அண்ணா, பெரியாரை வைத்து பிழைக்கிறது திமுக : டிடிவி தினகரன்
பெரியார், அண்ணா, தமிழ், திராவிடம் என்று கூறி திமுக தனது குடும்பத்தை மட்டுமே வளப்படுத்திக் கொள்கிறது, இதனால் மக்களுக்கு பயனில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவில் நடக்கும் அதிகாரப் போட்டி பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. அவர்கள் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இயக்கம், ஒரு சிலரின் ஆணவத்தால் பதவி வெறியால் சுயநலத்தால் படாதபாடுபட்டு கொண்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக மக்களை ஏமாற்றி வருகிறது. திராவிட மாடல் ஆட்சி, மக்களுக்கு வரிச்சுமையை ஏற்றுவதும், மக்களை துன்படுத்துவதும் தான் என்பதை ஸ்டாலின் நிரூபித்து வருகிறார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலிலே மக்கள் இதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
எந்த மொழியையும் எந்த மாநிலத்திலும் திணிப்பது தவறான நடவடிக்கை. குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் விரும்பி எதையும் ஏற்றுக்கொள்வார்கள், ஆனால் திணிப்பதை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும்.
மின்கட்டண உயர்வால் சிறு,குறு தொழில்களும், ஏழை, எளிய மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதை தமிழ்நாடு அரசு திரும்ப பெறவேண்டும்.
ஊழலை ஒழிப்போம் என்றும் ஊழல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஆனால் நீட்டை ரத்து செய்வோம், மாதம் ரூ. 1000 வழங்குவோம் என பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறார்கள் என்பதே மக்களின் சோகக்குரலாக இருக்கிறது.
அண்ணா, பெரியார், திராவிடம், தமிழ் என்ற பெயரை வைத்து திமுக தனது குடும்பத்தை மட்டுமே வளப்படுத்திக் கொள்கிறது.
இதனால் தமிழ்நாட்டுக்கு எந்த வளமும் கிடைத்ததாகத் தெரியவில்லை” என்று விமர்சித்தார்.
கலை.ரா
காலில் கொப்புளம் : ராகுல் யாத்திரைக்கு இன்று ஓய்வு!