தடையை மீறி டெல்லியில் போராட்டம் நடத்த திமுக மாணவரணியினர் திட்டமிட்டுள்ளனர். dmk student wing protest in delhi
கடந்த ஜனவரி 25ஆம் தேதி, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்காக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பல்கலைக் கழகங்களை மாநில அரசிடமிருந்து பறிக்கும் யுஜிசியின் திட்டத்தை முறியடிக்க திமுக மாணவரணி சார்பில் டெல்லியில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் ” என்று அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து கடந்த 30ஆம் தேதி நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி யுஜிசியின் வரைவு நெறிமுறைகளை திரும்ப பெறக்கோரி திமுக மாணவரணி மற்றும் திமுக எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டம் நடத்துவார்கள் என்று தேதி அறிவிக்கப்பட்டது.
அதன்படி தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நாளை காலை 10மணிக்கு திமுக மாணவரணியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
குறுகிய கால இடைவெளியில் டெல்லி போராட்டம் நடத்த திட்டமிட்டதால் ரயிலில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் விமானத்தில் டிக்கெட் புக் செய்தனர். பண வசதி இல்லாதவர்களால் விமானத்தில் டிக்கெட் புக் செய்ய முடியாததால், திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன், திமுக மாவட்ட அமைப்பாளர்களை தொடர்புகொண்டு, “குறுகிய கால இடைவெளியில் டெல்லி செல்கிறோம். இதில் பொருளாதார பிரச்சினை இருந்தால் மாவட்ட செயலாளர்களிடம் கேளுங்கள். தேவைப்பட்டால் நான் வேண்டுமானாலும் பேசுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.
அதன்படி விமானத்தில் செல்வதற்காக மாவட்ட செயலாளர்கள் தான் நிதியுதவி அளித்திருக்கிறார்கள்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்து, நேற்றும், இன்றும் விமானம் மூலம் டெல்லியில் குவிந்து வருகின்றனர் திமுக மாணவரணியினர்.
டெல்லியில் இன்று (பிப்ரவரி 5) சட்டப்பேரவை தேர்தல் நடந்துள்ள நிலையில்… தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. பிப்ரவரி 8 தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் விலக்கி கொள்ளும். இதனால் திமுகவின் போராட்டத்துக்கு டெல்லி காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது, போராட்டம் நடத்துவதற்கோ, அல்லது நிகழ்ச்சி நடத்துவதற்கோ தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று டெல்லி காவல்துறை கூறியுள்ளது.
ஆ.ராசா வீட்டில் ஆலோசனை!

dmk student wing protest in delhi
இந்தநிலையில் மாணவரணி செயலாளர் எழிலரசன், துணை செயலாளர்கள் ஜெரால்டு, மோகன் என 15 பேர் இன்று (பிப்ரவரி 5) மதியம் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய மக்களவை எம்.பி.யுமான திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா வீட்டுக்கு சென்றனர்.
அங்கு மதிய உணவுக்கு பிறகு நடந்த ஆலோசனையில், “திட்டமிட்டப்படி நாளை ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இந்த ஆர்ப்பாட்டத்துக்கும் டெல்லி தேர்தலுக்கும் தொடர்பில்லை. நானும் வந்து கலந்துகொள்கிறேன். அனைத்து எம்.பி.க்களும் வந்துவிடுவார்கள். இதுவரை எத்தனை பேர் டெல்லிக்கு வந்துள்ளீர்கள். இன்னும் எத்தனை பேர் வரவுள்ளார்கள்?” என்று விவரங்களை கேட்டுள்ளார் ஆ.ராசா.
இந்த ஆலோசனையை தொடர்ந்து போராட்டத்துக்கு திமுக மாணவரணியினர் தயாராகி வருகின்றனர். dmk student wing protest in delhi