாதன்.

பதவிப் பொறுப்புகளைவிட கழகக் கொள்கை வழிப் பயணமே இலட்சிய வாழ்வின் அடையாளம் எனச் செயலாற்றும் கோவை இரா.மோகன், அண்ணா விருது பெறவிருக்கிறார்.

உயிர்நிகர் தலைவர் கலைஞரின் கண்ணசைவுக்கேற்பக் களமிறங்கி அயராது கழகப் பணியாற்றி இன்று கழகத்தின் பொருளாளராக இருக்கின்ற டி.ஆர்.பாலு எம்.பி., கலைஞர் விருது பெறவிருக்கிறார்.

அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் கழகத்தினை வளர்ப்பதில் பெரும்பங்காற்றிய புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு, பாவேந்தர் விருது பெறவிருக்கிறார். கழகமே உயிர்மூச்சென வாழும் உடன்பிறப்புகளில் ஒருவரும் தலைமையின் கட்டளையை நிறைவேற்றுவதில் துடிப்புடன் செயலாற்றியவருமான குன்னூர் சீனிவாசன், பேராசிரியர் விருது பெறவிருக்கிறார்.

இந்த இனிய நிகழ்வில், இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில், ஆட்சியியல் இலக்கணத்தைப் படைத்திருக்கும் கழகத்தின் திராவிட மாடல் அரசு பற்றிய எனது எண்ண ஓட்டங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்படவிருக்கிறது.

முத்தாய்ப்பாக, முத்தமிழறிஞர் கலைஞர் முரசொலியில் எழுதிக் குவித்த உடன்பிறப்புகளுக்குக் கடிதங்களின் 54 தொகுதிகள் வெளியிடப்பட இருக்கின்றன. அவருடைய அந்தக் கடிதங்களின் கண்ணசைவில்தானே, கடைக்கோடித் தொண்டனையும், தன் குடும்பத்துடன், முப்பெரும் விழாவுக்கு அழைத்து வந்தது.
‘உடன்பிறப்பே..’ என்று அவர் அழைத்தால், செவிமடுத்துச் செயலாற்றாத தொண்டர்கள் உண்டோ!

எந்த நிலையிலும் அவர் அழைப்பினைத் தட்டாமல், எதையும் எதிர்பாராமல் ஓடோடி வந்த உடன்பிறப்புகளால்தானே, இன்று இந்த இயக்கம், இந்தியாவுக்கு வழிகாட்டும் வகையில் சிறந்தோங்கி விளங்குகிறது! நெருக்கடிகளிலும் சோதனைகளிலும் கழகத்தைக் கட்டிக் காத்த கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளை, உங்களில் ஒருவனாக நானும் அன்புடன் அழைக்கிறேன்.

செப்டம்பர் 15 அன்று விருதை நோக்கி விரைந்து வருக.. வெற்றி வரலாறு படைத்திடுவோம்” என அதில் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.
ஜெ.பிரகாஷ்

தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share