கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற திமுகவினர் பணியாற்ற வேண்டும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
224 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவிற்கு வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது.
மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜகவும், ஆட்சியை பிடித்தாக வேண்டும் என்று காங்கிரஸும் தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.
அனல் பறக்கும் பிரச்சாரங்களுடன் கர்நாடக தேர்தல் களம் பரபரப்பாகச் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற பணியாற்ற வேண்டும் என்று திமுக உறுப்பினர்களிடம் பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் இன்று (மே 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகிற 2023 மே 10 அன்று கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனவும்,
கர்நாடக மாநிலக் கழக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: மீண்டும் வென்ற முரளி
’தினமும் பால்’: கர்நாடகா பாஜக தேர்தல் அறிக்கையில் குவிந்த இலவசங்கள்!