பாஜகவைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களைத் தரக்குறைவாக பேசிய திமுக பேச்சாளர், அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 26ஆம் தேதி சென்னை ஆர்.கே. நகரில் மேற்கு பகுதியில் நடைபெற்ற திமுக வின் பொதுக்கூட்டத்தில் திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவை சேர்ந்த பெண் உறுப்பினர்களான குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம் (தற்போது கட்சியிலிருந்து நீக்கம்), கவுதமி ஆகியோர் குறித்து ஒருமையில் தரக்குறைவாக பேசியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது பேச்சுக்கு குஷ்பு உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு திமுக எம்.பி. கனிமொழி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார்.
சைதை சாதிக்கும் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டிருந்தார். இதுகுறித்து அவர் தன்னுடய ட்விட்டர் பதிவில்,
”நான் மேடையில் பேசிய பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டு ஜோடிக்கப்பட்டு வெளி வந்துள்ளது.
இருப்பினும் மரியாதைக்குரிய நடிகை குஷ்பு அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் பதிவிட்டிருந்தார்.
அவரது மன்னிப்பை ஏற்காத குஷ்பு, “தமக்காக முதல்வர் ஸ்டாலின் குரல் கொடுப்பார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகைகள் குறித்து ஆபாசமாகவும், இழிவாகவும் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சைதை சாதிக் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், ஆபாசமாக பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் சைதை சாதிக்கை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணியினர் சென்னையில் கடந்த நவம்பர் 1ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கைதாகி விடுதலையானார்.
பின்னர், ”சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓயப்போவதில்லை” என்று அறிவித்த குஷ்பு, கடந்த நவம்பர் 4ஆம் தேதி, டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்று ஆணைய தலைவி ரேகா ஷர்மிளாவிடம் நேரில் புகார் மனு அளித்தார்.
இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சைதை சாதிக் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று (நவம்பர் 25) விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி,
”பெண்களை பற்றி அவதூறான கருத்துகளை மனுதாரர் பேசியுள்ளார். இனிமேல், இதுபோல பேச மாட்டேன் என்று அவர் பிரமாண மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
அதில், சம்பந்தப்பட்ட நடிகைகளிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதுவரை போலீசார் சைதை சாதிக்கை கைது செய்யக் கூடாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
மெரினா பீச்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை நாளை திறப்பு!