பொய்யும், புரட்டும் கூறி மலிவான விளம்பரம் தேடக்கூடிய வீணர்களைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் கூறினார்.
திருவண்ணாமலையில் நேற்று கலைஞர் சிலையைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 9) அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவும், உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ரூ.340 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ரூ. 70 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். 1.74 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.693 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும், கலைஞர் நூலகம், மதுரவாயல் துறைமுக உயர்மட்ட சாலை ஆகியவற்றைப் பட்டியலிட்டுப் பேசினார்.
“திருவண்ணாமலையில் இந்து சமய அறநிலையத் துறை மூலம் சிறப்பான பணிகள் செய்யப்பட்டு வருகிறது. அண்ணாமலையார் கோயில் என்பது தமிழகத்தின் சொத்து. அதனைக் கட்டிக் காத்தது திமுக அரசு. கோயிலுக்குத் திருப்பணி செய்வது திராவிட மாடலா என சிலர் கேட்கிறார்கள். அனைத்து துறையும் வளர்ப்பது தான் திராவிட மாடல் என்று கூறி வருகிறேன். திராவிட கழகத்தின் தாய்க்கட்சியான நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் தான் இந்து சமய அறநிலையத் துறை உருவாக்கப்பட்டது. எதற்கு கோவிலை முறைப்படுத்துவதற்காக. ஒரு சட்டம் வேண்டும் என்று ஆன்மீக எண்ணம் கொண்டவர்கள் கேட்டபோது, அதனை உருவாக்கியது தான் நீதிக்கட்சி ஆட்சி.
எது திராவிட மாடல் ஆட்சி என்று பிற்போக்குத்தனங்களோடு, பொய்களைப் பேசுகிறவர்கள் முதலில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆன்மிகத்திற்கு நாங்கள் எதிரிகள் அல்ல. ஆன்மீகத்தின் பெயரால், மனிதர்களை மதத்தால், சாதியால் பிளவுபடுத்துகிறார்களே அவர்களுக்குத் தான் நாங்கள் எதிரி. மனிதர்களைப் பிளவுபடுத்தக்கூடிய கருவிகளாக ஆன்மீகம் இருக்க முடியாது. அதனை வைத்து மக்களைப் பிளவுபடுத்துகிறவர்களும் உண்மையான ஆன்மீக வாதிகளாக இருக்க முடியாது. அவர்கள் ஆன்மீக வியாதிகள்.
அறம் என்றால் என்னவென்றே தெரியாத, அறிவுக்கு ஒவ்வாத மூட நம்பிக்கைகளை முதுகில் வைத்துச் சுமக்கக் கூடிய சிலருக்குப் போலியான பிம்பங்களைக் கட்டமைக்க வேண்டுமானால் உளறல்களும், பொய்களும் தான் தேவை. மக்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு வசதிகள், வேளாண்மை, தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு என தமிழ்நாடும், தமிழினமும் முன்னேறச் சிந்தித்துச் செயல்படுவது தான் திமுக அரசியல் மரபு.
அறிவார்ந்த யாரும் இந்த அரசுக்கு ஆலோசனைகள் சொல்லலாம். அதனை நாங்கள் செயல்படுத்துவோம். நமக்கு ஆக்கப்பூர்வமான பணிகள் காத்து கிடக்கின்றன. இது தேர்தல் காலமல்ல. மக்களுக்கு நன்மை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட காலம். பொய்யும், புரட்டும் கூறி மலிவான விளம்பரம் தேடக்கூடிய வீணர்களைப் பற்றி I dont care. நான் மட்டுமல்ல நீங்கள் ஒவ்வொருவரும் I dont care என்று சொல்லி நகர வேண்டும். இப்படி பொய்களை அநாதையாக விட்டு, உண்மை எனும் வெளிச்சத்தைத் துணையாகக் கொண்டு நடந்தாலே நாம் முன்னேறலாம். நாம் இலக்குகளை அடையலாம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ இங்கு இருக்கிற மக்கள் பிரதிநிதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் நான் சொல்வது காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது என்பதை யாரும் மறக்க வேண்டாம். “கோப்புகள் சிகப்பு நாடாவிலே கட்டப்பட்டு உறங்கி கொண்டிருக்கும் போது, ஊழல் எழுந்து உட்கார்ந்து ஊர்சுற்றக் கிளம்பி விடுகிறது” என்று கலைஞர் குறிப்பிடுவார். அதனை மனதில் கொண்டு மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சித்தலைவர் முதல் கடைநிலை ஊழியன் வரை அனைவரும் கோப்புகள் தேங்கி விடக்கூடாது என்ற எண்ணத்தில் பணியாற்றுங்கள். இதனை உறுதி செய்வதற்காகத் தான், எத்தனை அலுவல்களுக்கு இடையிலும் திடீர் ஆய்வுகளை மேற்கொள்கிறேன் என்றால் இதுதான் காரணம். ஏனென்றால் மக்கள் தான் எஜமானர்கள். இதே திருவண்ணாமலையில், 1957ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில், அண்ணா கூறியது போல, நமக்கு இருவர் தான் எஜமானர்கள். ஒன்று நம் மனசாட்சி, மற்றொன்று நாட்டுமக்கள்.
என்மீது நீங்கள் வைத்திருக்கக் கூடிய நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்” என்று கூறினார்.
– கிறிஸ்டோபர் ஜெமா