நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் கையெழுத்து ஒரு நாடகம் என்று முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துகள் பெறும் இயக்கம் விளையாட்டுத் துறை அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று தொடங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டு இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (அக்டோபர் 22) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “திமுக நீட் தேர்வு விவகாரத்தில் அரசியல் நாடகத்தை நடத்தி வருகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு பேச்சு பேசுகின்றனர்.
ஒரே கையெழுத்தில் நீட்டை ஒழித்துவிடுவோம் என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தெரிவித்தனர். ஆனால் இன்று மக்களின் கேள்விக்கு பயந்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கியிருக்கின்றனர்.
நீட் தேர்வுக்கு எப்படி விலக்கு பெற போகிறீர்கள் என்று அப்போதே அதிமுக சார்பில் கேட்டோம். அது ரகசியம் என்றார்கள். அப்படியானால் இந்த கையெழுத்து இயக்கம் தான் அந்த ரகசியமா?
நீட் என்பது விஷ விதை என்றால் அது காங்கிரஸ்-திமுக ஆட்சியில் இருந்தபோது கொண்டுவரப்பட்டதுதானே.
நீட், ஜல்லிக்கட்டு ஆகியவற்றில் பாதகம் செய்தது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியுடன் தான் திமுக கைகோர்த்து உள்ளது.
நீட் தேர்வை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியிடம் கையெழுத்து இயக்கத்தின் மூலம் திமுக கையெழுத்து வாங்குமா?
இந்தியா கூட்டணியில் உள்ள 26 கட்சிகளிடமும் திமுக நீட் தேர்விற்கு விலக்கு பெற கையெழுத்து வாங்குமா?
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு மிகப்பெரிய அரசியல் அழுத்தமும், சட்டப் போராட்டமும் நடத்த வேண்டும்.
கையெழுத்து இயக்கம் தொடங்குவதால் எந்த பயனும் இல்லை. திமுகவுடன் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய அரசியல் அழுத்தத்தை கொடுக்கவேண்டும். ஆனால் அதுபோன்று அரசியல் அழுத்தத்தை ஏன் கொடுக்கவில்லை?.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வுக்கு எதிராக நோட்டிஃபிகேஷன் வெளியிட்டார். அதன் காரணமாக ஒரு வருடம் விலக்கு பெற முடிந்தது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது நீட் தேர்வு சட்டமாக கொண்டுவரப்பட்டதால் அதனை தடுக்க முடியவில்லை. அதேசமயம் நீட் தேர்வின் மூலம் ஏற்படும் விளைவுகளை தவிர்ப்பதற்காக ஆக்கப்பூர்வமாக 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாருக்கு எதிராக நீட் தேர்வில் விலக்கு பெற வேண்டும் என கையெழுத்து இயக்கம் நடத்துகிறார். நீட் தேர்வை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியை எதிர்த்தா, நீட் தேர்வை நடைமுறைப்படுத்த உத்தரவிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தா அல்லது நீட் தேர்வு குறித்த சட்டத்திற்கு எதிராகவா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
நீட் தேர்வுக்கு எதிராக வலிமையான சட்ட போராட்டம் மற்றும் மிகப்பெரிய அரசியல் அழுத்தத்தை கொடுக்கும் போது அவர்களுடன் இணைந்து செயல்படவும் தயாராக இருக்கிறாம்.
நீட் தேர்வில் இருந்து நிரந்தர தடை பெற முடியாது பல மாநிலங்களில் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டனர். அதனால் தமிழகத்திற்கு அதிலிருந்து விலக்கு மட்டுமே கேட்க முடியும்” என்று கூறினார்.
பிரியா
SK 21 இயக்குனருக்கு பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ..!
நியூசிலாந்துக்கு எதிரான போட்டி… இந்திய அணிக்கு கிடைத்த குட் நியூஸ்!
காசாவை தொடர்ந்து லெபனான்… போருக்கு தயாராகும் இஸ்ரேல்?